Ad

செவ்வாய், 16 மார்ச், 2021

பாழடைந்த கட்டடம்; மது,கஞ்சா, சூதாட்டம்; சமூக விரோதிகளின் கூடாரமான கொரட்டூர் ஏரி - ஸ்பாட் விசிட்!

அம்பத்தூர் பகுதியின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாக சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்து வந்தது கொரட்டூர் ஏரி. பல ஆண்டுகளுக்கு முன்பு 900 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாய் விரிந்து பரந்து காணப்பட்ட இந்த ஏரியின் தற்போதைய நிலை பெரும் அவல நிலையாக மாறியிருப்பது தான் வேதனையான விஷயம் .

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கொரட்டூர் ஏரி பகுதியை ஆக்கிரமித்து 650-க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டி ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வந்தனர். ஆனால் 2019-ம் ஆண்டு பொதுப்பணித்துறை நீர்நிலையை மீட்டெடுக்கும் நோக்கில் ஏரிப்பகுதியில் கட்டப்பட்டிருந்த 650 வீடுகளை இடித்துத் தள்ளி ஆக்கிரமிப்பாளர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தியது. இப்போது மீட்டெடுக்கப்பட்ட ஏரியின் நீர்நிலை பகுதியில் ஆக்கிரமிப்பாளர்கள் யாரும் இல்லை என்றாலும், அந்த இடத்தை சமூக விரோதிகள் சிலர் தங்களின் கூடாரமாக மாற்றி அருகில் வசிக்கும் மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

கொரட்டூர் ஏரி

அதிலும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் முழுமையாக இடிக்க முடியாமல் அதிகாரிகளால் பாதி மட்டுமே இடிக்கப்பட்ட அந்த 2 கட்டடங்கள் தான், அங்கு நடைபெறும் குற்றச்செயல்களின் தலைநகராகத் திகழ்கிறது. அந்த கட்டடத்தை மையமாக வைத்துத் தான் அங்குப் பல குற்றச் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

ஏரிப்பகுதியில் பல ஆண்டுகாலமாக முகாமிட்டு வசித்து வந்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதில் அதீத அக்கறை காட்டிய பொதுப்பணித்துறை, அதன் பின் அந்த ஏரியின் மீது துளியும் கவன செலுத்தவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர் அப்பகுதி சமூக ஆர்வலர்கள்.

அந்த ஏரி பகுதியில் 650 வீடுகள் இடிக்கப்பட்டிருந்தாலும் இன்னும் அருகில் பல குடும்பங்கள் அங்குப் பட்டா நிலத்தில் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். அவர்களின் வசிப்பிடங்களுக்கு மிக அருகில் தான் ஏரி இருக்கிறது.

கடந்த சில மாதங்களாகவே அந்த ஏரிப்பகுதியில் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் சிலர் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் நம் காதுகளுக்கு வந்து கொண்டு இருந்தது. ஆனால் யாரும் நம்மிடம் இது குறித்து நேரடியாகத் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், கடந்த வாரம் ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. அதில் நம்மிடம் பேசிய நபர் ``தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, சார் என் வீடு கொரட்டூர் ஏரிக்கு பக்கத்துல தான் சார் இருக்கு. இங்க சாயங்காலம் ஒரு 6 மணி ஆயிடுச்சுனா போதும், நெறைய பேர் கூட்டம் கூட்டமா வந்து ஏரிக்குள்ள கஞ்சா தண்ணியெல்லாம் அடிச்சிட்டு அந்த சாராய பாட்டில குடியிருப்பு பகுதிகளுக்கு கொண்டு வந்து ஒடச்சி அட்டகாசம் பண்றாங்க. கேட்க போனா போதைல அடிக்க வராங்க, இங்க நெறைய பேர் பொம்பள பிள்ளைங்கள வெச்சுருக்கோம். அதனால எங்களுக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு போக பயமா இருக்கு கொஞ்சம் வந்து ஏதாவது பண்ணுங்க சார் " என்று கனத்த குரலில் முறையிட்டார்.

மது பாட்டில்கள்

நாங்கள் அவர் சொன்ன இடத்துக்கு அடுத்த நாள் காலை சரியாக ஆறு மணிக்குச் சென்றோம். எங்களுக்குத் தகவல் கொடுத்தவரின் வீட்டு மாடியில் யாருக்கும் புலப்படாதவாறு நின்று கொண்டு அந்த ஏரி பகுதியைக் கண்காணித்தோம். சரியாக 6.30 மணிக்கு ஒரு கும்பல் இரண்டு இருசக்கர வாகனங்களில் அந்த குறிப்பிட்ட ஏரி பகுதிக்கு வந்து இறங்கியது.

வாகனங்களைக் கரையில் விட்டு விட்டுப் பரபரப்பாகப் பாதி மட்டுமே இடிக்கப்பட்ட அந்த கட்டடத்தை நோக்கி விரைந்தது. அவர்கள் உள்ளே சென்ற சிறிது நேரத்திலேயே பலர் தனித் தனியே அந்த கட்டடத்திற்குச் சென்று எதையோ வாங்கிக் கொண்டு புறப்பட்டனர். அப்படி வெளியே வந்த நபர்களின் கைகளில் பொட்டலங்கள் இருந்ததை எங்களால் பார்க்க முடிந்தது.

பின்னர் அரை மணி நேரம் கழித்து உள்ளிருந்து வெளியே வந்த அந்த கும்பல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது .

அவர்கள் சென்ற பின் அந்த பகுதியில் குடியிருக்கும் பகுதி வாசிகள் சிலரை அணுகி இது பற்றி விசாரித்தோம். அப்போது நம்மிடத்தில் பேசிய நாற்பது வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் ``போன வருஷத்துக்கு முந்தின வருஷம் இங்க இருந்த ஆக்கிரமிப்புகளை எல்லாம் இடிச்சு தரைமட்ட மாக்குனாங்க. அதுல ரெண்டு வீட மட்டும் முழுசா இடிக்க முடியாம அப்படியே பாதியிலேயே விட்டுட்டு போய்ட்டாங்க. அந்த வீட்ட மையமா வெச்சு தான் இங்க பல தப்பான விஷயங்கள் நடந்துட்டு வருது. காலைல சின்ன சின்ன பசங்க நிறைய பேர் கூட்டம் கூட்டமா வந்து கஞ்சா வித்துட்டு போறாங்க. அப்பறம், சாயங்காலம் 6 மணி ஆனா போதும், எங்கிருந்தோலாம் பசங்க வராங்க. அவங்கள இது வரைக்கும் நாங்க யாரும் இந்த ஏரியால பார்த்ததே கிடையாது .

குற்றச்சம்பவங்கள் நடைபெறும் பாதி மட்டுமே இடிக்கப்பட்ட கட்டடம்

கும்பல் கூடிட்டு தண்ணி அடிச்சுகிட்டு அங்க இருந்து, இங்க வீடுங்க மேல கல்ல கொண்டு எறிவானுங்க. ஒரு முறை அப்படி தான் குடிச்சிட்டு சாராய பாட்டில கொண்டு வந்து எங்க வீட்டுக்கு வெளிய ஒடச்சுட்டு போய்ட்டானுங்க. அப்போ என் வீட்டுகாரர் போய் சத்தம் போட்டாரு, அதுக்கு அவர மிரட்டி அடிக்க வந்துட்டானுங்க. உடனே அக்கம் பக்கத்துல இருக்குறவங்க எல்லாரும் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுக்கச் சொன்னாங்க. ஆனா, நான் தான் வீட்டுல வயசுக்கு வந்த பொம்பள பிள்ளைங்களை வெச்சுருக்கோம் அதனால வேணாம்னு சொல்லி அவங்கள தடுத்துட்டேன். இத விட கொடுமையான விஷயங்கள் இங்க நடக்குது.

ராத்திரி ஒரு பத்து மணிக்கு மேல அந்த பாதி மட்டுமே இடிக்க பட்ட கட்டடத்துக்கு பெண்கள கூட்டிட்டு வராங்க. வெளியில யார் கிட்டையும் இத சொல்றதுக்கு கூட முடியல. அசிங்கமா இருக்கு. மொத்தத்துல இங்க இருக்கறதுக்கே ரொம்ப பயமா இருக்குது. எப்போ என்ன நடக்குமோனு தெரியல சொந்த வீடா போய்டுச்சு இல்லைன்னா வேற எங்கயாவது காலி பண்ணிட்டு போய்டுவோம் " என்றார் ஒரு வித பயத்துடன்.

குற்றச்சம்பவங்கள் நடைபெறும் கட்டடம்

அந்த பெண்ணிடம் பேசி விட்டு இரவில் குற்றச் செயல்கள் நடப்பதாக சொல்லப்படும் அந்த கட்டடத்துக்குச் சென்றோம். ஒரு அறை மட்டும் தான் முழுமையாக இடிக்கப்படாமல் இருந்தது. ஆனால் அந்த அறையில் கூட உள்ளே இடிக்கப்பட்ட கட்டடக் கழிவுகள் நிரம்பி இருந்தன. மேலும், அங்கு ஒரு படுக்கை விரிப்பு போடப்பட்டு அந்த இடம் மட்டும் சுத்தம் செய்யப்பட்டிருந்தது. சுற்றி மதுபாட்டில்கள், சீட்டுக் கட்டுகள், புகைத்து எறியப்பட்ட சிகரெட் துண்டுகள் என அந்த அறை முற்றிலும் மோசமாகக் காணப்பட்டது .

பின்னர் ஏரியில் நடக்கும் சட்ட விரோத சம்பவங்கள் குறித்து விசாரிக்க அம்பத்தூர் காவல்நிலையத்திற்குச் சென்றோம். ``கொரட்டூர் ஏரியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக, இதுவரையிலும் எங்களுக்கு எந்த புகாரும் வந்ததில்லை. பிரச்னைகளை எங்களிடத்தில் முறையாகத் தெரிவித்தால் மட்டுமே, எங்களால் நடவடிக்கை எடுக்க முடியும். அந்த பகுதியில், இரவு நேரங்களில் ரோந்து பணி மேற்கொண்டு வருகிறோம். அம்பத்தூர் பகுதியில் கஞ்சா அதிகளவில் புழக்கத்தில் இருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. அதனடிப்படையில், ரயில் நிலையம், மார்க்கெட் பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறோம். உடனடியாக, கொரட்டூர் ஏரியில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களைக் கைது செய்கிறோம்" என உறுதி அளித்தனர்.

அம்பத்தூர் காவல்நிலையம்

சமூக ஆர்வலர்களிடத்தில் இது குறித்துக் கேட்ட போது, "முழுமையாக இடிக்கப்படாமல் பாதியில் நிற்கும் அந்த இரண்டு கட்டிடங்களை இடித்துவிட்டு, ஏரியை ஆழப்படுத்தி கரைகள் எழுப்பினால், வரும் நாள்களில் ஏரி அதன் இயல்பு நிலைக்குத் திரும்பி அம்பத்தூர் ஏரியைப் போல் மாறும். ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் மீண்டும் சிலர் ஏரியில் பிளாட் போடத் துவங்கியிருக்கின்றனர். எத்தனையோ, முறை இதுபற்றி அவர்களுக்குப் புகார் அளித்து விட்டோம். இதுவரையிலும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை" என்றனர்.



source https://www.vikatan.com/social-affairs/crime/illegal-activities-in-korattur-lake-raises-fear-for-local-people

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக