வேலூர் மாவட்ட மக்களிடம் மூச்சுக்கு முந்நூறு முறை, ‘நான் இந்த மண்ணின் மைந்தன்’ என்றுகூறி பெருமிதம் கொள்வார் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன். ‘கலைஞரின் நிழல், பலமுறை அமைச்சர், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர், தி.மு.க பொதுச்செயலாளர்’ என்று பல்வேறு பலம் பொருந்திய துரைமுருகன் பேச்சிலும், ஆற்றலிலும் வல்லமையுடையவர். ‘பதவிக்காகக் கட்சிக்கு வந்தவன் அல்ல; போராளியாக வந்தவன்’ என்று வீரவசனம் பேசும் துரைமுருகன், 1971-ல் காட்பாடி தொகுதியிலிருந்து முதல் முறையாக சட்டமன்றத்துக்குத் தேர்வுசெய்யப்பட்டார். அதன்பின்னர், 1977 மற்றும் 1980-களில் நடைபெற்ற தேர்தல்களில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிக் கனியைப் பறித்தார்.
1984 தேர்தலில் மறுபடியும் காட்பாடியில் போட்டியிட்டபோது தோல்வியைத் தழுவினார். 1989 தேர்தலில் மீண்டும் காட்பாடியிலேயே களமிறங்கி வெற்றி பெற்றார். தி.மு.க ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டதால் 1991-ல் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. காட்பாடியில் போட்டியிட்ட துரைமுருகன் தோல்வியடைந்தார். 1996 தேர்தலில் மீண்டும் காட்பாடியிலேயே களம் கண்டு வெற்றி பெற்றார் துரைமுருகன். அதன்பின்னர், அவருக்கு ஏறுமுகம்தான். 1996-க்குப் பிறகு நடைபெற்ற 2001, 2006, 2011, 2016 ஆகிய தேர்தல்களிலும் துரைமுருகனே வெற்றிபெற்று காட்பாடியைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.
கருணாநிதிக்கு அடுத்தப்படியாக சட்டமன்றத்தில் அரை நூற்றாண்டு கால அனுபவமுடையவராகவும் துரைமுருகன் இருக்கிறார். தொடர்ந்து 25 ஆண்டுகளாக காட்பாடி எம்.எல்.ஏ-வாக இருக்கும் துரைமுருகன் இந்த தேர்தலிலும் களம் காணவிருக்கிறார். இதற்கான விருப்ப மனுவையும் கொடுத்துள்ளார். இந்த நிலையில், ‘‘முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த நான், அடுத்து மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையிலும் இடம்பெறுவேன்’’ என்றும் ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் துரைமுருகன் பேசியிருக்கிறார். ‘உதயநிதி அமைச்சரவை’ என்று சொன்னதில் உள்ள ரகசியத்தை துரைமுருகனிடமே விட்டுவிடுவோம்.
இது ஒருபுறமிருக்க, சொந்த மண்ணிலேயே செல்வாக்குச் சரிந்துவருவதை அறிந்து துரைமுருகன் தரப்பு ஆடிப்போயிருக்கிறது என்று பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள் தி.மு.க நிர்வாகிகள். சொந்த கட்சியினரும் துரைமுருகன்மீது அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதிருப்திக்கு காரணமே துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் என்று கை காட்டுகிறார்கள் தி.மு.க நிர்வாகிகள். நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள் சிலர், ‘‘வேலூர் தி.மு.க-வில் உட்கட்சி மோதல் வெடித்திருக்கிறது. கட்சிக்குள் புதிதாக வந்த முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய் போன்றோர் மூத்த நிர்வாகிகள்மீது மேலிடத்தில் சிண்டு முடியும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
அ.தி.மு.க-விலிருந்து அ.ம.மு.க-வுக்குச் சென்ற விஜய் மீண்டும் அ.தி.மு.க-வுக்கு வந்து சமீபத்தில் தி.மு.க-வில் ஐக்கியமாகியிருக்கிறார். கட்சிக்கு கட்சித் தாவும் விஜய், மீண்டும் எம்.எல்.ஏ கனவில் வேலூர் தொகுதியைக் கேட்டு துரைமுருகனிடம் குட்டிக்கரணம் அடிக்கிறார். கட்சிக்குள் புதியதாக வந்த அவருக்கு சீட் கொடுத்தால், தேர்தல் பணிகளைப் புறக்கணித்துவிடுவோம். வேலூர் எம்.பி-யாக உள்ள கதிர் ஆனந்த் மாவட்டச் செயலாளர் பொறுப்புக்குக் குறி வைத்துள்ளார். துரைமுருகன் மகன் என்பதை தவிர்த்து கதிர் ஆனந்துக்கு வேறென்ன தகுதி இருக்கிறது. கட்சிக்காக காலம் காலமாக உழைத்த நிர்வாகிகள் தொடர்ந்து ஓரம் கட்டப்பட்டுவருகிறார்கள்.
இதையெல்லாம் துரைமுருகனிடம் சொல்ல முடியவில்லை. அவர் பெரும்பாலும் சென்னையிலேயே தங்கியிருக்கிறார். காட்பாடி வீட்டுக்கு வந்தாலும், அவரைச் சந்திக்க உதவியாளர்கள் விடுவதில்லை’’ என்று புலம்புகிறார்கள். விமர்சனங்கள் எழுந்த நிலையில், கடந்த வாரங்களில் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற தி.மு.க-வின் மக்கள் கிராம சபைக்கூட்டங்களில் கலந்துகொண்டார் துரைமுருகன். பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய துரைமுருகன், முக்கியமான கருத்துகளைச் சொல்லப் போகிறார். தொகுதிக்குச் செய்த திட்டங்களைப் பட்டியலிடப் போகிறார் என்று திமுகவினரும், மக்களும் பத்திரிகையாளர்களும் உற்று நோக்கியிருந்தனர்.
அவரோ, ‘‘இங்கே கூடியிருக்கிற மக்கள் அனைவரும் இந்த துரைமுருகனுக்காகக் கண்ணை மூடி இரண்டு நிமிடம் பிரார்த்தனைச் செய்யுங்கள்’’ என்றார். கூட்டத்திலிருந்த சிலர், ‘‘தலைவருக்குத்தான் வயசாகிடுச்சே. பேரப்பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டு வீட்டிலேயே ஓய்வெடுக்கலாமே?’’ என்று வருத்தப்பட்டனர்.
‘‘துரைமுருகன் தேர்தல் நாடகத்தை அரங்கேற்ற ஆரம்பித்துவிட்டார். இனி, மேடைகளில் கண்ணீர் விட்டு அழுவார். இந்த முறை அவரது கண்ணீர் நாடகம் எடுபடாது’’ என்று எதிர்ப்பிரசாரம் செய்துவருகிறது அ.தி.மு.க.
நம்மிடம் பேசிய வேலூர் மாநகர அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, ‘‘பெரியவர் துரைமுருகனின் செல்வாக்கு சரிந்துவிட்டது. மக்கள் மீண்டும் அவரை நம்புவதாக இல்லை. ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்றப் பின்னர் காட்பாடியை கண்டுகொள்வதே இல்லை. அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை சாதாரண தொண்டனும் எம்.எல்.ஏ ஆகலாம், மந்திரி ஆகலாம். கே.வி.குப்பம் சிட்டிங் எம்.எல்.ஏ லோகநாதனை எடுத்துக்கொள்ளுங்கள். ஓய்வுபெற்ற ராணுவ வீரரான அவர் செக்யூரிட்டியாகப் பணிபுரிந்தவர். பின்னாளில், படிப்படியாக உச்சம் தொட்டியிருக்கிறார். இதேபோல், அ.தி.மு.க-வில் பலரைக் காட்ட முடியும். காட்பாடியில் துரைமுருகனைத் தவிர்த்து தி.மு.க-வில் வேறு ஆட்களே கிடையாதா? ஒரு நாளாவது காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றிருப்பாரா துரைமுருகன்?’’ என்று கேள்வி எழுப்பினார் காட்டமாக!
source https://www.vikatan.com/government-and-politics/politics/katpadi-admk-says-duraimurugan-acting-will-not-work-this-time
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக