மார்ச் 12-ம் தேதி தி.மு.க தலைவர் ஸ்டாலின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டபோது அதில் இடம் கிடைக்காதவர்கள் கடும் அதிருப்திக்கு உள்ளானார்கள். அ.தி.மு.க-வில் சீட் கிடைக்காமல் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்த சேந்தமங்கலம் சந்திரசேகரன், பெருந்துறை தோப்பு வெங்கடாசலம் போல தி.மு.க-விலும் சிலர் சுயேச்சையாகப் போட்டி வேட்பாளர்களாக களமிறங்க ஆயத்தமானார்கள். இனி அத்தகைய பட்டியலில் உள்ளவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்கிறது அறிவாலய வட்டாரம்.
ஏன்? என்ற கேள்வியுடன் அறிவாலய முக்கியப்புள்ளியைத் தொடர்பு கொண்டோம்.``ஐபேக், மாவட்டச் செயலாளர்கள் என இருவரது வேட்பாளர் பட்டியலையும் தனி டீம் கொண்டு ஆராய்ந்த ஸ்டாலின், முழுமையாகப் பட்டியலையே மாற்றினார். எவரது உதவியுமின்றி தனி ஒருவனாக வீட்டில் இரவில் அமர்ந்து கைப்பட பட்டியலைத் தயார் செய்தார் ஸ்டாலின். வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைக்காதவர்கள் கண்டிப்பாக அதிருப்தி அடைந்திருப்பார்கள் என்பது ஸ்டாலினுக்குத் தெரியாமல் இல்லை. என்ன செய்வது? 173 வேட்பாளர்களுக்கு மட்டும்தானே வாய்ப்பு கொடுக்க முடியும்! அதனால்தான், அதிருப்தியாளர்களைச் சரிக்கட்ட தற்போது வேறொரு திட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறார்.
இதன்படி, தமிழகம் முழுவதும் சீட் கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கும் உண்மையான விசுவாசிகளை அடையாளம்காண ஒரு டீமைக் களமிறக்கியிருக்கிறார் ஸ்டாலின். வேட்பாளர் பட்டியலை ஸ்கேன் செய்த அதே டீம்தான் இப்போது இந்தப் பணியிலும் ஈடுபட்டுள்ளது. பட்டியல் முடிவானதும் அதில் உள்ளவர்களுக்கு வாரியங்களில் தலைவர் பதவி கொடுக்கப்படவிருக்கிறது. இது பொதுவாக எல்லாக் கட்சிகளிலும் சொல்லும் வாடிக்கையான சொல்தான் என்று நினைக்கலாம். ஆனால், தி.மு.க ஆட்சியில் இருந்தவரை வாரியத் தலைவர் பதவிகள் அதிகாரிகளுக்குத்தான் கொடுக்கப்பட்டு வந்தனவே தவிர, கட்சிக்காரர்களுக்கு கொடுத்ததில்லை.
அந்த வகையில், தற்போது வாரியத் தலைவர் பதவிகளை சீட் கிடைக்காத உடன்பிறப்புகளுக்கு கொடுக்கலாம் என ஸ்டாலின் முடிவெடுத்திருக்கிறார். இந்த பிராசஸ் நடந்துகொண்டிருக்கும் அதே வேளையில், தற்போது போட்டியிடும் எம்.எல்.ஏ-க்களில் ஒரு மாவட்டத்தில் எத்தனை பேர் ஜெயிப்பார்கள்... அவர்களில் யாரை கேபினட் அமைச்சராக அமர்த்தலாம் என்பது குறித்து ஆராய டெல்லியிலிருந்து ஸ்டாலினின் நண்பர் ஒருவர் மார்ச் 25-ம் தேதி தமிழகம் வரவிருப்பதாகவும் தகவல்" என்றார் விரிவாக.
source https://www.vikatan.com/news/politics/stalins-next-plan-for-the-peoples-who-were-upset-in-candidate-selection
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக