Ad

திங்கள், 1 மார்ச், 2021

"அந்தப் பெண்ணை திருமணம் செய்கிறீர்களா?" - பாலியல் குற்றவாளியிடம் கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

16 வயது சிறுமியை பலமுறை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டவரிடம் உச்ச நீதிமன்ற நீதிபதி, 'அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளத் தயாரா?' என்று கேட்டது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநில மின்சார உற்பத்தி நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர், மோகித் சுபாஷ் சவான். இவர் பள்ளி மாணவியை சிறார் வதை செய்ததற்காக போக்ஸோ(பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல்) சட்டம் 2012 கீழ் குற்றம் சாட்டப்பட்டவர். இந்நிலையில் மோகித், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு அளித்திருந்தார். அதன் அடிப்படையில் டெல்லி உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

இந்தச் சம்பவம் நடந்தபோது, அந்தச் சிறுமிக்கு வயது 16. தற்போது அவருக்கு வயது 18.

Sexual Abuse (Representational Image)

உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ. போப்டே, குற்றம் சாட்டப்பட்டவரிடம், 'நீங்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய அந்தப் பெண்ணை திருமணம் செய்யத் தயாரா?' என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த குற்றம் சுமத்தப்பட்ட நபர், 'நான் முன்னதாகவே அந்தப் பெண்ணிடம் என்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டேன். ஆனால் அவர் சம்மதிக்கவில்லை. தற்போது எனக்குத் திருமணம் ஆகிவிட்டதால், அந்தப் பெண்ணை திருமணம் செய்ய முடியாது' என்று பதில் அளித்திருக்கிறார்.

நீதிபதி தொடர்து, 'அந்தப் பெண்ணை திருமணம் செய்வதாக இருந்தால் உதவி செய்ய முடியும். இல்லையெனில் உங்கள் அரசு வேலையை இழந்து, அந்தப் பெண்ணை பாலியல் வன்முறை செய்ததற்காக சிறை செல்ல நேரிடும்' என்றார்.

பிரச்னை ஏற்பட்டபோது, குற்றம் சுமத்தப்பட்டவரின் அம்மா பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார் கொடுத்தவுடன், தன் மகனே அவரை திருமணம் செய்துகொள்வதாக சமாதானம் பேசியிருக்கிறார். ஆனால் அதற்கு அந்தப் பெண் மறுத்திருக்கிறார். பின்னர் பேச்சுவார்த்தையில், 'சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு 18 வயது ஆனதும் இந்தத் திருமணத்தை நடத்தலாம்' என்று எழுத்துபூர்வ ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தப் பெண்ணுக்கு 18 வயது ஆன பின்னர், குற்றம் சுமத்தப்பட்டவர் அவரை திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார். அதன் பின்னர்தான் அவருக்கு எதிராக போக்ஸோ வழக்குப் பதியப்பட்டிருக்கிறது என்று, சவானின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட நபர் நான்கு வாரங்கள்வரை கைது செய்யப்பட மாட்டார் என்றும், அதற்குள் அவர் ஜாமீனுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Sexual harassment

சிறுமியை சிறார் வதை செய்ததற்கான தகுந்த தண்டனையை அளிக்காமல், குற்றம் சுமத்தப்பட்டவரிடம் அந்தப் பெண்ணை திருமணம் செய்யுமாறு நீதிமன்றம் கேட்டது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. 'கட்டப் பஞ்சாயத்துகளை கிராமங்களே கைவிட்டு வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நடந்திருக்கும் பஞ்சாயத்து இது' என்று பலரும் கண்டனங்களையும் விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.



source https://www.vikatan.com/social-affairs/women/will-you-marry-her-cji-bobde-asks-accused-of-rape

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக