Ad

திங்கள், 22 மார்ச், 2021

`இதைக் கேட்டு கேட்டு எனக்கே வெறுப்பா இருக்கு!' - சீறும் ஶ்ரீப்ரியா

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. கொரோனா பரவல் மீண்டும் பீதியைக் கிளப்பும் நிலையில், தேர்தல் பரபரப்பும் சூடுபிடித்திருக்கிறது. கமல்ஹாசன், ஶ்ரீப்ரியா, குஷ்பு, உதயநிதி ஸ்டாலின், சினேகன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் இம்முறை வேட்பாளர்களாகக் களம் இறங்கியுள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சியில் நட்சத்திர முகமான ஶ்ரீப்ரியா, சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். வெற்றி வாய்ப்புகள் முதல் பிரசாரம் வரையிலான தேர்தல் அனுபவங்கள் குறித்து ஶ்ரீப்ரியாவிடம் பேசினோம்.

ஶ்ரீப்ரியா

``எங்க கட்சி தொடங்கப்பட்ட பிறகு, கடந்த நாடாளுமன்றத் தேர்தல்லயே நான் போட்டியிட்டா நல்லா இருக்கும்னு கட்சியில சொன்னாங்க. `மக்களோட எண்ண ஓட்டங்கள், அவங்களோட வாழ்க்கை முறையைப் பத்தி தெரிஞ்சுக்க இந்த முறை பிரசாரம் மட்டும் செய்றேன்'னு சொன்னேன். அதன்படி தமிழகத்துல பல பகுதிகளுக்கும் போய் மக்களின் தேவைகளைத் தெரிஞ்சுகிட்டேன். இப்போ சட்டமன்றத் தேர்தல்ல நான் போட்டியிடணும்னு கட்சியும் விரும்புச்சு. நானும் விருப்பப்பட்டேன். நான் பிறந்தது, வளர்ந்ததெல்லாம் மயிலாப்பூர்தான். அதனால, இந்தத் தொகுதியில போட்டியிட விருப்பம் தெரிவிச்சிருந்தேன். அதைக் கட்சித் தலைமை ஏத்துகிச்சு.

உடனடியா பிரசார வேலைகளை ஆரம்பிச்சுட்டேன். முதல் முறையா தேர்தல்ல போட்டியிடுறது வித்தியாசமான அனுபவமா இருக்கு. சினிமா, விளம்பரங்கள்ல பார்க்கிறதோடு, மெயின் ரோட்டுல பயணம் செய்யுறப்போ நாம பார்க்கிறதுதான் பலதரப்பட்ட மக்களின் நிலைனு நினைக்கிறோம். ஆனா, நம்ம ஊர்லயே நாம பார்க்காத பகுதிகள் நிறைய இருக்கு. அங்கெல்லாம் ஏழ்மையான மக்கள் பலரும் அடிப்படை வசதிகள்கூட கிடைக்காம, மோசமான நிலையில்தான் வாழ்ந்துகிட்டு இருக்காங்க. மயிலாப்பூர்ல சத்யா நகர்னு ஒரு பகுதி இருக்கு. வாகனங்கள் போக முடியாத அந்த ஏரியாவுல கால்நடையாவே பிரசாரத்துக்குப் போனோம்.

ஶ்ரீப்ரியா

தண்ணீர், சாலை வசதி, மின்சார வசதி, சுகாதாரம்னு அடிப்படை வசதிகள் பலவும் மோசமா இருந்துச்சு. `போன முறை ஓட்டு கேட்டு வந்த பிரதான கட்சிகள், தேர்தலுக்குப் பிறகு எங்களைக் கண்டுக்கவே இல்ல. நீங்களாவது மாற்றம் கொடுங்க'ன்னு மக்கள் எங்ககிட்ட ஆதங்கத்துடன் கேட்டாங்க. `நான் வெற்றி பெற்றா எல்லாப் பிரச்னைகளையும் தீர்க்க வேலை செய்வேன்'னு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்துட்டு வந்தேன்.

அந்த மக்களின் வாழ்க்கை முறையைப் பார்த்த பிறகு, நம்ம வாழ்க்கை பத்தி குறைபட்டுக்கிறதுகூட பெரிய தப்புனு தோணுச்சு. அங்க வசிக்கும் மக்கள்கிட்ட வாக்கு சேகரிச்சுட்டு வீட்டுக்கு வந்ததும், கால் வலியைவிட மன வலிதான் அதிகம் இருந்துச்சு. அந்த சத்யா நகர் போலத்தான், இப்ப வரை நான் தினமும் பிரசாரத்துக்குப் போற பெரும்பாலான பகுதிகளும் முன்னேற்றம் அடையாம இருக்குது. தலைநகர் சென்னையின் மையப்பகுதியான மயிலாப்பூர் தொகுதியிலயே இந்த நிலைனா, தமிழ்நாட்டுல வாகன வசதிகள்கூட சரியா இல்லாத எத்தனையோ கிராமகளோட நிலை, அந்த மக்களின் வாழ்வாதாரம் எல்லாமே எப்படி இருக்கும்னு நினைச்சாதான் கஷ்டமா இருக்கு" என்று ஆதங்கத்துடன் கூறுபவர், சினிமா பிரபலங்களின் அரசியல் வருகை குறித்தும் பேசினார்.

ஶ்ரீப்ரியா

Also Read: `மகாராஷ்டிரா 1 ட்ரில்லியன் டாலர் எகானமியைத் தாண்டிவிட்டது!' - கமல் சொன்னது சரிதானா?

``நாங்க அரசியலுக்கு வரும்போதும், தேர்தல்ல போட்டியிடும்போதும் எங்க மேல ஏதாச்சும் குற்றச்சாட்டை முன்வைக்கணும் என்பதற்காகவே, `சினிமா பிரபலங்களுக்கு அரசியலைப் பத்தி என்ன தெரியும்?'னு இப்ப வரைக்கும் சொல்லிட்டுத்தான் இருக்காங்க. எங்க கட்சியின் தலைவர் கமல் சார் மேலயும் இப்ப வரைக்கும் இந்தப் பேச்சை முன்வைக்கிறாங்க. இந்தக் கேள்வியைக் கேட்டுக் கேட்டு எனக்கே வெறுப்பா இருக்குது. நான் உட்பட சினிமா பிரபலங்கள் பலருமே ராஜ பரம்பரையைச் சேர்ந்தவங்க இல்ல. சரியான தூக்கம், சாப்பாடு இல்லாம இரவு பகலா ஷூட்டிங்ல நடிச்சிருக்கோம். செருப்பில்லாம வெயில்ல சிரமப்பட்டிருக்கோம். புகழ்பெற்ற சினிமா நட்சத்திரங்கள் பலருடைய வாழ்க்கைப் பயணமும் நிறைய சவால்கள் நிறைந்ததாதான் இருக்கும்.

மக்களுக்கு நல்லது செய்யலாம்னு நாங்க அரசியலுக்கு வரும்போது மட்டும், இப்படியான கேள்விகளை அரசியல்வாதிகள் முன்வைக்கிறது வேடிக்கையா இருக்கு. ஒரு காலத்துல சினிமாவுல நான் புகழுடன் இருந்தேன். அப்பவும் சரி, இப்பவும் சரி, ஆடம்பரமான வாழ்க்கையை நான் வாழல. வீட்டுல கார் இல்லாத நேரத்துல ஆட்டோவுலதான் வெளியே போவேன். கடைத்தெருவுக்குப் போய் ஷாப்பிங் பண்ணுவேன். எப்போதுமே மக்களுடன் மக்களா, மிடில் கிளாஸ் வாழ்க்கையைத்தான் வாழ்றேன். அதனால, இப்போ பிரசாரம் செய்றது, அதிக தூரம் நடக்கிறது, வெயில்ல போறதெல்லாம் எனக்குச் சிரமமானதா இல்ல. எங்க மேல குற்றம் சுமத்துற அரசியல்வாதிங்ககிட்ட பதிலுக்கு நான் ஒரு கேள்வி கேட்கிறேன்.

ஶ்ரீப்ரியா

Also Read: ``கமல் சாரோட இணைச்சுப் பேசினா, நான் முடங்கிருவேன்னு நினைக்கிறாங்க!" - சீறும் சினேகா மோகன்தாஸ்

மக்களோட வரிப்பணத்துலதான் மத்தியிலும், மாநிலத்துலயும் ஆட்சி செய்றாங்க. ஆனா, அந்தப் பணத்தை முறையா மக்களுக்கே செலவு செஞ்சிருந்தா, மக்கள் சந்தோஷமா இருந்திருப்பாங்களே. சுதந்திரம் கிடைச்சு 70 வருஷங்களுக்கு மேல் ஆகியும் ஏன் இன்னும் பெரும்பாலான மக்கள் சிரமத்துலயே வாழ்றாங்க? இந்தக் கேள்விக்கு மட்டும் உருப்படியான் பதிலும், செயல்ல நியாயத்தையும் காட்டவே மாட்டாங்க.

இதனாலதான், தமிழகத்தைத் தொடர்ந்து ஆட்சி செஞ்ச ரெண்டு திராவிட கட்சிகளுக்கும் மாற்றான ஒரு கட்சி ஆட்சிக்கு வரணும்னு மக்கள் எதிர்பார்க்கிறாங்க. அந்த இடத்துல இளைஞர்கள் உட்பட பலரும் எங்க கட்சிக்கே ஆதரவு தர்றாங்க. ஆம் ஆத்மி கட்சி டெல்லியில ஆட்சி அமைச்சு, பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தின மாதிரி, எங்களுடைய கட்சியும் மாற்றத்தை ஏற்படுத்தும் முனைப்புடன்தான் தேர்தல்ல வேலைகளைச் செய்யுறோம். அந்த மாற்றத்தைச் சாத்தியப்படுத்துறது மக்கள் முடிவுலதான் இருக்கு. நாங்க எந்தக் கட்சியோட `ஏ' டீமும் இல்ல; `பி' டீமும் இல்ல. மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிற மாற்றத்துக்கான டீம்தான் எங்க கட்சி" என்று முடித்தார் ஶ்ரீப்ரியா.



source https://www.vikatan.com/government-and-politics/politics/actress-sri-priya-answers-the-criticism-on-kamal-and-makkal-needhi-maiam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக