Ad

திங்கள், 22 மார்ச், 2021

பெட்ரோல், டீசல் விலை ஏன் அதிகரிக்கவில்லை... தேர்தல்தான் காரணமா?

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று அதிகரித்ததால் கோடிக்கணக்கான மக்கள் வேலை இழந்தனர்... வருமானம் இல்லாமல் தவித்தனர். அந்த நேரத்திலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலைகளை உயர்ந்தன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்த காரணத்தால், பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது என்று காரணம் சொல்லப்பட்டது.

தர்மேந்திர பிரதான்

கடந்த மூன்று மாதங்களாக, மக்கள் அதிர்ச்சியடையும் வகையில் பெட்ரோலியப் பொருள்களின் விலைகள் அதிகரித்துவந்தன. சென்னை நிலவரப்படி, கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.93.11 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.86.45 ஆகவும் வீட்டில் உபயோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.835 ஆகவும் உயர்ந்துநின்றது. கடந்த டிசம்பர் மாதம், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.591 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 27-ம் தேதியிலிருந்து பெட்ரோலியப் பொருள்களின் விலைகள் உயரவே இல்லை. காரணம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலை பிப்ரவரி 26-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. விலைகள் உயர்வு அன்று நிறுத்தப்பட்டு, இன்றுவரையிலும் அதே விலையில்தான் பெட்ரோலியப் பொருள்கள் விற்கப்படுகின்றன.

பெட்ரோல்

தேர்தலுக்கும் பெட்ரோல், டீசல் விலைகள் நிர்ணயத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஏனென்றால், பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயம் தொடர்பான கட்டுப்பாடு மத்திய அரசின் கையில் இருந்தது. அந்த கட்டுப்பாட்டை மத்திய அரசு பல ஆண்டுகளுக்கு முன்பு விலக்கிக்கொண்டுவிட்டது. இப்போது பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்கின்றன. அதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தால் இங்கே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலைகளை குறைக்கப்படும். கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், இவற்றின் விலைகள் அதிகரிக்கப்படும். இதுதான் பொதுவான நிலைப்பாடாக இருந்துவருகிறது.

ஆனால், பிப்ரவரி 26-ம் தேதிக்குப் பிறகு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்படவே இல்லை. ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறுவதால் பெட்ரோலியப் பொருள்களின் விலைகளை உயர்த்த வேண்டாம் என்று எண்ணெய் நிறுவனங்களை மத்திய அரசு மறைமுகமாகக் கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பீட்டர் அல்போன்ஸ்

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸிடம் பேசினோம்.

“சமீபத்தில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து நான்கு நாள்கள் உயர்ந்துகொண்டே வந்தது. அதன்படி இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயிக்க வேண்டுமென்றால், ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை இன்றைக்கு ரூ.104 என விற்க வேண்டும். ஆனால், ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் தேதிகளை அறிவித்ததால், பிப்ரவரி 27-ம் தேதியிலிருந்து பெட்ரோலியப் பொருள்களின் விலையேற்றம் நிறுத்தப்பட்டுவிட்டது. அதுவரை, பெட்ரோலியப் பொருள்களின் விலைகள் தினந்தோறும் உயர்த்தப்பட்டுவந்தன.

கடந்த மூன்று மாதங்களாக விலைகளை உயர்ந்திவந்த எண்ணெய் நிறுவனங்கள், பிப்ரவரி 27-ம் தேதியிலிருந்து விலைகள் ஏன் அதிகரிக்கவில்லை? பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானிக்கின்றன என்றும், அரசுக்கு அதில் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் மத்திய அரசு கூறிவந்தது எந்தளவுக்கு பொய் என்பது இப்போது தெரிகிறது.

Also Read: ஸ்டாலினுக்கு காரில்லை; எடப்பாடிக்கு நிலமில்லை; சீமானுக்கு வருமானமே இல்லை!-சொத்துக் கணக்கு சோகங்கள்!

விலைகளை உயர்த்தாமல் இருப்பதால், பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ. 4, டீசல் ஒரு லிட்டருக்கு ரூ. 2 என ஒவ்வொரு நாளும் இழப்பு ஏற்படுவதாக பெட்ரோலியம் நிறுவனங்களின் அதிகாரிகள் பேட்டி அளித்திருக்கிறார்கள். அப்படியென்றால், இதுவரை பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்து வந்ததற்கு மத்திய அரசுதானே காரணம். தேர்தல் நடப்பதால் விலைகளை உயர்த்தாமல் இருக்கிறார்கள் என்றால், இது மக்களை ஏமாற்றும் செயல்தானே? விலைகளை உயர்த்த வேண்டாம் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவு போட்டது யார்?

பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தி தினந்தோறும் மக்களை மத்திய அரசு சித்ரவதை செய்துவந்தது. அந்த சித்ரவதையை தற்போது தள்ளிப்போட்டிருக்கிறார்கள். சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த பிறகு, சித்ரவதையைத் தொடங்கிவிடுவார்கள். தேர்தல் முடிந்த மறுநாளே அதை ஆரம்பிப்பார்கள்” என்றார் பீட்டர் அல்போன்ஸ்.

குமரகுரு

இந்தக் குற்றச்சாட்டுகளை பா.ஜ.க-வின் செய்தித்தொடர்பாளர் குமரகுரு மறுத்தார். அவரிடம் பேசியபோது, “தேர்தலுக்கும் பெட்ரோலியப் பொருள்களின் விலை நிர்ணயத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைகிறது. எனவே, இங்கு பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்படாமல் இருக்கின்றன” என்றார்.

இரண்டு மாதங்களுக்கு மேலாக பெட்ரோலியப் பொருள்களின் விலைகள் உயர்த்தப்படாத காரணத்தால், இழப்புகளை சந்திக்கும் எண்ணெய் நிறுவனங்கள் இரண்டு மாதங்களில் ஏற்பட்ட இழப்பு, வட்டி என எல்லாவற்றையும் சேர்த்து விலைகளை உயர்த்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் கடைசியாக முடிவடையவிருக்கும் மேற்கு வங்கத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலைகள் உயரும் என்று எதிர்பார்க்கலாம். அப்போது, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.105-ஐத் தாண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் கணிக்கிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/why-have-petroleum-prices-not-hiked

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக