ஏப்ரல் 6ம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. என இரு கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் பிசியாக இருக்கின்றன. இரண்டு திராவிடக் கட்சிகளுமே கூட்டணிக் கட்சிகளிடம் இம்முறை ரொம்பவும் கறார் காட்டிவருகின்றன. அதிலும், ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பிருப்பதாக நம்பப்படும் தி.மு.க.வோ, சர்வாதிகாரத்தனமாக செயல்படுகிறது என்கிறார்கள் சிலர். நேற்று (மார்ச் 5-ம் தேதி) நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்ணீர் விட்டு அழுததை வைத்தே இதனைத் தெரிந்துகொள்ளலாம்.
இதுவரை தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகுக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு இரு தொகுதிகளும், சி.பி.ஐ.க்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுவிட்டன. சி.பி.எம். மற்றும் காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் இன்னும் பிடிவாதமாகவே இருக்கிறது. மார்ச் 6ம் தேதியான இன்று காலை கூட சி.பி.எம். நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்குச் சென்றனர்.
இதுகுறித்து சி.பி.எம். கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் பேசியபோது, “முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த முறை ஸ்டாலின் அதிகமாக கறார் காட்டுகிறார். எந்த கட்சி பேச்சுவார்த்தைச் சென்றாலும், அக்கட்சியின் சமீபத்திய வாக்கு சதவிகிதம் குறித்த கிராஃப் ஒன்றை வைத்துக்கொண்டுதான் பேசுகிறார்கள். சி.பி.ஐ. கூட மனவேதனையுடன் தான் ஒப்புக்கொண்டது. சி.பி.ஐ.க்கு 2019 நாடாளுமன்றத் தேர்தல் வரை நாட்டிலேயே ஒரு எம்.பி.தான் இருந்தார். அந்தத் தேர்தலில் வெற்றி பெறாமல் போயிருந்தால், அக்கட்சியின் அங்கீகாரமே கேள்விக்குறியாகியிருக்கும். அப்படி நடக்கவிடாமல் தி.மு.க. இரண்டு எம்.பி. தொகுதி கொடுத்து கைதூக்கிவிட்டது. இதைச் சொல்லிக்காட்டியே சி.பி.ஐ.யை 6 தொகுதிகளுக்கு ஒப்புக்கொள்ள வைத்துவிட்டது. முத்தரசனும் கோபமான முகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
அதுபோல, எங்களால் குறைவான தொகுதிகளுக்கு கமிட்டாக முடியாது. ஏனெனில், ஏற்கனவே கேரளாவில் ஆட்சியில் இருக்கிறோம். இந்தத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம். மேற்கு வங்கத்திலும் விட்ட ஆட்சியைப் பிடிப்போம் என்கிற நம்பிக்கை உள்ளது. அதனால், குறைவான இடத்துக்கு ஒப்புக்கொண்டால் தன்மானத்துக்கான இழுக்கு. 2011 சட்டமன்றத் தேர்தலின்போதே அ.தி.மு.க. எங்களுக்கு 12 தொகுதிகள் கொடுத்தது. 10 ஆண்டுகளில் கட்சி வளர்ச்சி அடைந்திருப்பதால், 16 சட்டமன்றத் தொகுதிகளைக் கேட்டு வருகிறோம். அப்படி இல்லையென்றால், இரண்டு எம்.பி. தொகுதிக்கு ஏற்ற வகையில் ஜெயலலிதா கொடுத்ததுபோலவே 12 தொகுதிகளாவது வேண்டும் என்கிறோம்.
தி.மு.க. 4 தொகுதிகளில் இருந்து பேரத்தைத் துவங்கியது. இறுதியில், இன்று பேச்சுவார்த்தைக்கு போனபோது, ’சி.பி.ஐ.க்கு 6 தொகுதிகளை ஃபைனல் பன்னிவிட்டோம், அதேயளவு கொடுக்கிறோம். இல்லையென்றால், ஒன்று கூட்டி 7 ஆக கொடுக்கிறோம். மறுக்காமல் பெற்றுக்கொண்டு ஜெயிக்கிற வழியைப் பாருங்கள்’ என்று சி.பி.ஐ.யைக்காட்டி சொல்கிறார்கள். எதுவும் பேச முடியாத சூழலில், ‘ஆலோசனை செய்துவிட்டு வருகிறோம்’ என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டோம். பின்னர், மாநில செயற்குழுக் கூட்டம் நடந்தது. அதில் டபுள் டிஜிட்டில் இருந்து இறங்கி வரவே கூடாது என்ற முடிவை எடுத்திருக்கிறோம்” என முடித்தனர்.
source https://www.vikatan.com/news/politics/cpm-demands-seats-in-double-digit-dmk-pressuring-for-single-digit
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக