ஐபிஎல் அணிகளில் முதல் அணியாக 2021 சீசனுக்கான பயிற்சியைத்தொடங்கயிருக்கிறது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டன் தோனி மார்ச்-4ம் தேதி மாலை சென்னை வந்தார். இவரோடு ரித்துராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு ஆகியோரும் சென்னை வந்திருக்கிறார்கள்.
கொரோனா காரணமாக தோனி உள்ளிட்ட சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சென்னையில் உள்ள க்ரவுன் பிளாஸா ஹோட்டலில் குவாரன்டைனில் இருக்கிறார்கள். இவர்களின் 5 நாள் க்வாரன்டைன் வரும் 8-ம் தேதியோடு முடிவடைவதால் சேப்பாக்கத்தில் சூப்பர் கிங்ஸின் பயிற்சிகள் மார்ச் 9 முதல் தொடங்குகிறது. பயிற்சி தொடங்குவதற்கு முன்பு எல்லா வீரர்களுக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட இருக்கிறது. 2021 ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சரியாக ஒரு மாதத்துக்கு முன்பாகவே பயிற்சிகளைத் தொடங்குகிறது சூப்பர் கிங்ஸ்.
கடந்த ஆண்டு ஐபிஎல் துபாயில் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு அணியைவிட்டு திடீரென விலகிய சுரேஷ் ரெய்னா அடுத்தவாரம் சென்னை வருகிறார். காயம் காரணமாக தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் குணமடைந்துவரும் ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பாக அதாவது ஏப்ரல் முதல் வாரத்தில் அணியோடு இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளம்மிங் உள்பட வெளிநாட்டு வீரர்கள் மார்ச் 18-ம் தேதி சென்னை வருகிறார்கள். மொயின் அலி மற்றும் சாம் கரண் இருவரும் இந்தியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக விளையாடயிருக்கிறார்கள். இத்தொடர் மார்ச் 28-ம் தேதி முடிவடைகிறது. இத்தொடரில் விளையாடும் கரண், மொயினோடு, இந்திய வீரர்கள் ஷர்துல் தாக்கூரும், தீபக் சஹாரும் மார்ச் 29-ம் தேதி சென்னைவருவார்கள். இவர்கள் ஏற்கெனவே பயோபபுளில் இருந்து வருவதால் க்வாரன்டைன் இல்லாமல் நேரடியாகப் பயிற்சிகளில் கலந்துகொள்வார்கள் என சொல்லப்பட்டிருக்கிறது.
ஒரு மாதத்துக்கு முன்பே பயிற்சியில் இறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸிடம் இருந்து இந்த சீசனில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் என கமென்ட்டில் சொல்லுங்கள் நண்பர்களே!
source https://sports.vikatan.com/ipl/dhoni-arrived-in-chennai-for-super-kings-training-raina-joining-soon
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக