Ad

புதன், 17 மார்ச், 2021

ஆத்தூர் திமுக வேட்பாளர் ஜீவா ஸ்டாலினை மாற்றிய காரணம் என்ன?

``செல்வராஜ் மனைவி அங்கம்மாள். இருவருக்கும் பிறந்த பெண் தான் ஜீவா. இவர் முற்றிலும் ஒரு வன்னியர். இவரது தந்தையை விட்டு அவரது தாயார் அங்கம்மாள் ஆத்தூரில் உள்ள சிவாஜி என்ற ஆதிதிராவிடரை வாழ்க்கை துணையாக சட்டத்திற்கு புறம்பாக சேர்த்துக் கொண்டார். இதை வைத்துக் கொண்டு ஜாதி பெயரை மாற்றி ஆதிதிராவிடர் என சான்று பெற்றுள்ளார்''

தமிழகத்தின் 16-வது சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடக்க இருக்கிறது. அதற்கான வேட்பாளர் பட்டியலை கடந்த 12-ம் தேதி தி.மு.க அறிவித்தது. சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக ஜீவா ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். அதையடுத்து ஜீவா ஸ்டாலின் மிகுந்த மகிழ்ச்சியோடு தேர்தல் பணிகளைத் தொடங்கினார். ஆனால் அந்த மகிழ்ச்சி ஓரிரு நாள்கள் கூட நீடிக்கவில்லை. ஜீவா ஸ்டாலின் வாபஸ் பெறப்பட்டு, அவருக்கு பதிலாக சின்னதுரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

மக்கள் முற்றுகை

ஜீவா ஸ்டாலின் நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன?

ஆத்தூர், தனித் தொகுதி என்பதால் அங்கு பட்டியலினத்தைச் சேர்ந்தவரே வேட்பாளராக முடியும். ஆனால், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜீவா ஸ்டாலின் பட்டியல் சமுதாயத்தை சேர்ந்தவரில்லை என அரசல் புரசலாக பேசப்பட்டது. இந்நிலையில் நேற்று முன் தினம் ஆத்தூர் புங்கவாடி ஊராட்சி, எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் ஆத்தூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் துரையைச் சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில், ``சட்டமன்ற தேர்தல் 2021-ல் சேலம் மாவட்டம் ஆத்தூர் தனித் தொகுதிக்கு தி.மு.க வேட்பாளர் ஜீவா ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை. வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஜீவாவின் தாத்தா கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகில் உள்ள அரியபெருமானூர் கிராமத்தில் வசித்து வந்தார். அவர் பெயர் கோபால் (சமையலர்) ஆவார். இவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்.

இவரது மகன் செல்வராஜ், மனைவி அங்கம்மாள். இருவருக்கும் பிறந்த பெண் தான் ஜீவா. செல்வராஜிடம் இருந்து விலகிய ஜீவாவின் தாயார் அங்கம்மாள், ஆத்தூரில் உள்ள சிவாஜி என்ற ஆதிதிராவிடரை வாழ்க்கைத் துணையாக கொண்டு வாழ்ந்து வருகிறார். இதைக் காரணமாக வைத்துக் கொண்டு சாதி பெயரை மாற்றி ஆதிதிராவிடர் எனச் சான்று பெற்றுள்ளார்.

அவரது கணவர் ஸ்டாலின் ஜங்கமர் சாதியைச் சேர்ந்தவர். இவர் ஏற்கனவே ஆத்தூர் நகராட்சியில் எஸ்.சி சேர்மன் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து மனு அளித்தார். அது தள்ளுபடி ஆனது குறிப்பிடத்தக்கது. இதனை நன்கு அறிந்து, முன்கூட்டியே சாதிச் சான்றினை பொய்யாக பெற்றுள்ளார் ஜீவா. உண்மையாக அவரது பூர்வீகத்தை ஆய்வு செய்ய வேண்டும்.'' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்தே தி.மு.க தலைமை ஆத்தூர் தனி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜீவா ஸ்டாலினை நீக்கி விட்டு முன்னாள் எம்.எல்.ஏ சின்னதுரையை வேட்பாளராக அறிவித்து இருக்கிறது.

ஆத்தூர் வேட்பாளர் சின்னதுரை

இதுபற்றி ஜீவா ஸ்டாலின் தரப்பிடம் கேட்டபோது, ``ஜீவா பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த சிவாஜியின் மகளாக இருக்கிறார். பட்டியல் சமுதாயத்தில் தான் வாழ்ந்து வருகிறார். சாதியை மாற்றி போட்டியிட வேண்டும் என்ற எண்ணமோ, நோக்கமோ அவருக்கு இல்லை. தி.மு.க மீது காழ்புணர்ச்சி உள்ளவர்களே இப்படி உண்மையற்ற குற்றச்சாட்டைக் கிளப்பி இருக்கிறார்கள்'' என்றார்கள்.



source https://www.vikatan.com/news/politics/reason-why-dmk-replaced-athur-candidate-jeeva-stalin

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக