Ad

வியாழன், 18 மார்ச், 2021

ஊழிக்காலம் - 9 | அடுத்த நூற்றாண்டின் பெட்ரோலியம் இதுதான்! ஏன் தெரியுமா?

காலை எழுந்தவுடன் வீட்டுக்குழாயைத் திறந்தால் தண்ணீர் அருவிபோலக் கொட்டுகிறதா? நீங்கள் கொடுத்துவைத்தவர். உலகில் எல்லாருக்கும் அது கிடைப்பதில்லை, ஏன் எதிர்காலத்தில் உங்கள் பேரன்/பேத்திகளுக்கே அது கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

88 கோடிக்கும் மேற்பட்ட உலக மக்களுக்கு வீட்டிலிருந்து குறைந்தது ஆறு கிலோமீட்டர் பயணித்தால் மட்டுமே நீர் கிடைக்கும். சுத்தமான குடிநீர் கிடைக்காததால் தொற்றுநோயில் இறப்பவர்கள், அன்றாட குடிநீர்த் தேவைகளுக்கே பல கிலோமீட்டர் பயணிக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள், கழிவுநீர் கலந்த தண்ணீர் என்றாலும் அதையே பயன்படுத்தவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் என்று பலரோடு ஒப்பிட்டுப்பார்த்தால், தண்ணீர் கிடைக்கிற எல்லாக் குடும்பங்களுமே நல்லதொரு வாழ்க்கையை வாழ்கின்றன என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

"அடுத்த நூற்றாண்டின் பெட்ரோலியமாக இருக்கப்போவது தண்ணீர்தான்" என்கிறார்கள் மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள். கார்ப்பரேட் நிறுவனங்களோ, "அது தண்ணீர் அல்ல, திரவத் தங்கம். மிக முக்கியமான பண்டம் அது...." என்று சப்புக்கொட்டி திட்டங்கள் தீட்டுகின்றன. "அது ஒரு இயற்கை வளம், அது பண்டம் அல்ல. விற்பனைப் பண்டமாக நீங்கள் இயற்கையை மாற்றி அமைத்துச் சீரழித்ததெல்லாம் போதும், தண்ணீரையாவது விட்டு வையுங்கள்" என்று கெஞ்சுகிறார்கள் சூழலியல் வல்லுநர்கள்.

குடிநீர்
எது எப்படியோ, அடுத்த சில தசாப்தங்களில், உலக அரசியலிலும் சமூக இயங்கியலிலும் தண்ணீர் ஒரு முக்கியமான பங்கு வகிக்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை.

உலகில் உள்ள மொத்த நீரில், கடலில் இருக்கும் உவர்நீர், பனிப்பாறைகளில் உறைந்திருக்கும் நீர் தவிர, நாம் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருப்பது வெறும் 1% நீர் மட்டுமே என்பதை நாம் பல இடங்களில் படித்திருக்கிறோம். யோசித்துப் பார்த்தால், இவ்வளவு குறைந்த நீர் ஆதாரத்தைக் கொண்டு எப்படி மனித இனம் சமாளிக்க முடியும் என்பது மலைப்பாகத்தான் இருக்கும். ஆனால், பிரச்னை அதுவல்ல என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உண்மையில், நமக்குத் தேவையான அளவு தண்ணீர் இருக்கிறது என்றாலும், அதை ஒழுங்காக மேலாண்மை செய்யாமல் நாம் நீர் வளங்களைச் சீரழித்துவிட்டோம் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

உலக அளவில் நிலவும் நீர்த் தட்டுப்பாட்டுக்கு நான்கு முக்கியமான காரணங்களை முன்வைக்கிறார் அறிவியலாளர் டேவிட் வாலஸ் வெல்ஸ்:
  1. அரசுகளின் பொறுப்பற்ற தன்மையாலும் அலட்சியத்தாலும் நீர்வளங்கள் மோசமாக மேலாண்மை செய்யப்படுவது.

  2. மோசமான நீர்க்கட்டமைப்பு.

  3. தண்ணீருடன் கழிவுநீர் கலப்பது.

  4. நகரமயமாக்கலின்போது காட்டப்படும் அலட்சியப்போக்கு.

தண்ணீருக்கான தேடலும், அதை மேலாண்மை செய்வதற்கான முயற்சியுமே மனித நாகரிகத்தின் ஆரம்பப் புள்ளி. நீரை ஒழுங்காகச் சேகரித்துப் பயன்படுத்திய நாகரிகங்கள் எல்லாமே வெற்றிபெற்றிருக்கின்றன, நீர் மேலாண்மையில் தவறிய நாகரிகங்கள் வெற்றிபெற்றதில்லை. 21ம் நூற்றாண்டின் மனிதசமூகமும் நீர் மேலாண்மையில் தடுமாறிக்கொண்டிருக்கிறது. அது நம் வீழ்ச்சிக்குக் காரணமாகிவிடுமா என்பதே மானுடவியலாளர்களின் கவலை.

ஏற்கெனவே தண்ணீர்த் தட்டுப்பாட்டை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிற உலகத்துக்குள் புதிய அச்சுறுத்தலாக வந்திருக்கிறது காலநிலை மாற்றம். காலநிலை மாற்றத்தால் வழக்கமான நீர்ச் சுழற்சி (Water cycle) சீர்குலைகிறது. சமநிலையின்றி நீர்ச்சுழற்சி இயங்கும்போது, நீர் ஆதாரங்கள் பாதிக்கப்படுகின்றன. எதிர்பாராத மழை, பருவமழை பொய்த்தல் ஆகியவற்றால் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து குறையும். அதீத வெள்ளப்பெருக்கு, குடிநீர்க் குழாய்களில் கலப்படத்தை ஏற்படுத்தி, அதைக் குடிக்கத் தகுதியில்லாத நீராதாரமாக மாற்றும். வெள்ளப்பெருக்கும் மழையும் ஏற்படும்போது, குடிநீரில் கழிவுநீர் கலப்பது தொடர்ந்து அதிகரிக்கும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட மொத்தப் பேரிடர்களில், 90% மழைவெள்ளத்தாலோ வறட்சியாலோ ஏற்பட்டவைதான்! இரண்டுமே நீர்த்தேக்கங்களை பாதிக்கக்கூடியவை.

சென்னை - மழை

காலநிலை மாற்றத்தால் சராசரி வெப்பநிலை அதிகரிக்கும்போது, குடிநீரில் கிருமிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. அதிக வெப்பநிலையில் வேகமாக வளரும் கிருமிகள், குடிநீர்த் தொட்டிகளில் பரவி தொற்றுநோய்களை ஏற்படுத்தும். கடல்நீர் உட்புகுதல், கடல்மட்டம் அதிகரித்தல் ஆகியவற்றால், நன்னீர் உள்ள நீர்நிலைகளிலும் கடல்நீர் கலந்து, அவையும் குடிக்கத் தகுதியற்றவையாக மாறும்.

தண்ணீர்த் தட்டுப்பாட்டால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள இடங்களில், காலநிலை மாற்றத்தால் ஏற்படவிருக்கும் இடர்கள், பிரச்னையின் தீவிரத்தை அதிகப்படுத்தும். 2050-க்குள் உலக மக்கள் தொகையில் பாதிப்பேர் குடிநீர்த் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுவார்கள்!

இந்தியாவில் 12%க்கும் மேற்பட்ட மக்கள் தொகை, முழுக் குடிநீர்த் தட்டுப்பாட்டை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் 21 நகரங்களில், நிலத்தடி நீர் முழுவதும் தீர்ந்துபோகும் அபாயம் இருக்கிறது. 2018-ல் வெளிவந்த நிதி ஆயோக் அறிக்கை, இந்தியாவில் 60 கோடி மக்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது. பல குடிநீர்க் குழாய்களில் கழிவுநீர்க் கலப்பு இருக்கிறது. 2030-க்குள் இந்திய மக்கள் தொகையில் நாற்பது சதவிகிதத்தினருக்குக் குடிநீர் கிடைக்காது என்கிறது ஒரு கணிப்பு! அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.

இந்தியாவின் முக்கியமான பனிமலையான இமயமலைத் தொடர், குடிநீரை வழங்கும் முக்கிய நதிகளுக்கான நீராதாரமாக இருக்கிறது. ஆனால், 2100-க்குள் காலநிலை மாற்றத்தால் இமய மலையில் உள்ள 40% பனிப்பாறைகள் உருகிவிடும் என்று சொல்லப்படுகிறது. பனிப்பாறைகள் குறையும்போது, அங்கிருந்து வரும் நதிகளுக்கும் நீர்வரத்து குறையும், நதிகளை நம்பியிருக்கும் நீர் விநியோகத் திட்டங்களும் பாதிக்கப்படும்.

2018ன் ஆகஸ்ட் மாதத்தை, ஆப்பிரிக்காவின் கேப் டவுன் மக்கள் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். "நிலத்தடி நீராதாரங்கள் முழுவதுமாக அழிந்துவிட்டது" என்று தெரிவித்த கேப் டவுன் நிர்வாகம், 'Day Zero' என்கிற பூஜ்ஜிய நாளை அறிவித்தது. எதிர்காலத்தில் இந்தியாவிலும் பல நகரங்களில் இந்தப் பூஜ்ஜிய நாள் அறிவிக்கப்படலாம். 2050க்குள் உலகத்தின் பெருநகரங்களில் உள்ள மொத்த நீர் வளம் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே பாக்கி இருக்கும் என்று எச்சரிக்கிறது உலக வங்கி!

Water Scarcity

உலக அறிக்கைகளில் 'Water Stressed country' என்றே இந்தியா வகைமைப்படுத்தப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை நீர் ஆதாரங்கள், நீர் நிலைகளைப் பயன்படுத்துவதில் இருக்கிற சாதியப் படிநிலைகள் ஒரு கூடுதல் சிக்கலை முன்வைக்கின்றன. இங்கு நீர்வளத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு அனைவருக்கும் சமமாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவதும் முக்கிய வேலையாக இருக்கிறது.

தண்ணீருக்கு மாற்று கிடையாது. நம் உடலின் எல்லா இயக்கங்களுக்கும் தண்ணீர் தேவை. "நம் உடல் நீரில் 1% குறைந்தால் அதற்குப் பெயர் தாகம். அதுவே 12% குறைந்தால் அதன் பெயர் மரணம். இவ்வளவு ஏன்? நீரில்லாது நம் மூச்சுக்கூட வெளிவராது. நம் ஒருநாள் மூச்சில் வெளியாவது ஒரு கோப்பை நீர்!" என்று எழுதுகிறார் சூழலியல் எழுத்தாளர் நக்கீரன்.

தினசரி சில நூறு லிட்டர் தண்ணீர் கிடைத்தால் மட்டுமே நமது அன்றாட வேலைகளை ஒழுங்காக முடிக்க முடியும். 2010ல் ஐக்கிய நாடுகள் சபை, "சுத்தமான குடிநீர் என்பது அடிப்படை மனித உரிமை" என்று அறிவித்தது. ஆனால் அந்த அடிப்படை உரிமைக்கே அச்சுறுத்தலாக வந்துவிட்டது காலநிலை மாற்றம்.

5000 வருட மனித வரலாற்றில், தண்ணீரால் மட்டுமே 400க்கும் மேற்பட்ட பூசல்கள், வன்முறைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. சமீப காலங்களில் இது அதிகரித்துவருகிறது என்பதே உண்மை. "மூன்றாம் உலகப்போர் என்பது தண்ணீரால்தான் நடக்கப்போகிறது" என்பது வெற்றுக்கூச்சல் அல்ல, அது ஒரு எதிர்காலக் கணிப்பு. தண்ணீர்த் தட்டுப்பாட்டால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் பட்டியலில் இருக்கிற இந்தியா, இதை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பது தெரியவில்லை. இந்தியாவின் பல இடங்களில் வறட்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம், நிலத்தடி நீர் குறைந்துவருகிறது. தண்ணீரை, மழையை நம்பி இருக்கிற விவசாயம் எப்படிப்பட்ட பாதிப்பை சந்திக்கப்போகிறது என்பதை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள்.

தண்ணீர்ப் பஞ்சம்

"காலநிலை மாற்றம் ஒரு கொடூரமான அரக்கன் என்றால், தண்ணீர்த் தட்டுப்பாடு என்பது அவனுடைய கூர்மையான கோரைப்பல்" என்கிறார் தண்ணீர் குறித்து ஆராய்ந்துவரும் விஞ்ஞானி பீட்டர் க்ளீயிக். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் முக்கியமான பாதிப்புகள் தண்ணீர்த் தட்டுப்பாட்டைச் சார்ந்தவையாகவே இருக்கும் என்கிறார் அவர்.

"தவிச்ச வாய்க்குத் தண்ணி தர்றது" என்பது நாம் அடிக்கடி சொல்கிற ஒரு வாக்கியம். எதிர்காலத்தில் தவிக்கிற வாய்களுக்குத் தண்ணீர் கிடைப்பது, காலநிலை மாற்றத்தை நாம் கட்டுப்படுத்துவதில்தான் அடங்கியிருக்கிறது. வீட்டுக்கு யாராவது வந்ததும் தண்ணீர் தருகிற விருந்தோம்பல் மரபு கொண்டவர்கள் நாம். நாளை அது பணம் படைத்தவர்களால் மட்டுமே முடிகிற சொகுசு வழக்கமாக மாறலாம்!

நீர் மேலாண்மையில் கவனம் செலுத்துவது, நீர்நிலைகள் பராமரிப்பு, நீர் அரசியலின் பிரச்னைகளை சரிசெய்வது, அனைவருக்கும் நீர் கிடைக்க வழி செய்வது, காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது, நீர் வீணாவதைத் தடுப்பதற்கான முயற்சிகள், மழைநீர் சேகரிப்பு, நீர்த்தேக்கங்களைப் பராமரிப்பது என்று பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

காலநிலை மாற்றத்தால் பல பேரிடர்கள் உண்டாகும் என்கிறார்களே? எந்த மாதிரியான பேரிடர்கள் வரும்? அவற்றின் பாதிப்பு எப்படிப்பட்டது?

அடுத்த கட்டுரையில் பேசலாம்.

- Warming Up...



source https://www.vikatan.com/government-and-politics/environment/water-scarcity-how-this-is-going-to-affect-the-world

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக