‘பாரதி கண்ணம்மா’, ‘ஈரமான ரோஜாவே’ ஆகிய தொடர்களில் முக்கியமான வேடத்தில் நடித்து வந்த நடிகர் வெங்கடேஷ் நேற்று திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 55.
விருதுநகரைச் சேர்ந்த வெங்கடேஷ் சன் டிவியில் ஒளிபரப்பான ‘செல்லமடி நீ எனக்கு’ தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர். தொடர்ந்து ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் அப்பா வேடத்தில் நடித்தார். அந்தத் தொடர் இவரை ரொம்பவே பிரபலப்படுத்தியது.
தொடர்ந்து சில படங்களிலும் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ரஜினி நடித்த ‘பேட்ட’ படத்திலும் நடித்திருந்தார்.
நேற்று பிற்பகலில் திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறியிருக்கிறார் வெங்கடேஷ். குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனையில் வைத்தே வெங்கடேஷின் உயிர் பிரிந்துள்ளது.
வெங்கடேஷின் திடீர் மரணம் உடன் நடித்த சீரியல் நட்சத்திரங்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
‘’ரெண்டு பசங்க. மகளுக்குத் திருமணமாகிடுச்சு. சினிமா வட்டாரத்துல எல்லாருடனும் நட்பு பாராட்டி வர்றவர். நிறையப் பேருக்கு உதவிகளும் செஞ்சிருக்கார்’’ என்கிறார்கள் வெங்கடேஷ் வீட்டுக்கு நெருக்கமானவர்கள்.
’சரவணன் மீனாட்சி’ தொடரில் அவருடன் நடித்த நடிகர் இர்ஃபானிடம் பேசினேன்.
‘’பழகறதுக்கு நல்ல மனுஷன் சார். சீரியல்ல நான் அவருடைய பொண்ணை லவ் பண்றவனா நடிச்சேன். ஆனா, நம்பறீங்களோ இல்லையோ, ஷூட்டிங் ஸ்பாட்ல நிஜத்துலயே அவர் என்னை மாப்ளனுதான் கூப்பிடுவார்.
நான் சீரியலை விட்டு வெளியேறி சினிமாவுக்குப் போறேன்னு கிளம்பிய போது, கூப்பிட்டு ஒரு மணி நேரமா அட்வைஸ் பண்ணார். ‘சீரியல்ல பீக்ல இருக்கிறப்ப போறய்யா, பாத்துக்க... எனக்குத் தோணுச்சு, சொல்லிட்டேன்’னு சொன்னார். உண்மையான அக்கறையில் இருந்தது அந்த அட்வைஸ். அன்னைக்கு அவருடைய அட்வைஸை நான் கேக்கலை. அது தப்புன்னு இன்னைக்குப் புரியுது. அதேபோல நானும் உரிமையுடன் அவர்கிட்ட ஒரு வேண்டுகோளை வெச்சேன். ஷூட்டிங் ஸ்பாட்ல ஒரு நாளுக்கு மூணு பாக்கெட் சிகரெட்டை காலி பண்ணிட்டிருந்தார். 'இது ரொம்ப அதிகம் சார், குறைச்சுக்கலாமே’னு சொல்லியிருக்கேன். அதை அவரும் கேட்கலைனு நினைக்கிறேன். சிகரெட்டை கொஞ்சமாவது அவர் குறைச்சிருக்கலாம்.
நேற்று தகவல் கிடைச்சதுமே அவருடைய வீட்டுக்குப் போய் அஞ்சலி செலுத்திட்டு வந்தேன். மனசுக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு’’ என்கிறார் இர்ஃபான்.
source https://cinema.vikatan.com/television/serial-actor-venkatsh-passed-away
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக