Ad

திங்கள், 22 மார்ச், 2021

மாணவி மீது பாலியல் தாக்குதல்... எல்லை மீறினாரா பேராசிரியர்? சிக்கலில் சென்னைப் பல்கலைக்கழகம்!

தேர்வு முடிவுகளில் குளறுபடி, முறையிட்ட மாணவி மீது தாக்குதல் எனத் துறைத் தலைவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, சென்னைப் பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவந்தனர். இந்தப் போராட்டத்தின் உச்சமாக நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட மாணவி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் போலீஸாரால் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என சென்னைப் பல்கலைக்கழகத்தை சர்ச்சைகள் சூழ்ந்துள்ளன.

தமிழகத்தில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே தொல்லியல் படிப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன. பட்ட மேற்படிப்பான இதில் நுழைவுத் தேர்வுகள் மூலமாகவே மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இத்துறையின் தலைவராகப் பேராசிரியர் செளந்தரராஜன் பணியாற்றிவருகிறார். தொல்லியல் துறையில், மொத்தம் 80 மாணவர்கள் படித்துவருகின்றனர். அவர்களில் 25 மாணவர்கள் இறுதியாண்டு பயில்கின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியாகியிருக்கிறது. இதில் குறிப்பிட்ட சில மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுத் தேர்வில் தோல்வியடைந்திருக்கின்றனர். அதிர்ச்சியடைந்த அந்த மாணவர்கள் மறுகூட்டலுக்காக விண்ணப்பித்திருக்கின்றனர். மறுகூட்டலுக்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு மட்டுமல்லாது, வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் மறுகூட்டல் செய்வதாக பல்கலைக்கழக நிர்வாகம் தனியாக குழு ஒன்றை அமைத்திருக்கிறது.

Also Read: `சர்வர் ஃபெயில்!' - தேர்வு எழுத முடியாமல் தவித்த சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள்

முதலில் விண்ணப்பித்த மாணவர்கள், மறுகூட்டலுக்குப் பிறகு மிகப்பெரிய மதிப்பெண் வேறுபாட்டில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். ஆனால், மற்ற மாணவர்களின் மறுகூட்டல் முடிவுகள், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குப் பிறகும் வெளியிடப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த மாணவர்கள் சிலர் துறைத் தலைவர் செளந்தரராஜனிடம் சென்று முறையிட்டிருக்கின்றனர். அப்போது வாக்குவாதம் முற்றி தாக்குதல் வரைச் சென்றிருக்கிறது.

இந்த நிகழ்வின் பின்னணி குறித்து முழுமையாக அறியப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவரிடம் பேசினேன்.

“இது ஒரு தனித்த போராட்டம் அல்ல; கடந்த ஜனவரி மாதம் விடுதிக் கட்டணத்துக்கு எதிராக நாங்கள் நடத்தி, வெற்றி பெற்ற போராட்டத்தின் தொடர்ச்சிதான் இது. கொரோனா ஊரடங்கில் மாணவர்கள் அனைவரும், விடுதியைக் காலி செய்துவிட்டு ஊருக்குச் சென்றுவிட்ட நிலையில், ஒவ்வொரு மாதத்துக்கும் 4,500 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டது. இதை ரத்து செய்யக் கோரி அப்போது போராட்டம் நடத்தினோம். அனைத்துத் துறைகளிலிருந்து மாணவர்கள் பரவலாகக் கலந்துகொண்ட அந்தப் போராட்டத்துக்குச் செல்லக்கூடாது என்று ஒவ்வொரு துறைத் தலைவர்களிடம் இருந்தும் நெருக்கடி வந்தது. இதனால் சிலர் பாதியிலேயே விலகிக் கொண்டனர். இருந்தபோதிலும், தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவால், நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை ரத்து செய்தது.

மாணவர்கள் போராட்டம்

இந்தப் பின்னணியில் தான் செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகள் பிப்ரவரி 12-ம் தேதி வெளியாகவிருந்தது. பல்கலைக்கழக இணையதளம், மின்னஞ்சல், அறிவிப்புப் பலகை என மூன்று வழிகளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போதைய முடிவுகள் இந்த வழிகளில் வெளியாகவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்து துறையில் தொடர்பு கொண்டு பேசினோம். தொலைபேசி வாயிலாக, வார்த்தை மூலமாகவே தேர்வு முடிவுகளைச் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டனர். நன்றாகப் படிக்கும் நாங்கள் ஃபெயிலாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்தோம். இதுவரை ஒருமுறைகூட ஃபெயிலாகி இருக்காத நாங்கள் இதனால் அதிர்ச்சியடைந்தோம்'' என்றார் அம்மாணவர்.

தேர்வு முடிவுகளில் குளறுபடி இருக்கிறது என்று பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட 8 மாணவர்கள் முறையிட்டிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து மறுகூட்டலுக்கான குழு ஒன்றை நிர்வாகம் அமைத்திருக்கிறது. இந்த 8 மாணவர்களுக்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த வகுப்புக்கும் மறுகூட்டல் நடத்தப்பட்டு, இரண்டு வாரங்களில் முடிவுகள் வெளியிடப்படும் என்று அந்தக் குழு கூறியிருக்கிறது. முதல்கட்டமாக 8 மாணவர்களுக்கு மறுகூட்டல் செய்து முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. மறுகூட்டலில் மிகப் பெரிய மதிப்பெண் வேறுபாட்டில் 8 பேரும் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து இரண்டு வாரம் கடந்தும் ஒட்டுமொத்த மாணவர்களுக்குமான மறுகூட்டல் முடிவுகள் வெளிவராத நிலையில், இதுகுறித்து துறைத் தலைவர் செளந்தரராஜனைச் சந்தித்து மாணவர்கள் சிலர் முறையிட்டிருக்கின்றனர்.

Also Read: பல்கலைக் கழகத்தின் அலட்சியம்; பலியானது 3 உயிர்கள்!

“துறைத் தலைவர் செளந்தரராஜன் மிக மோசமாக எங்களை எதிர்கொண்டார்; வெளியில் சொல்ல முடியாத வார்த்தைகளால் எங்களைத் திட்டினார்; அறையிலிருந்து உடனடியாக வெளியேறும்படி கத்தினார். ஒரு மாணவியிடம் நடந்துகொள்ளக் கூடாத வகையில், அந்த மாணவியின் மீது பலவந்தமாக மோதி வெளியில் தள்ள முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவியும் நாங்களும், ‘நீங்கள் எல்லை மீறிக் கொண்டிருக்கிறீர்கள். இப்படியெல்லாம் எங்களிடம் நடந்துகொள்ளக் கூடாது’ என்று கூறினோம். எதையும் சட்டை செய்யாத அவர் மீண்டும் மீண்டும் அப்படியே செய்தார்; இப்படி நடந்துகொண்டதற்காக துறைத் தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் அறைக்கு முன் அமர்ந்து போராடினோம். அறையிலிருந்து வெளியேறும்போது, எங்களில் ஒருவரை மிதித்துவிட்டு வெளியேறினார்” என்று மாணவர்களில் ஒருவர் அங்கு நடந்தவற்றை விவரிக்கிறார்.
மாணவர்கள் போராட்டம்

மார்ச் 20 அன்று போராட்டத்தில் ஈடுபட்ட 4 மாணவர்கள், 1 மாணவி என 5 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்தப் பின்னணியில்தான், ஞாயிற்றுக்கிழமை காலை அந்த மாணவி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அவரை மீட்டு இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றியிருக்கின்றனர். நேற்று (மார்ச் 22) மாணவர்கள் 5 பேரும் போலீஸாரால் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

துறைத் தலைவர் செளந்தரராஜனிடம் இது குறித்த விளக்கத்தைப் பெற தொடர்புகொண்டபோது, அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை.


source https://www.vikatan.com/social-affairs/madras-university-students-protest-against-hod

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக