Ad

செவ்வாய், 16 மார்ச், 2021

`இங்கு வெற்றி பெறுவது கௌரவப் பிரச்னை!' - கரூரில் மோதும் செந்தில் பாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் சட்டமன்றத் தொகுதியில் தற்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் மோதுவதால், அனல் பறக்கும் தொகுதிகளில் ஒன்றாக கரூர் மாறியிருக்கிறது. 'கரூரில் ஜெயிப்பது எனது கௌரவப் பிரச்னை' என்று இருவரும் பரஸ்பரம் முஷ்டியை முறுக்குவதால், தொகுதியை இருவரது பிரசாரமும் அனல் பறக்கிறது.

சாமி கும்பிடும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளராகவும், அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏவாகவும் இருப்பவர் செந்தில் பாலாஜி. அதேபோல், அ.தி.மு.கவின் கரூர் மாவட்ட செயலாளராகவும், போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் இருப்பவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் தொகுதியின் எம்.எல்.ஏவாக உள்ளார். செந்தில் பாலாஜி அ.தி.மு.கவில் இருந்த காலத்தில் இருந்தே, எலியும், பூனையுமாக வலம் வந்தவர்கள். கடந்த, 2006 - ம் ஆண்டு கரூர் தொகுதியில் நின்று, அ.தி.மு.க சார்பில் செந்தில் பாலாஜி எம்.எல்.ஏவானார். தொடர்ந்து, 2011 - ம் ஆண்டு தேர்தலில் கரூர் தொகுதியில் மீண்டும் ஜெயித்து, போக்குவரத்துத் துறை அமைச்சரானார் செந்தில் பாலாஜி. அப்போது, எம்.ஆர்.விஜயபாஸ்கர் தான்தோன்றிமலை ஒன்றிய செயலாளராக இருந்தார். அப்போது, தான்தோன்றிமலை ஒன்றிய சேர்மன் பதவிக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் முயற்சி செய்ய, தனக்குப் போட்டியாக அவர் வந்துவிடக்கூடாது என்பதற்காக, அதை செந்தில் பாலாஜி தடுத்தார். இதனால், இருவருக்கும் முட்டிக்கொண்டது.

செந்தில் பாலாஜிக்கு வரவேற்பு

இந்த சூழலில், கரூர் எம்.பியாக இருந்த தம்பிதுரைக்கும், செந்தில் பாலாஜிக்கும் பல விசயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், செந்தில் பாலாஜியை பழிவாங்க நேரம் பார்த்திருந்த தம்பிதுரை, செந்தில் பாலாஜிக்கு எதிராக, எம்.ஆர்.விஜயபாஸ்கரை வளர்த்துவிட்டார். 2015 - ம் ஆண்டு செந்தில் பாலாஜி மீது புகார்களை சுமத்தி, அவரது மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் பதவியை ஜெயலலிதாவால் பறிக்க வைத்தார் தம்பிதுரை. அதனால், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு மாவட்ட செயலாளர் பதவியும், 2016 - ம் ஆண்டு தேர்தலில் கரூரில் சீட்டும் தம்பிதுரை வாங்கி கொடுத்தார்.

செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி தொகுதியில் போராடிதான் சீட் வாங்கினார். பணப்பட்டுவாடா பிரச்னையில் அரவக்குறிச்சி தேர்தல் ரத்தாக, கரூரில் வென்ற எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவி தேடி வந்தது. கரூர் தொகுதியில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெறும் 441 வாக்குகளில் வெற்றிபெற்றார். 'அதற்கு காரணம், செந்தில் பாலாஜி நிகழ்த்திய உள்ளடி வேலைகள் தான்' என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பில் சொல்லப்பட்டது. அதன்பிறகு நடந்த மறுதேர்தலில், அரவக்குறிச்சி எம்.எல்.ஏவான செந்தில் பாலாஜியின் பதவி, 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பால் பறிபோனது. அதன்பிறகு, அ.ம.மு.க தாவிய அவர், தொடர்ந்து தி.மு.கவுக்கு இடம்பெயர்ந்தார்.

வாக்கு சேகரிக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

மறுபடியும், கடந்த 2019 - ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அரவக்குறிச்சி எம்.எல்.ஏவானார். இந்த நிலையில், தனது ஆஸ்தான தொகுதியான கரூர் தொகுதிக்கு இந்தமுறை செந்தில் பாலாஜி இடம்பெயர்ந்திருக்கிறார். அதேநேரம், தனது முதல் தொகுதியான கரூரிலேயே எம்.ஆர்.விஜயபாஸ்கரும் களம் கண்டிருக்கிறார். இதுவரை, மறைமுகமாக மோதி வந்த இருவரும், ஒரே தொகுதியில் போட்டியிடுவதன் மூலம், நேரடி போட்டியில் இறங்கியிருக்கிறார்கள்.

Also Read: `கரூரில் திமுக-வை செந்தில் பாலாஜி ஒழித்துக்கட்டிவிட்டார்!' - தம்பிதுரை

இவர்கள் இருவரும் ஒரே தொகுதியில் போட்டியிடுவதை விரும்பாத இவர்களது சமூகத்தை சேர்ந்த பெரியவர்கள், 'நீங்கள் இருவரும் ஜெயிப்பது முக்கியம். யாராவது ஒருத்தர் அரவக்குறிச்சியில் போட்டியிடுங்கள்' என்று பேசியதாக சொல்லப்பட்டது. குறிப்பாக, செந்தில் பாலாஜியிடம், 'நீங்க இப்போது அரவக்குறிச்சியில் எம்.எல்.ஏ. அங்கேயே மறுபடியும் நில்லுங்க' என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், செந்தில் பாலாஜி அதற்கு மறுப்பு தெரிவித்து, கரூரிலேயே களத்தில் குதித்திருக்கிறார். இருவரும், கரூர் தொகுதிக்கு உட்பட்ட கோடங்கிப்பட்டி முத்தாளம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, பிரசாரத்தை தொடங்கியிருக்கிறார்கள்.

வாக்கு சேகரிக்கும் செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி, "எம்.ஆர்.விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். அவர், அப்படி வாங்கி குவித்த சொத்து பத்திரங்களை தினம் ஒன்று என்று வெளியிடுவேன். அதேபோல், அவர், வாக்குகளை கவர, குடும்பத்துக்கு ஒரு பவுன் வீதம் தங்க நாணயம் தருவதாக சொல்றாங்க. பத்து பவுன் கொடுத்தாலும், அவரால் ஜெயிக்க முடியாது. நான் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்பேன்' என்று கூறி அதிர வைத்தார்.

பதிலுக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கரோ, "செந்தில் பாலாஜி வாங்காத சொத்தில்லை, செய்யாத தொழில் இல்லை. 12 தொழில்களை செய்து வருகிறார். கடந்த தேர்தலில், அரவக்குறிச்சி தொகுதியில் 25,000 பேர்களுக்கு தலா 3 சென்ட் நிலம் தருவேன் என்று சொல்லி தான் ஜெயித்தார். ஆனால், ஒருத்தருக்கு கூட இடம் தரவில்லை. மக்களை ஏமாற்றிவிட்டார். இந்தமுறை என்னென்ன பொய்களை சொல்லப் போறாரோ" என்று பேசி, செந்தில் பாலாஜிக்கு ட்ஃப் ஃபைட் கொடுத்து வருகிறார்.

வாக்கு சேகரிக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அதேபோல், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சணப்பிரட்டியில் கொண்டுவரப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி, புகளூர் தடுப்பணை, அம்மா சாலை, கன்னியாகுமரி டு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் 5 இடங்களில் கட்டப்படும் மேம்பாலங்கள், பேருந்து நிலையம், குளத்துப்பாளையம் குகைவழிப் பாதை என்று பல திட்டங்களை தனது சாதனையாக சொல்லி வாக்கு கேட்டு வருகிறார். ஆனால், அதற்கு பதிலடி கொடுக்கும் செந்தில் பாலாஜி, 'அத்தனை திட்டங்களையும் நான் அமைச்சராக இருக்கும்போது கொண்டு வந்தேன். அதை உரிமை கொண்டாட அவருக்கு உரிமையில்லை" என்று கூறுகிறார்.

இதற்கிடையில் செந்தில் பாலாஜி, டோர் டு டோராக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். தேர்தல் சம்பந்தமான கட்டமைப்புகள், வாக்காளர்களை கவர தனி டீம், பிரசார நிகழ்ச்சிகளுக்கு அதிக மக்களை திரட்டுவது, பிரசாரத்தில் தென்படும் குழந்தைகள், சிறுவர்களை தூக்கி கொஞ்சுவது, சிறுவனின் பிறந்தநாள் விழாவில் கேக் வெட்டுவது என்று நாலு கால் பாய்ச்சலில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். எம்.ஆர்.விஜயபாஸ்கரும் பதிலுக்கு, திரளான கட்சியினரோடு போய் வாக்கு கேட்டு வருகிறார். வேன், பைக், நடைபயணம் என பல்வேறு வழிகளில் சென்று, மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறார். இவரது பிரசாரத்திலும் அனல் பறக்கிறது. இந்த நிலையில் செந்தில் பாலாஜி, "நான் பிரசாரத்துக்கு போகும் இடங்களில் மக்கள் கூடுவதை தடுக்க, அங்குள்ள மக்களை வாகனம் வைத்து அழைத்துப் போய், வேறு இடங்களில் சும்மா அமர வைக்கிறார்கள். அவர்களுக்கு மதிய சாப்பாடு கொடுத்து, பிரசாரம் முடியும் தருவாயில், அவர்களை வீடுகளில் கொண்டுபோய் விடுகிறார்கள். என்ன பண்ணினாலும், எனது வெற்றியை தடுக்க முடியாது" என்று எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிராக குற்றம்சாட்டுகிறார்.

வாக்கு சேகரிக்கும் செந்தில் பாலாஜி

இப்படி, இருவரது பிரசாரமும், கரூர் தொகுதியையே கதிகலக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இரண்டு பேரும் தொகுதியில் தாராளமாக செலவு செய்வதாக தகவல். இதனால், போட்டி கடுமையாக இருக்கிறது. இருந்தாலும், தேர்தல் வியூகம், மக்களை திரட்டுவது, நேர்த்தியான நிகழ்ச்சிகளின் அணிவகுப்பு, வாக்கு கேட்கும் உத்தி என்று முதல் சுற்று பிரசார ரேஸில், செந்தில் பாலாஜி சற்று முந்தவே செய்கிறார். ஆனால், இருவரும் கரூரில் ஜெயிப்பதை கௌரவப் பிரச்னையாக கருதுகிறார்கள். அவரவர் கட்சிகளில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும், அரசியலில் தொடர்ந்து கோலோச்சவும் கரூரில் வெற்றி பெற வேண்டியது இருவருக்கும் பெரிய 'டாஸ்க்' ஆக முன் நிற்கிறது. இருந்தாலும், வெற்றி என்பது ஒருவருக்கு தானே?.



source https://www.vikatan.com/news/election/mrvijayabaskar-vs-senthil-balaji-karur-election-ground-report

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக