Ad

ஞாயிறு, 14 மார்ச், 2021

'புருஷனை கொன்றுவிட்டு மனைவிக்கு நிவாரணம் தரும் கதை இது' - கொதிக்கும் சீமான்

தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அரசியல் கட்சியினர் அனல் பறக்க பிரசாரம் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதியிலும் 50 சதவீதம் ஆண், 50 சதவீதம் வ்பெண் வேட்பாளர்களை அறிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் பிரசாரத்தை துவங்கி நடத்தி வருகிறார். ஆறாம் நாள் பயணமாக வாலப்பாடியில் தன் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க துவங்கிய சீமான், ஏழாவது இடமாக மாலை 7 மணி அளவில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே வருகை தந்தார். விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளரான ஜெ.செல்வத்திற்கு வாக்கு சேகரித்தபோது பேசிய சீமான்,

வேட்பாளருடன் சீமான்

"எத்தனையோ தேர்தல்களை நாமும் மக்களும் சந்தித்துள்ளோம். ஆனால், எந்த மாறுதலையும் நாம் அடையவில்லை. திமுக, அதிமுக கட்சிகள் எப்படியாவது என் மக்களை ஏமாற்ற வேண்டும் என்று எண்ணுகிறது. ஆனால், நாம் தமிழர் பிள்ளைகள் அதை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று துடிக்கின்றோம். இவர்களின் திட்டங்களே நான்கே நான்கு தான். போனஸ், சலுகை, மானியம், இலவசம் என்பவைதான் அவை. எதிர்கால பிள்ளைகளின் நல்வாழ்விற்கான தொலைநோக்குடன் எந்த திட்டமும் கிடையாது. தமிழர்கள் தாழ்ந்து வீழ்ந்து போவதற்கும், அடிமையானதற்கும் காரணமே தன் இனப்பகை, போர்குணம் இன்மை, தொலைநோக்குப் பார்வை இன்மை, தன்னிடத்தில் இருப்பதைவிட பிறரிடத்தில் இருப்பது உயர்வானது எனும் இழிவான சிந்தனை, அதிகப்படியான திரைக்கவர்ச்சி இவைகள்தான். தமிழர்களின் விடுதலை, நல்வாழ்வு எனும் பெரும் கனவை சுமந்து கொண்டு நாங்கள் இருக்கிறோம். உரிமையிழப்பு என்பது ஒட்டுமொத்த இனத்திற்கான இழப்பு. எனக்கு தேவை என் இனத்தின் விடுதலை. அதற்கு விலை தலையே ஆனாலும் தருவோம். எல்லாவற்றிலும் மாற்றம் கொண்டு வருவோம்.

காவல்துறையில், பெண் காவலர்களுக்கு 6 மணிநேரமும், ஆண் காவலர்களுக்கு 8 மணி நேரமும் மட்டுமே வேலை இருக்கும். ஒவ்வொரு வாரமும் சுழற்சி முறையிலான விடுமுறை அளிப்போம். குற்றம் நடந்த பின் விசாரித்து தண்டனை வாங்கிக் கொடுக்கும் காவல்படை தான் தற்போது உள்ளது. நாங்கள் குற்றம் தடுப்பு படையையே உருவாக்கி விடுவோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காவல்துறை உண்மையாகவே மக்களின் நண்பனாக இருக்கும். இன்று, உடல் தகுதியை வைத்து காவல்துறை அதிகாரிகளை நியமிக்கிறார்கள். ஆனால், நாங்கள் உயரம் குறைவாக சராசரி மனிதனை போல உள்ள புத்திசாலி காவலர்களை, சாதாரணமாக மக்களுடனேயே விட்டுவிடுவோம். ஒரு சேட்டையும் நடத்த முடியாது.

பள்ளிகளின் தரத்தையும், மருத்துவமனைகளின் தரத்தையும் உலகத் தரத்திற்கு மாற்றி விடுவோம். இன்று வரை ஆண்ட ஆட்சியில், பழுதடைந்த சாலைகளை முறையாக போடாமல் சுவருக்கு பட்டி பார்ப்பது போல பள்ளம், மேடுகளை மூடிவிட்டு காசை பாக்கெட்டில் நிரப்பி சென்றுவிட்டனர். குறைந்தபட்சம் ஜனநாயகத்தை காப்பதற்கு அதிகபட்ச சர்வாதிகாரம் தேவைப்படுகிறது. அப்போதுதான் நாட்டை காக்க முடியும். ஒரு கட்சி 20 வருடமும் மற்றொரு கட்சி 22 வருடமும் ஆண்டுவிட்டது. புதியதாக ஆட்சி தரப் போகிறார்கள் என்றால் இல்லை. ஆனால் நாங்கள் பூமியை சொர்க்கமாக மாற்றுவோம்.

பிரச்சார பொதுக்கூட்டத்தில் மக்கள்

ஒரு விவசாயி உடைய வெற்றி மானுட குலத்தின் வெற்றி. ஒரு விவசாயி வாழ்கிறான் என்றால் அந்த நாடு வளர்கிறது. ஒரு விவசாயி சாகிறான் என்றால் அது நாடு அல்ல சுடுகாடு!. விவசாயத்தை கைவிட்ட நாடுகள் பிச்சை எடுக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். புரட்சி எப்போதும் வெல்லும், நாளை நமது வெற்றி அதைச் சொல்லும்" என கூறி முடித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான்,

"1,000, 1,500 ரூபாய் திருமணமான பெண்களுக்கு உதவி தொகையாக தருவதற்கு பதிலாக அவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பைக் கொடுங்கள். ஆயிரம் ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத சூழ்நிலையை ஏன் உருவாக்கினீர்கள். அடுத்த முறை ஆட்சிக்கு வரும்போது 2,000 ரூபாய் என ஏற்றிக்கொண்டே போவீர்களா... என் இன மக்களை பிச்சைக்காரர்களாக நிறுத்துவது சரியா... ஏற்கனவே தமிழ்நாட்டில் ஆறு லட்சம் கோடி கடன் இருக்கிறது. உதவி தொகையை கொடுப்பது போல கொடுத்துவிட்டு, கணவனை குடிக்கவைத்துவிட்டு அந்த காசை மீண்டும் எடுத்துவிடுவீர்கள். அதையே மீண்டும் குடும்ப தலைவியிடம் திருப்பிகொடுப்பீர்களா... 'புருஷனை கொன்றுவிட்டு மனைவிக்கு நிவாரணம் தரும் கதை இது'. முதலில் இந்த முறையை ஒழிக்க வேண்டும். எந்த முறையில் பொருளீட்டி மக்களுக்கு கொடுப்பீர்கள் என்றாவது ஒரு விளக்கம் கொடுங்கள்" என கேள்வி எழுப்பினார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/seeman-election-campaign-in-villupuram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக