Ad

செவ்வாய், 16 மார்ச், 2021

'சப்ப டீம்' சரித்திரம் படைத்தது எப்படி? 1996 உலகக்கோப்பை - வெள்ளிவிழா கொண்டாடும் இலங்கை கிரிக்கெட்!

இப்படி ஒரு நாடும் கிரிக்கெட் விளையாடுகிறது என உலகம் தெரிந்துகொண்ட நாள் இன்று. சரியாக 25 ஆண்டுகளுக்கு முன்பு இதே மார்ச் 17, 1996-ம் ஆண்டு லாகூரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது இலங்கை. அதுவரை கத்துக்குட்டிகளாக அறியப்பட்டவர்கள் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என எல்லா நாடுகளையுமே அலறவைத்து அழவைத்தார்கள். இலங்கையை வெல்வதே 90-களின் இந்திய அணிக்கு மாபெரும் லட்சியமாகிப்போனது.

90-களில் இலங்கை கிரிக்கெட் அணியைப் பார்த்தாலே இந்திய ரசிகர்கள் கொலைவெறியாவார்கள். காரணம் அன்றைய காலகட்டத்தில் இந்தியாவுக்கு மிகவும் அவமானகரமானத் தோல்விகளைப் பரிசளிக்கும் அணியாக இருந்தது இலங்கை.

இலங்கையின் இந்த எழுச்சி என்பது 96 உலகக்கோப்பையில் இருந்துதான் தொடங்கியது. 1996 உலகக்கோப்பையை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை என ஆசிய நாடுகள் கூட்டாகச் சேர்ந்து நடத்தின. உலகக்கோப்பை தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்னால் இலங்கையில் விடுதலைப்புலிகளால் வெடிகுண்டுத் தாக்குதல் நடந்ததால் ஆஸ்திரேலியாவும், வெஸ்ட் இண்டீஸும் இலங்கை சென்று விளையாட மறுத்தன. விடுதலைப்புலிகள், ``நாங்கள் கிரிக்கெட் ரசிகர்கள். எங்களால் கிரிக்கெட் வீரர்களுக்கு எந்த பாதிப்பும் நிகழாது'' என அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இலங்கை பாதுகாப்பானது என இந்த நாடுகளுக்குப் புரியவைக்க இந்திய/பாகிஸ்தான் வீரர்கள் இணைந்து இலங்கைக்கு எதிராக விளையாடும் வகையில் காட்சிப்போட்டி ஒன்று கொழும்புவில் நடத்தப்பட்டது. டெண்டுல்கர், வாசிம் அக்ரம் என முக்கிய வீரர்கள் எல்லோருமே கொழும்பு சென்று விளையாடினர். ஆனால், இந்தப்போட்டி நடந்தப்பிறகும் ஆஸ்திரேலிய/வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இலங்கையில் விளையாடுவதில்லை என்கிற முடிவில் உறுதியாக இருந்தன.

இதனால் இரண்டு போட்டிகளில் விளையாடாமலேயே 4 புள்ளிகளைப் பெற்றது இலங்கை. அந்த அணிக்கு இலவசமாக 4 புள்ளிகள் கிடைத்ததுப்பற்றி எந்த அணியும் பெரிதாக கவலைப்படவில்லை. ஏனென்றால் இலங்கை அணியை அவர்கள் யாரும் உலகக்கோப்பைக்கான போட்டியாளர்களாக மதிக்கவேயில்லை. ஆனால், இலங்கை அணி சத்தம் இல்லாமல் மிகப்பெரிய தாக்குதலுக்குத் தயாராகிக்கொண்டிருந்தது.

மார்ச் 2, 1996... இந்தியாவின் கோட்டையான டெல்லியில் 'சப்ப டீம்' என அதுவரை சொல்லப்பட்ட இலங்கையை சந்தித்தது இந்தியா. எதிர்பார்த்ததுபோலவே இலங்கை பெளலர்களை எல்லாம் வெளுத்து துவைத்தார் சச்சின் டெண்டுல்கர். சச்சினும், அசாருதினும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 175 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டார்கள். சச்சின் சென்சுரி மட்டுமல்ல அப்போதைய அதிகபட்ச ஸ்கோராக 137 ரன்கள் அடித்தார். இந்தியா 50 ஓவர்களில் 271 ரன் சேர்த்தது. அப்போதைய காலகட்டத்தில் 250 ரன்களுக்கு மேல் அடித்தாலே வெற்றிபெற்றுவிடலாம் என்பதால் இந்தியாவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது.

இலங்கை கிரிக்கெட்

இலங்கை சேஸிங்கைத் தொடங்கியது. சனத் ஜெயசூர்யாவும், விக்கெட் கீப்பர் ரோமேஷ் கலுவித்தரானாவும் ஓப்பனிங் இறங்கினார்கள். மனோஜ் பிரபாகர் பெளலிங். 'இலங்கை வீரர்கள் இப்படியெல்லாம் கூட ஆடுவார்களா' என இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தார்கள் ஜெயசூர்யாவும் - கலுவித்தரானாவும்.

அன்று இலங்கையின் சேஸிங்கில் பவுண்டரிகள் பறந்தன. மனோஜ் பிரபாகரின் முதல் ஓவரில் மட்டும் 11 ரன்கள். மூன்றாவது ஓவர் மீண்டும் மனோஜ் பிரபாகர். இந்த ஓவரில் மட்டும் 22 ரன்கள் அடித்தார் ஜெயசூர்யா. 3-வது ஓவரிலேயே இலங்கையின் ஸ்கோர் 42. நான்காவது ஓவரிலேயே 50 ரன்களைத் தொட்டுவிட்டார்கள். முதல் 2 ஓவர்களில் ஜெயசூர்யா வெளுத்ததால் அடுத்த ஸ்பெல்லில் வேகப்பந்து வீச்சாளரான மனோஜ் பிரபாகர் ஆஃப் ஸ்பின் எல்லாம் போட்ட விநோதங்கள் நடந்தன.

2 சிக்ஸர், 9 பவுண்டரிகள் உள்பட 79 ரன்கள் அடித்தார் ஜெயசூர்யா. இந்தியாவுக்கு எதிரான ஜெயசூர்யாவின் முதல் தாக்குதல் அதுதான். மனோஜ் பிரபாகரின் கரியர் அன்றோடு முடிந்தது. விவியன் ரிச்சர்ட்ஸுக்கு அடுத்தபடியாக எப்பேர்பட்ட பெளலிங் அட்டாக்கையும் சிதைக்கும் ஒரு பேட்ஸ்மேனாக மிரட்ட ஆரம்பித்தார் சனத் ஜெயசூர்யா.

மார்ச் 13,1996... மீண்டும் இந்தியாவின் மற்றொரு கோட்டையான கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியாவும் இலங்கையும் அரையிறுதிப்போட்டியில் மோதின. REVENGE... லீக் போட்டிக்கான தோல்விக்கு இன்று இலங்கையை பழிதீர்க்கப்போகிறது இந்தியா என எல்லா செய்தித்தாள்களின் விளையாட்டுப்பக்கங்களும் ஆருடம் சொல்லின. ஏனென்றால் காலிறுதிப்போட்டியில் பாகிஸ்தானை இந்தியா மிகச்சிறப்பாக விளையாடி வீழ்த்தி இருந்ததால் இலங்கையுடன் வெற்றி நிச்சயம் என்றே எல்லோரும் கணித்திருந்தார்கள். இலங்கையைப் பழிதீர்க்கப்போகும் நேரத்துக்காக ஒட்டுமொத்த இந்தியாவுமே காத்திருந்தது.

டாஸ் வென்ற அசாருதின் இலங்கையை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். ஶ்ரீநாத்தின் முதல் ஓவரிலேயே கலுவித்தரானா டக் அவுட், ஜெயசூர்யா 1 ரன்னில் அவுட். ஶ்ரீநாத்தின் மூன்றாவது ஓவரில் குருசிங்கேவும் 1 ரன்னில் அவுட் ஆக, ஒட்டுமொத்த இந்தியாவுமே ஒரே நேரத்தில் ஆர்ப்பரித்தது.

ஆட்டம் தொடங்கிய அரை மணி நேரத்திலேயே இந்தியா இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுவிட்டதுபோன்ற கொண்டாட்டங்கள் கமென்ட்ரி பாக்ஸில் கேட்க ஆரம்பித்தன. ஆனால், கொஞ்ச நேரத்திலேயே அந்த மகிழ்ச்சியில் மண் அள்ளிப்போட்டார் அரவிந்த டி சில்வா.

இலங்கை கிரிக்கெட்

''என்னை அடிக்கல, குத்தல... ஆனா உயிரை மட்டும் அப்படியே உருவி எடுத்துட்டடா'' என வசூல்ராஜா படத்தில் நாகேஷ் சொல்வாரே அதுபோல இந்தியா முழுக்கவும் பரவியிருந்த அந்த சில நிமிட நேர மகிழ்ச்சியை ஒட்டுமொத்தமாக உருவி எடுத்துவிட்டார் டிசில்வா.

60 கோடிப் பேர் உலகம் முழுக்க அந்தப்போட்டியைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், ஈடன் கார்டன் மைதானத்தில் மட்டும் 1 லட்சம் இந்திய ரசிகர்கள் இருக்கிறார்கள், மூன்றாவது ஓவருக்குள் மூன்று விக்கெட்டுகள் விழுந்துவிட்டது, கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இலங்கை அரையிறுதிப்போட்டியில் விளையாடுகிறது... என இவ்வளவு பிரஷர் இலங்கை அணியை சூழ்ந்திருந்தும் அரவிந்த டி சில்வா அசரவில்லை!

டிசில்வா அதிரடி ஆட்டம் ஆடவில்லை. அட்டாக்கிங் ஆட்டம் ஆடினார். ஒவ்வொரு ஓவரிலும் ஒன்றிரண்டு பவுண்டரிகள் அடிப்பது பிறகு சத்தம் இல்லாமல் நிற்பது என சட்டென ஒரு பெரிய பாசிட்டிவிட்டியை இலங்கை அணிக்குள் கொண்டுவந்துவிட்டார் அரவிந்த டி சில்வா.

32 பந்துகளில் அரைசதம், 47 பந்துகளில் 66 ரன்கள். இதில் 14 பவுண்டரிகள். அதாவது பவுண்டரிகளால் மட்டுமே 56 ரன்கள். ஓடி எடுத்தது வெறும் 10 ரன்கள்தான். 15-வது ஓவரில் அவுட் ஆகிவிட்டார் டிசில்வா. அப்போது இலங்கையின் ஸ்கோர் 85 மட்டுமே. ஆனால், கிட்டத்தட்ட ஓவருக்கு 6 ரன்கள் என்கிற ரன்ரேட்டுக்கு டிசில்வா கொண்டுவந்துவிட்டதால் இலங்கையின் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் பொறுமையாக ஆடி அணியின் ஸ்கோரை 250 ரன்களுக்கு கொண்டுவந்துவிட்டார்கள்.

இலங்கை கிரிக்கெட்

இதுவும் அடிக்கக்கூடிய டார்கெட்தான் என இந்தியாவுக்கு நம்பிக்கை அளித்தார் சச்சின் டெண்டுல்கர். 88 பந்துகளில் 65 ரன்கள் அடித்த சச்சின், ஜெயசூர்யாவின் பந்தை அடிக்க கொஞ்சம் கிரீஸைவிட்டு காலை வெளியே எடிக்க மின்னல் வேகத்தில் ஸ்டம்ப்பிங் செய்துவிட்டார் கலுவித்தரானா. அவ்வளவுதான் ஆட்டம் முடிந்தது. சச்சின் அவுட் ஆகும்போது இந்தியாவின் ஸ்கோர் 98 ரன்கள். ஆனால், அடுத்துவந்த கேப்டன் அசாருதின் டக் அவுட். ஶ்ரீநாத் ஆறு ரன்களில் அவுட். அஜய் ஜடேஜா டக் அவுட். மோங்கியா 1 ரன், ஆசிஷ் கபூர் டக் அவுட் என அடுத்தடுத்து வந்தவர்கள் சிங்கிள் டிஜிட்டில் காலியாக ஸ்டேடியமே கலவர பூமியானது. மைதானத்துக்குள் தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்ட, சேர்கள் கொளுத்தப்பட, ஆட்டம் நிறுத்தப்பட்டு இலங்கை வென்றதாக அறிவிக்கப்பட்டது.

அடுத்து மார்ச் 17,1996.. ஆஸ்திரேலியாவுடன் இறுதிப்போட்டி. இதில் சென்சுரி அடித்து இறுதிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் நின்று இலங்கைக்கு முதல் உலகக்கோப்பையைப் பெற்றுத்தந்தார் அரவிந்த டி சில்வா.

இலங்கை கிரிக்கெட்

அப்போதைய இலங்கை அணியில் வீரர்களுக்குப் பெரிய சம்பளங்கள் கிடையாது. ஜெயசூர்யா இலங்கையின் மாத்தாறை எனும் பகுதியைச் சேர்ந்தவர். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவரான ஜெயசூர்யா செகண்ட் ஹேண்ட் Pad, ஹெல்மெட்களை அணிந்துதான் பலகாலம் கிரிக்கெட்டே விளையாடியிருக்கிறார். தனக்கு செட் ஆகாத பேட்களையும், ஹெல்மெட்டையும் ஒவ்வொரு பந்தையும் அடிக்கும் முன் அட்ஜஸ்ட் செய்வது ஜெயசூர்யாவின் வழக்கமாகியிருக்கிறது. ஜெயசூர்யா, விக்ரமசிங்கே எனப்பல வீரர்களும் கொழும்புவில் தங்க இடம் இல்லாமல் அர்ஜுனா ரணதுங்காவின் வீட்டில்தான் தங்கி பயிற்சி எடுத்திருக்கிறார்கள். அப்படி கடும் உழைப்பால் கட்டப்பட்ட இலங்கை கிரிக்கெட் இன்று வீழ்ந்துகிடக்கிறது. திறமையான வீரர்கள் இருந்தும் கிரிக்கெட் போர்டின் ஊழல் பிரச்னைகளால் அந்த அணியை மீண்டும் கட்டமைக்கமுடியவில்லை.

இப்போது டாம் மூடியை இலங்கை கிரிக்கெட்டுக்குள் இயக்குநராக அழைத்துவந்திருக்கிறார்கள். நல்லவை தொடங்கும் என எதிர்பார்ப்போம்!



source https://sports.vikatan.com/cricket/srilanka-celebrates-25-years-of-1996-world-cup-cricket-victory

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக