Ad

திங்கள், 15 மார்ச், 2021

`எம்.ஆர்.விஜயபாஸ்கர் குவித்த சொத்துகள்; தினம் ஒரு பத்திரத்தை வெளியிடுவேன்" - செந்தில் பாலாஜி

``தமிழக அரசு 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருப்பதாக முதல்வர் சொல்கிறார். ஆனால், முதலமைச்சர் தொடங்கி, துணை முதலமைச்சர், அமைச்சர்கள், இங்குள்ள அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் என எல்லோரும் கடந்த ஐந்து வருடங்களில் சம்பாதித்த சொத்துகளின் மதிப்புதான், ரூ 5 லட்சம் கோடி. எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாங்கிக் குவித்த சொத்துகளின் பத்திரங்களை தினம் ஒன்று வெளியிடவிருக்கிறேன்" என்று செந்தில் பாலாஜி அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம்

கரூர் தொகுதியின் தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, கோடங்கிபட்டியில் இன்று பிரசாரத்தைத் தொடங்கினார். அதற்கு முன்பாக, தி.மு.க கரூர் நகரம் மற்றும் ஒன்றியக் கழகங்கள் சார்பாக நடைபெற்ற நிர்வாகிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி,

``என்னை நம்பி, கரூர் தொகுதியின் வேட்பாளராக்கிய தளபதிக்கு நன்றி. கரூரில் தி.மு.க 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும். ஆளுகின்ற அடிமை அ.தி.மு.க அரசின் முதலமைச்சர், அமைச்சர்கள் என அனைவரும் ஊழலில் கொள்ளையடித்த பணத்தைக்கொண்டு, சொத்துகளாக வாங்கிக் குவித்திருக்கிறார்கள். அந்த வகையில், கரூர் மாவட்டத்திலுள்ள அமைச்சரால் வாங்கிக் குவிக்கப்பட்ட சொத்துகள், குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வாங்கிய சொத்துகள் பற்றிய பட்டியலை, தினம் ஒன்றாக வெளியிடவிருக்கிறேன். அதன் முதல் பட்டியல் வெளிவரவிருக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு பத்திரம் என வெளியிடுவேன்.

செயல்வீரர்கள் கூட்டத்தில் செந்தில் பாலாஜி

'12 தொழில்களை நான் நடத்திவருகிறேன்' என அமைச்சர் சொல்கிறார். உங்கள் வாயிலாக அவரிடம் கேட்கிறேன்... கடந்த 2011-லிருந்து 2016 வரை ஐடி தாக்கல் பண்ணியிருப்பாரே அதை வெள்ளை அறிக்கையாக வெளியிட முடியுமா? 12 நிறுவனங்களும் சேர்த்து ஒவ்வோர் ஆண்டும் எவ்வளவு வருமானம் ஈட்டியது என்பதை வெளியிட முடியுமா? அதேபோல், 2016-க்கு பிறகு அவரது வருமானம் எவ்வளவு? 2001 முதல் 2016 வரை வருமானம் ஈட்ட முடியாத அவரது நிறுவனங்கள், அதன் பிறகு எப்படி வருமானத்தை ஈட்டியிருக்க முடியும்?

குறிப்பாக, கரூர் நகரில் அவர் வாங்கியுள்ள எல்.ஜி.பி பெட்ரோல் பேங்க் சொத்தை இரண்டு பத்திரமாக வாங்கியிருக்கிறார். எல்.ஜி.பி பெட்ரோல் பங்கின் பத்திர மதிப்பு மட்டுமே ரூ. 2.98 கோடி. இப்படி அவர் தொடர்ச்சியாகப் பல சொத்துகளை வருமானத்துக்கு மீறி வாங்கிக் குவித்திருக்கிறார். முடிந்தால், என்மீது அவர் அப்படிக் குற்றச்சாட்டு சுமத்தட்டும். நான் ஏதும் அப்படிச் சொத்துகள் வாங்கியிருப்பதாக அவர் நினைத்தால், அதை அவர் வெளியிடட்டும். அதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.

Also Read: கரூர்: `டெல்லி எஜமானர்கள் நினைத்தாலும் தி.மு.க வெற்றியைத் தடுக்க முடியாது!' - செந்தில் பாலாஜி

ரூ.5 லட்சம் கோடி கடனில் தமிழக அரசு தத்தளிக்கிறது என்று சொன்னால், அந்த அளவு பணத்தில் முதலமைச்சரும், அமைச்சர்களும் சேர்ந்து இந்த ஆட்சியில் கொள்ளையடித்து, சொத்துகள் வாங்கியிருக்கிறார்கள். அந்தக் கடனுக்குக் காரணம், அவர்கள்தான். போக்குவரத்துத்துறையில் ரூ. 2,300 கோடி வரை ஊழல் நடந்திருக்கு என்று லாரி உரிமையாளர்கள் சொல்கிறார்கள்.

கடந்த எம்.பி தேர்தலில் 4,20,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜோதிமணியிடம் தோற்ற தம்பிதுரை, இரண்டு வருடங்கள் கரூரில் தலைகாட்டாமல் இருந்தார். ஆனால், இப்போது தேர்தல் வந்ததும் கரூர் வந்து, மக்களைச் சந்திக்கிறார். மக்களால் ஓட ஓட விரட்டப்பட்டவர். அதனால், இப்போது வந்திருக்கிறார். அவருக்கு ஒரு பேர் உண்டு, 'பைபாஸ் ரைடர்' என்று. அதை மீண்டும் நிரூபிக்கிறார். அவர் எங்குதான் விசுவாசமாக இருந்திருக்கிறார்? மன்னார்குடி கும்பலின் ஆதரவாளர் என்பார்.

மக்களிடம் வாக்குச் சேகரிக்கும் செந்தில் பாலாஜி

அவர்களுக்கும் அவர் விசுவாசமாக இல்லை. எனக்குத் தெரிந்து அவர் மோடிக்குத்தான் விசுவாசமாக இருப்பார் என்று நான் நினைக்கிறேன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, 'தம்பிதுரை 45 கல்லூரிகளை நடத்துகிறார்' என்று பேசினேன். அதற்கு அவர், என்மீது வழக்கு போடுவதாகச் சொன்னார். அப்படி நான் சொன்னது பொய் என்றால், இந்நேரம் அவர் என்மீது வழக்கு போட்டிருக்க வேண்டுமா இல்லையா? ஓசூர், சென்னை ஆகிய இடங்களிலுள்ள கல்லூரிகளை மண்வெட்டி பிடித்து சம்பாதித்தாரா? அவரால், இந்த கரூர் தொகுதி என்ன வளர்ச்சி பெற்றது?

நான் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, டெல்லியில் நடந்த சாலை பாதுகாப்பு வாரவிழாவில் கலந்துகொண்டேன். அப்போது நிதின் கட்கரியைச் சந்தித்து, கரூர் மாவட்டத்தில் தவுட்டுப்பாளையம், மண்மங்கலம், செம்மடை, வாங்கபாளையம் பிரிவு, பெரியார் நகர், கோடங்கிபட்டி, அரவக்குறிச்சி பிரிவு ஆகிய இடங்களில் மேம்பாலம் கட்ட கடிதம் கொடுத்தேன். தொடர்ந்து இரண்டு முறை கடிதம் கொடுத்தேன். அதன் பிறகு, அப்போது நாடாளுமன்றத் துணை சபாநாயகராக இருந்த தம்பிதுரை தொடர்ச்சியாக அதைச் செயல்படுத் முயற்சி எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர் பதவி வகித்த ஐந்து வருடங்களில் அந்தப் பாலத்தைக் கொண்டுவர முடியவில்லை. ஆனால், அதன் பிறகு ஜோதிமணி எம்.பி-யானதும், தொடர்ச்சியாக நான் கொடுத்த கடிதங்களுக்கு அழுத்தம் கொடுத்து, அந்தப் பாலங்கள் கட்டுமானப் பணி இப்போது தொடங்கியிருக்கிறது.

ஆனால், இதில் உரிமை கொண்டாட தம்பிதுரைக்கோ, அமைச்சருக்கோ அருகதையே கிடையாது. கரூருக்கு அவர் எதையும் செய்யவில்லை. கலைஞர், தளபதி கொண்டுவந்த திட்டங்கள், நான் அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த திட்டங்கள்தான் கரூரில் செயல்படுத்தப்பட்டுள்ளன. அரசு மருத்துவக் கல்லூரி, குகைவழிப்பாதை, ரயில்வே சாலை எல்லாம் நான் கொண்டு வந்தவை.

தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம்

ஆனால், இவர்கள் உரிமை கொண்டாடப் பார்க்கிறார்கள். நான் கொண்டு வந்த பேருந்து நிலையத்தை திருமாநிலையூரில் அமைக்காமல் அமைச்சர் வேறு இடத்தில் அமைக்கிறார். நான் கொண்டு வந்த ரிங் ரோட்டை அமைக்கவிடாமல் செய்கிறார்கள். நான் இப்போது சொல்கிறேன், தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், ஐந்து வருடங்களில் ரூ. 2,000 கோடி மதிப்பில் கரூரில் திட்டங்கள் செயல்படுத்துவேன். தம்பிதுரையை பொறுத்தமட்டில் தேர்தலுக்கு தேர்தல் கரூருக்கு வந்து மக்களைச் சந்திக்கலாம் என்று நினைக்கிறார். ஆனால், எடுபடாது. ஒரு தம்பிதுரை அல்ல, ஓராயிரம் தம்பிதுரைகள் வந்து வாக்கு கேட்டாலும், கரூர் மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெறும். தளபதிதான் முதலமைச்சர். கரூர் மக்கள் தி.மு.க-வுக்கு வாக்களிக்கத் தயாராகிவிட்டார்கள்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/senthil-balaji-speech-against-mr-vijayabaskar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக