Ad

திங்கள், 22 மார்ச், 2021

சச்சின், கங்குலி, தோனி... இந்த கேப்டன்கள் செய்த தவறை கோலியும் செய்யலாமா?

''ரோஹித்தோடு சேர்ந்து யார் ஓப்பனிங் இறங்கவேண்டும்?''

இங்கிலாந்துக்கு எதிரான இந்த டி20 தொடர் ஒரு மிகப்பெரிய கேள்வியை இந்திய அணியின் முன் வைத்தது. 5 போட்டிகளில் 4 வித்தியாசமான ஓப்பனிங் காம்பினேஷன்களைக் களமிறக்கியது இந்தியா. தவான், ராகுல் போன்ற சீனியர்கள் சொதப்ப, அட்டகாசமாக ஆடிய இஷான் கிஷன் காயத்தால் ஒதுங்க, கடைசிப் போட்டியில் கேப்டன் கோலியே முன்வந்தார். மூன்றாவது வீரராக, நான்காவது வீரராக, ஓப்பனராக என மூன்று வித்யாசமான ரோல்களில் ஆடியிருக்கிறார் இந்திய கேப்டன். இந்திய அணிக்கு எது நல்லது என்ற கேள்வியோடு, கோலிக்கு எது நல்லது என்ற கேள்வியையும் இந்த இடத்தில் நாம் கேட்டாகவேண்டும். ஏனெனில், வரலாறு சற்று பயமுறுத்துவதாகவே இருக்கிறது.

இந்திய கேப்டன்களைப் பொறுத்தவரை ஒரு பேட்டிங் பொசிஷனில் பிரச்னை எனில், தங்கள் பொசிஷனைத் தியாகம் செய்வதும், மாற்றிக்கொள்வதுமே விடை என்று நினைக்கிறார்கள். சச்சின், கங்குலி, தோனி என தொடர்ந்துகொண்டே இருந்த அந்த ரொட்டேஷன் பாலிஸி, இப்போது கோலியிடமும் தென்படத் தொடங்கியிருக்கிறது. முன்பு, ராகுல் மூன்றாவதாக இறங்கவேண்டும் என்பதற்காக 2 டவுன் வந்தவர், இந்தத் தொடரில் கிஷனுக்காகத் தன் இடத்தைத் தியாகம் செய்தார். இந்த மாற்றங்களெல்லாம் பலன் கொடுத்திருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை.

Sachin Tendulkar Average

463 ஒருநாள் போட்டிகளில் ஆடியிருக்கும் சச்சினின் சராசரி 44.83. தன் 23 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு பொசிஷன்களில் ஆடியிருக்கும் லிட்டில் மாஸ்டர், ஓப்பனராகத்தான் தன் உட்சபட்ச திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். ஓப்பனராக இறங்கிய போட்டிகளில் அவரது சராசரி 48.29. ஆனால், 4-7 பொசிஷன்களில் பேட்டிங் செய்யும்போது அந்த சராசரி 33.14 வரை வீழ்கிறது. அதாவது மிடில் ஆர்டரில் ஆடிய ஒரு போட்டியில் சராசரியாக 15 ரன்கள் குறைவாகவே எடுத்திருக்கிறார் சச்சின்.

சச்சினோடு இணைந்து மிகச் சிறந்த ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த சௌரவ் கங்குலியின் சராசரியும் அதே மாதிரிதான் இருக்கிறது. ஓப்பனராக 41.57 என்ற சராசரி வைத்திருந்தவர், 3-7 பொசிஷன்களில் ஆடியபோது சராசரியாக போட்டிக்கு 38.70 ரன்களே அடித்திருக்கிறார். ஷேவாக்கை ஓப்பனராக இறக்கத் தன் இடத்தைத் தியாகம் செய்த கங்குலி, அணியிலேயே தன் இடத்தைத் தியாகம் செய்யும் நிலைக்கும் தள்ளப்பட்டதுதான் பெரும் சோகம்!

Sourav Ganguly Average

இந்த வரிசையில் அடுத்ததாக தோனி. ஒருநாள் போட்டிகளில் 50.57 என்ற சராசரி வைத்திருந்தார் தோனி. மூன்றாவது வீரராக விளையாடிய 17 போட்டிகளில் 82.75 என்ற அசுர சராசரியில் 993 ரன்கள் குவித்திருக்கிறார். 2 சதங்கள், 6 அரைசதங்கள் என மிரட்டியிருக்கிறார். அந்த பொசிஷனில் மட்டுமல்ல, நான்காவது வீரராகவுமே நல்ல சராசரி வைத்திருக்கிறார் அவர். மூன்றாவது அல்லது நான்காவது வீரராக இறங்கிய போட்டிகளில் அவர் சராசரி 65.30. ஆனால், அதற்குக் கீழே களமிறங்கிய போட்டிகளிலோ சராசரி ஐம்பதுக்கும் கீழே (47.56) போய்விட்டது.

M.S.Dhoni Average

தோனி கேப்டன் ஆன பிறகு, ரெய்னா, கோலி, யுவராஜ் என இவர்கள் டாப் ஆர்டரில் ஆடுவதற்காகக் கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே இறங்கிக்கொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் ஏழாவது பேட்ஸ்மேனாகக்கூட விளையாடத் தொடங்கினார். அதுதான் அவர் சராசரி குறைவதற்கு மிகமுக்கியக் காரணமாக அமைந்தது.

இப்படி இந்தியாவின் ஜாம்பவான் பேட்ஸ்மேன்கள் தங்கள் முடிவுகளால் பின்னடைவையே சந்தித்திருக்கிறார்கள். இப்போது ஜாம்பவனாக உருவெடுத்துக்கொண்டிருக்கும் கோலியின் நிலையும் அதேதான். ஒருநாள் போட்டிகளில் மூன்றாவது வீரராக 62.81 என்ற சராசரி வைத்திருக்கும் அவர், 4-7 பொசிஷன்களில் 50.12 என்ற சராசரியே வைத்திருக்கிறார். கேப்டனானப் பிறகு, மூன்றாவது இடத்தில் 77.53 என்றிருக்கும் அவர் சராசரி, 4-7 பொசிஷன்களில் 44.75 என்று பேரடி வாங்குகிறது. கேப்டன் ஆன பிறகு, டி-20 ஃபார்மேட்டிலும் 55.26 (மூன்றாவது வீரராக) என்றிருக்கும் அவர் சராசரி, 4-7 பொசிஷன்களில் 44.81 வரை குறைகிறது.

Virat Kohli ODI average

வரலாறும் சரி நிகழ்காலமும் சரி, சொல்வது ஒன்றுதான். மகத்தான பேட்ஸ்மேன்களாக இருப்பவர்கள் தங்கள் இடத்தை இன்னொருவருக்கு விட்டுக்கொடுக்காமல் இருப்பது முக்கியம். அணியின் நலனுக்காக என்று சொன்னாலும், அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. 2007 உலகக் கோப்பை சமயங்களில் சச்சின் மிடில் ஆர்டரில் ஆடியதில் எந்தப் பயனும் ஏற்படவில்லை. ஷேவாக் ஓப்பனிங்கில் கலக்கினாலும், மிடில் ஆர்டரில் கங்குலி தன் பழைய ஆட்டத்தைக் காட்ட முடியாமல் தடுமாறினார்.

Virat Kohli T20 average

அதேபோல் தோனி கீழே இறங்கித்தான் ஆடியிருக்கவேண்டும் என்றில்லை. யுவராஜ், ரெய்னா போன்றவர்கள் 5,6 பொசிஷன்களில் ஆடியிருக்கிறார்கள். அங்கு தொடர்ந்து ஆடியிருந்தால், அவர்களால் அங்கும் சோபித்திருக்க முடியும். சொல்லப்போனால், யுவராஜ் சிங்கின் சராசரி கீழே ஆடும்போதுதான் அதிகமாக இருந்திருக்கிறது. நான்காவது வீரராக அவர் சராசரி 35.20. அதேசமயம், ஐந்தாவது பொசிஷனில் 39.48 என்ற சராசரியும், ஆறாவது பொசிஷனில் 37.61 என்ற சராசரியும் கொண்டிருக்கிறார். 2 டவுன் ஆடிய போட்டிகளில்தான் அவர் சராசரி குறைவு!

இப்படி சில முடிவுகள் நெகட்டிவ் தாக்கங்கள் ஏற்படுத்துவதற்கும் வாய்ப்புகள் உண்டு. டி-20 போட்டிகளில் கோலி மூன்றாவதாக இறங்கிய 60 போட்டிகளில் 38-ல் இந்தியா வென்றிருக்கிறது. வெற்றி சதவிகிதம் - 63.33. ஆனால், அவர் நான்காவதாக பேட்டிங் செய்தால், அந்த சதவிகிதம் 59.09 ஆக (22 போட்டிகளில் 13 வெற்றி) குறைந்திருக்கிறது.

Virat Kohli

இந்த விஷயத்தில் பான்ட்டிங்கைப் பார்த்து நம் கேப்டன்கள் கற்றுக்கொள்ளவேண்டும். அவர் கேப்டனாக இருந்த 217 போட்டிகளில், 6 போட்டிகளில் மட்டுமே நான்காவது பொசிஷனுக்குக் கீழே இறங்கியிருக்கிறார். மற்ற போட்டிகளிலெல்லாம் ஒன் டவுன் தான். மைக்கேல் கிளார்க் போன்று மூன்றாவது இடத்தில் ஆடும் ஒரு வீரர் வந்தாலும், பான்ட்டிங் தன் இடத்தை விட்டுக்கொடுக்கவில்லை. அவர் ஓய்வு பெற்ற பிறகுதான் அந்த இடத்தை நிரப்பினார் கிளார்க். அதனால்தான், ஓய்வு பெறும்வரை பான்ட்டிங்கால் அப்படி சிறப்பாக ஆட முடிந்தது.

ஆக, நாம் சொல்ல வருவதெல்லாம், இனி கோலி தியாகம் என்று எதுவும் செய்யாமல் தன் ஆஸ்தான இடத்தில் ஆடவேண்டும் என்பதுதான். ஓப்பனராக கடந்த போட்டியில் சிறப்பாக ஆடியிருக்கிறார். ஆனால், அது தொடருமா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனெனில், டி-20 போட்டிகளில் ஓப்பனராக அவர் சராசரி 39.71 தான். எனவே, கோலி இதுபோன்ற முடிவுகளை மறுபரிசீலனை செய்யவேண்டும். கேப்டன்கள் பதில் கண்டுபிடிக்கவேண்டும். ஆனால், கேப்டன்களே பதில் இல்லை!



source https://sports.vikatan.com/cricket/why-kohli-should-not-change-his-batting-position

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக