Ad

திங்கள், 15 மார்ச், 2021

சீமான் வாழ்க்கை வரலாறு: திராவிடம், ஈழம், தமிழ்த் தேசியம் - முழுமையான தொகுப்பு

பிறப்பும் பின்னணியும்:

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டத்திலுள்ள அரணையூர் எனும் கிராமத்தில், செந்தமிழன் - அன்னம்மாள் ஆகியோருக்கு மகனாக, 1966-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் நாள் பிறந்தார் சீமான்.

படிப்பும் திரைப் பயணமும்:

தனது சொந்த ஊரில் பள்ளிப்படிப்பை நிறைவு செய்த சீமான், 1987-ம் ஆண்டு இளையான்குடியிலுள்ள ஜாஹீர் உசேன் கல்லூரியில் இளங்கலைப் பொருளாதாரம் பயின்றார். பட்டப்படிப்பை முடித்த சீமானுக்கு சினிமாதுறையின் மீது ஆர்வம் ஏற்பட, 1991-ம் ஆண்டு ஊரிலிருந்து சென்னைக்குக் குடியேறி அங்கு மணிவண்ணன், பாரதிராஜா ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். அதன் தொடர்ச்சியாக `பாஞ்சாலங்குறிச்சி’, `இனியவளே’, `வீரநடை’, `தம்பி’, `வாழ்த்துகள்’ முதலிய திரைப்படங்களை இயக்கியும், `மாயாண்டி குடும்பத்தார்’, `பள்ளிக்கூடம்’, `பொறி’, `மகிழ்ச்சி’, `தவம்’ போன்ற திரைப்படங்களில் நடித்தும் திரையுலகில் தன் முத்திரையைப் பதித்தார்.

அரசியல் வருகையின் அடிநாதம்... திராவிட இயக்க மேடைகள்:

சீமானின் ஆரம்பகால அரசியலுக்கு அடித்தளமாக அமைந்தது திராவிட இயக்க மேடைகள்தாம். கடவுள் மறுப்பு கொள்கை, நாத்திகம், சாதி ஒழிப்பு என்று பேசிவந்தவர், 2006-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க-வை ஆதரித்து பிரசாரங்களையும் மேற்கொண்டார். அதன் பின்னர் தமிழீழ ஆதரவு, விடுதலைப்புலிகளின் மீது கொண்ட பற்றின் காரணமாக `தம்பி’ என்ற திரைப்படத்தை இயக்கினார். பின் 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் கனடிய `ஈழ முரசு’ பதிப்பு நடத்திய, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 53-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார். 2008-ம் ஆண்டில் இலங்கையில் போர்ச்சூழல் தீவிரமடைந்த வேளையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தார்.

சீமான் | Seeman

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட உள்நாட்டுப்போரில் ஏராளமான அப்பாவி தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர். அதைக் கண்டித்தும், போரை நிறுத்தக் கோரியும் 2008-ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசிய பேச்சு தமிழ் உணர்வாளர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சீமானின் இந்தப் பேச்சுதான் பின்னாள்களில் அவர் தமிழ்த் தேசிய அரசியலுக்கு வருவதற்கும், அவர் பின்னால் ஏராளமான தமிழ் இளைஞர்கள் திரள்வதற்கும் காரணமாக அமைந்தது. இந்தப் பேச்சின் காரணமாக, சீமான் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். பின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

2008-ம் ஆண்டின் இறுதியில், ஈரோட்டில் நடைபெற்ற `தமிழர் எழுச்சி உரை வீச்சு’ பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் மட்டும் ஈழ ஆதரவு பேச்சுக்காக தேசிய பாதுகாப்புச் சட்டம் உட்பட தொடர்ந்து ஐந்துமுறை கைதுசெய்யப்பட்டார் சீமான்.

தமிழீழ அரசியலிலிருந்து... தமிழ்த் தேசிய அரசியலுக்கு:

இலங்கையில் நடந்த உள்நாட்டுப்போர் முடிவுக்கு வரப்பட்டு, போரின் இறுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டு, லட்சக்கணக்கான தமிழர்களும் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வு தமிழக அரசியலிலும், பொதுமக்களிடத்திலும் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. இதன் விளைவாக, 2009-ம் ஆண்டு, மே 18-ம் நாள் மதுரையில் சீமான் தலைமையில் ஏராளமான தமிழ் உணர்வாளர்கள், ஈழ ஆதரவாளர்கள், இளைஞர்கள் ஒன்றுகூடி `நாம் தமிழர்’ என்ற புதிய இயக்கத்தை ஆரம்பித்தனர்.

புதிய அரசியல் கட்சியாக... தேர்தல் களத்தில்:

2010-ம் ஆண்டு, மே 10-ம் நாள், நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி அறிவிப்பு செய்தார் சீமான்.

அதைத் தொடர்ந்து, 2011-ம் ஆண்டு நடந்த சட்ட மன்றத் தேர்தல் மற்றும் 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், ஈழ விடுதலைப் போரில் தமிழர்களுக்கு துரோகம் இழைத்ததாகக் கூறி திமுக-வையும், காங்கிரஸையும் எதிர்த்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அதன் காரணமாக, எதிரணியில் இருந்த அதிமுக கூட்டணிக்குத் தனது ஆதரவை வழங்கினார்.

நாம் தமிழர் மேடையில் சீமான்

2016-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், ``தமிழ்நாட்டைத் தமிழன்தான் ஆள வேண்டும்’’ என்ற முழக்கத்தை முன்வைத்து, 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தனித்துப் போட்டியிட்டார் சீமான். ஆனால், அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து 1.1% வாக்குகளையே பெற்றார்.

2019-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் 20 ஆண்கள், 20 பெண்கள் என்று சரிக்குச் சமமாக களத்தில் வேட்பாளர்களை நிறுத்தினார். ஆனால் இந்தத் தேர்தலிலும் தோல்வியடைந்தாலும் 3.87% வாக்குகளைப் பெற்றார். நடைபெறவிருக்கும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கும் சீமான், இந்த முறையும் 234 தொகுதிகளில் 117 ஆண்கள், 117 பெண்கள் என வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார்.

சாதனைகளும்... விமர்ச்சனங்களும்:

தமிழர் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கும் சீமான், ஜல்லிக்கட்டு போராட்டம், காவிரி, முல்லைப்பெரியாறு உள்ளிட்ட நதிநீர் பங்கீட்டுப் பிரச்னைகள், மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, சேலம் எட்டுவழிச் சாலை, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போன்ற சூழலியல் சார்ந்த போராட்டம், நீட், என்.இ.பி., சிஏஏ, இஐஏ எதிர்ப்பு போன்ற மாநில உரிமைகள் சார்ந்த போராட்டங்களை முன்னெடுத்தும் வருகிறார்.

நாம் தமிழர் பொதுக்கூட்டம்

இதுமட்டுமல்லாமல் தனது கட்சியிலேயே ஊழல் கையூட்டு ஒழிப்பு பாசறை, சுற்றுச்சூழல் பாசறை போன்ற கிளை அமைப்புகளை ஏற்படுத்தி சமூகநலப் பணிகளிலும் ஈடுபட்டுவருகிறார். மேலும், இயற்கை விவசாயம், பனை விதைப்பு, ஏரி குளம் தூர்வாருதல், தமிழில் குடமுழுக்கு, தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை, காவிரிப்படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு போன்றவற்றிலும் தனது பங்களிப்பைச் சாதனைகளாகச் பதிவு செய்திருக்கிறார்.

`இனவாதம் பேசுகிறார், சர்வாதிகாரப் போக்குடன் நடந்துகொள்கிறார், தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரிக்கிறார், இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துகளை முன்வைக்கிறார், பா.ஜ.க.வின் பி டீமாகச் செயல்படுகிறார்’... போன்ற எண்ணற்ற குற்றச்சாட்டுகள் மாற்றுக்கட்சியினராலும், தன் சொந்த கட்சியிலிருந்து பிரிந்துசென்றவர்களாலும் இவர்மீது சுமத்தப்படுகின்றன.



source https://www.vikatan.com/news/politics/seeman-biography

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக