Ad

புதன், 17 மார்ச், 2021

சுரேஷ் ரெய்னாவால் சிக்கலை சந்திக்கிறதா சென்னை சூப்பர் கிங்ஸ்?! #SureshRaina

2021 ஐபிஎல் தொடங்க இன்னும் மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடுமையாகப் பயிற்சிகள் செய்துவருகிறது. கடந்த ஆண்டு தொடர் தோல்விகளை சந்தித்து ரசிகர்களை ஏமாற்றிய சூப்பர் கிங்ஸ் அணி, இந்தாண்டு அதுபோல எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது. அதற்காகத்தான் முதல் அணியாக சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சிகள் தொடங்கியது. தோனியும் சென்னை வந்துவிட்டார். ஆனால், சிஎஸ்கே-வின் துணை கேப்டனான சுரேஷ் ரெய்னா இன்னும் அணியோடு இணையவில்லை.

2020 ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக சென்னை அணியோடு துபாய் போன சுரேஷ் ரெய்னா, அங்கே ஒழுக்க விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டுகள் கிளம்பியது. ஆதாரங்களின் அடிப்படையில் அவர் விசாரிக்கப்பட, 2020 ஐபிஎல்-ல் இருந்து பர்சனல் காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்தார் ரெய்னா. சென்னை சூப்பர் கிங்ஸும் அவரை இந்தியாவுக்கு வழியனுப்பிவைத்தது. அப்போதே சிஎஸ்கே அணியில் இருந்து ரெய்னா நீக்கப்படுவார் என்கிற பேச்சுகள் எழுந்த நிலையில் அவரை ரீடெய்ன் செய்தது சிஎஸ்கே.

சுரேஷ் ரெய்னா, கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு இடைவெளிக்குப்பிறகு கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடைபெற்ற சையது முஸ்தாக் டி20 தொடரில் விளையாடினார். உத்திரப்பிரதேச அணிக்காக விளையாடிய சுரேஷ் ரெய்னா 5 போட்டிகளில் அடித்த ரன்கள் முறையே 4, 36, 0, 6, 56. ஒரே போட்டியில்தான் அரைசதம் அடித்தார். உத்திரப்பிரதேசம் விளையாடிய 5 போட்டிகளில் 4-ல் தோல்வியடைந்து லீக் ஸ்டேஜிலேயே தொடரில் இருந்து வெளியேறியது. இதற்கடுத்து சமீபத்தில் நடந்த விஜய் ஹஸாரே தொடரில் அவர் விளையாடவில்லை.

தோனி - ரெய்னா

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தோனியோடு சேர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட சுரேஷ் ரெய்னா கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகவே பெரிதாக எந்தப்போட்டியிலும் விளையாடவில்லை. 2019 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய சுரேஷ் ரெய்னா 17 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 383 ரன்களே எடுத்தார். இதில் ஒரே ஒரு அரை சதம். ஆவரேஜாக ஒரு போட்டியில் 23 ரன்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸில் ஆண்டுக்கு 11 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார் சுரேஷ் ரெய்னா. அப்படியிருந்தும் சுரேஷ் ரெய்னா இப்போதுவரை இந்த ஆண்டுக்கான பயிற்சியில் சிஎஸ்கே அணியுடன் இணையவில்லை. தோனியே பயிற்சியில் இருக்க, ரெய்னாவோ தொடர்ந்து பல்வேறு விளம்பர நிகழ்சிகளில் கலந்துகொண்டுவருகிறார். இது சிஎஸ்கே அணிக்குள் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது.

''மார்ச் 24-ம் தேதிக்கு மேல்தான் அவர் சென்னை சூப்பர் கிங்ஸோடு இணைவார். ஆனால், அதுவும் இப்போது வரை உறுதிசெய்யப்படவில்லை'' என்கிறார்கள் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு நெருக்கமானவர்கள். ''க்வாரன்டீன், பயோபபுள் எல்லாம் தன்னை மனதளவில் பலவீனப்படுத்துவதாகவும், அதனால் தான் கொஞ்சம் தாமதமாக வந்து அணியோடு இணைந்துகொள்கிறேன்'' என்றும் சொல்லியிருக்கிறாராம் ரெய்னா. கொரோனா கட்டுப்பாடுகளால் ஹோட்டல் அறைகளுக்குள் தனியாக அடைந்துகிடப்பது அவருக்கு செட் ஆகவில்லை என்கிறார்கள்.

ஆனால், 34 வயதான ரெய்னாவுக்கு, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டவருக்கு, உள்ளூர் போட்டிகளிலும் பெரிதாக பர்ஃபார்ம் செய்யாதவருக்கு, யோ யோ டெஸ்ட் உள்பட ஃபிட்னஸ் டெஸ்ட்களிலும் தோல்வியடைந்தவருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும், தோனியும் கொஞ்சம் அதிகமாகவே இடம்கொடுப்பதாக முணுமுணுப்புகள் அணிக்குள்ளேயே எழ ஆரம்பித்திருக்கிறது!



source https://sports.vikatan.com/ipl/suresh-rainas-availability-at-chennai-super-kings-camp-is-not-confirmed-yet

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக