Ad

செவ்வாய், 2 மார்ச், 2021

நெல்லை: `போடுங்கம்மா ஓட்டு..’ தொகுதி பங்கீடு முடியும் முன்னே பிரசாரத்தைத் தொடங்கிய பா.ஜ.க!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இடம்பெற்றுள்ளது. பா.ஜ.க-வுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது பற்றியும் எந்தெந்தத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது தொடர்பாகவும் பா.ஜ.க தலைவர் முருகன் தலைமையில் நான்கு கட்டமாகப் பேச்சுவார்த்தை நடந்தது. இருப்பினும், இன்னும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படவில்லை.

Also Read: `முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் தெளிவாக இருக்கிறோம்!’ - பா.ஜ.க மாநில தலைவர் எல். முருகன்

இந்த நிலையில், நெல்லை சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் பா.ஜ.க-வினர் சுவர் விளம்பரங்களை எழுதத் தொடங்கி விட்டார்கள். ஏற்கெனவே மாநிலத் தலைவர் எல்.முருகன் நேரில் வந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அத்துடன் தேர்தல் காரியாலயத்தைத் தொடங்கி வைக்கவும் திட்டமிட்டிருந்தார். தொகுதிப் பங்கீட்டுக்கு முன்பாக பா.ஜ.க-வினரின் செயல்களால் உள்ளூர் அ.தி.மு.க-வினர் அதிருப்தி அடைந்ததால் தேர்தல் காரியாலயம் திறப்பதை பா.ஜ.க ஒத்தி வைத்தது.

இந்த நிலையில், நெல்லை டவுன் பகுதியில் பா.ஜ.க சார்பாக பேரணி நடந்தது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பொறுப்பாளரான குஷ்பு கலந்துகொண்டு பேரணியைத் தொடங்கி வைத்தார். இந்தப் பேரணியின் போது, தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படும் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார்.

நயினார் நாகேந்திரன் தேர்தல் பிரசாரம்

பேரணியின்போது திறந்த ஜீப்பில் வேட்பாளர் போலவே நயினார் நாகேந்திரன் நின்றபடி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். பேரணியில் பங்கேற்றவர்கள், ‘போடுங்கம்மா ஓட்டு.. தாமரை சின்னத்தைப் பார்த்து..’ என கோஷமிட்டபடியே முக்கிய சாலைகள் வழியாகச் சென்றார்கள்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, ”வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க., பாரதிய ஜனதா கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது. மக்கள் மிகத்தெளிவாக உள்ளனர். பாரதிய ஜனதா அரசு தமிழக மக்களுக்காக ஏராளமான நலத்திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறது.

குஷ்பு செய்தியாளர் சந்திப்பு

தற்போதைய நிதிநிலை அறிக்கையிலும் தமிழக மக்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அறிவித்துள்ளது. மத்திய அரசு மீதும் மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.க அரசு மீதும் இதுவரை எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை எனவே மக்கள் மிகப்பெரிய வெற்றியைத் தருவார்கள்.

கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் தமிழகத்தில் பாரதிய ஜனதா எந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பது தெரியவரும். பொதுவாக நிதியாண்டின் இறுதியில் அல்லது தொடக்கத்தில் எரிபொருள் விலை உயர்வு இருக்கத்தான் செய்யும். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைப்பது குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருக்கிறார். அதனால் விரைவில் விலை உயர்வு குறைக்கப்படும்.

நெல்லையில் பா.ஜ.க தேர்தல் பிரசாரம்

மீனவர்களுடன் கடலில் குதித்து குளிப்பது, மீன் பிடிப்பது, பள்ளி மாணவர்களிடம் குஸ்தி போடுவது என ராகுல்காந்தியின் செயல்பாடு மக்களிடம் எடுபடாது. அது நல்ல தலைவருக்கும் அழகல்ல. மக்களுக்காக என்ன திட்டம் உள்ளது என்பதைச் சொல்லவேண்டுமே தவிர இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது” என்றார்.

தமிழகத்தில் பெண் காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லையே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ”அந்த பிரச்னை தொடர்பாக உயரதிகாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எங்கோ ஒரு இடத்தில் நடக்கும் செயலுக்காக ஒட்டுமொத்த தமிழகத்திலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று சொல்லிவிடக் கூடாது” என்று குஷ்பு கூறினார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-started-election-campaign-in-nellai-constituency-for-nainar-nagendran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக