Ad

வியாழன், 18 மார்ச், 2021

தான்சானியாவின் `புல்டோசர்’ அதிபர் ஜான் மகுஃபுலி மறைவு - முடிவுக்கு வந்தது நீண்ட நாள் சர்ச்சை!

தான்சானியா நாட்டு அதிபர் ஜான் மகுஃபுலி உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். ` புல்டோசர்’ என்று அழைக்கப்படும் அவருக்கு வயது 61. கடந்த சில வாரங்களாகவே மகுஃபுலியின் உடல் நிலை குறித்த சந்தேகங்கள் நீடித்து வந்த நிலையில் தான்சானியா அரசு அவரது மரணத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தியிருக்கிறது.

மகுஃபுலி, கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு சந்தேகப் பார்வையக் கொண்டிருந்தவர். கொரோனா பரவல் உலகம் முழுவதும் தீவிரமடைந்திருந்த 2020 மே மாதத்தில், கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை வெளியிடுவதை நிறுத்தினார். தனது நாட்டில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்று அறிவித்தார். மகுஃபுலியின் இந்த அறிவிப்பு, உலக சுகாதார மையத்தால் அதிர்ச்சியோடு பார்க்கப்பட்டது.

ஜான் மகுஃபுலி

மேலும், லாக்டவுன் என்பது தேவையற்ற நடவடிக்கை என்று கருதிய அவர், தனது அண்டை நாடுகள் ஊரடங்கு அறிவித்ததற்காக விமர்சனம் செய்து வந்தார். முகக்கவசம் அணிவதை ஏளனம் செய்தார். கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை தன் நாடு சுயமாகப் பரிசோதித்து சரிபார்க்கும் வரை நிராகரித்து வந்தார். கொரோனா தடுப்பு மருந்துகள் மீது சந்தேகம் கொண்டிருந்தார்.`` தடுப்பூசிகள் ஆபத்தானவை. ஆப்ரிக்கா வளம் நிறைந்த நாடு. அதன் வளங்கள் பிற நாடுகளுக்கு தேவைபடுகிறது. அதற்காகவே தடுப்பூசியைக் கொண்டு வருகிறார்கள். மக்கள் இது போன்ற பொருட்களோடு மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.” என்றார்.

கொரோனா நோய் ஒரு சதிச் செயல் என்றும், மருந்துகள் தன் நாட்டின் வளங்களை சுரண்டும் நோக்கில் உருவாக்கப்பட்டவை என்றும் திடமாக நம்பிய அவருக்கு, கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக சர்ச்சை கிளம்பியது. காரணம் கடந்த மூன்று வாரங்களாக பொதுவெளியில் அவர் காணப்படவில்லை. `கொரோனா வைரசின் பாதிப்பைக் குறைத்து மதிப்பிட்ட அவர் கொரானா வைரஸ் பாதிப்பாலேயே சிகிச்சை பெற்று வருகிறார். அதனால் தான் அவர் பொதுவெளிக்கு வரவில்லை’ என்று அவரைச் சுற்றி வதந்தி பரவியது. பிப்ரவரி 24 ஆம் தேதிக்குப் பின் செய்திகளிலோ, பொது நிகழ்ச்சிகளிலோ அவர் பங்கேற்கவில்லை. எதிர்க்கட்சியினர் #WhereIsMagufuli என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்தனர். இதனால் மகுஃபுலி உடல்நிலை குறித்த சர்ச்சை தீவிர பேசு பொருளானது.

சமியா சுளுஹு ஹசன்

இந்நிலையில், மகுஃபுலியின் மரணத்தை அறிவித்த அந்நாட்டு துணை ஜனாதிபதி சமியா சுளுஹு ஹசன், `கடந்த 10 ஆண்டுகளாக மகுஃபுலி இதய்நோயால் அவதிப்பட்டு வந்தார். கடந்த சில வாரங்களாக நோயின் தீவிரம் அதிகரித்தது. வணிகத் தலைநகரான டர் இ ஸலாமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்” என அறிவித்தார்.

மகுஃபுலியின் மரணத்தைத் தொடர்ந்து துணை அதிபராக உள்ள சமியா சுளூஹு ஹசன் தான்சானியவின் அதிபராகப் பொறுப்பேற்க உள்ளார். 1961-ம் ஆண்டு தான்சானியா சுதந்திரம் பெற்ற பிறகு அதிபராகும் முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/general-news/tanzania-president-john-maufuli-dies

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக