Ad

ஞாயிறு, 14 மார்ச், 2021

இந்தி, ஆங்கிலத்தில் வேட்பாளர் பட்டியல்! - குற்றச்சாட்டும் பா.ஜ.க-வின் மறுப்பும்

தமிழ்நாட்டில் பாரதி ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. டில்லியில் உள்ள இக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில், வேட்பாளர்களின் பெயர், தொகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. எந்த ஒரு இடத்திலும் தமிழ் இல்லை. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள்.

பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரை சொன்னாலே, அது தமிழ்மொழியையும் தமிழர் பண்பாட்டையும் புறக்கணிக்கக்கூடிய கட்சி என்ற விமர்சனம் இங்கு நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள இக்கட்சியின் தலைவர்களோ, இந்த கருத்தை திட்டவட்டமாக மறுத்து வந்தார்கள். குறிப்பாக, பிரதமர் நரேந்திரமோடி, தமிழ் மொழியையும் தமிழர்களின் பண்பாட்டு உணர்வையும் மிகவும் மதிக்கக்கூடியவர் என்றும் தங்களது கட்சியின் மற்ற தலைவர்களும் கூட, ஒருபோதும் தமிழை புறக்கணிக்க நினைத்ததில்லை என வாதிட்டு வந்தார்கள். இந்நிலையில்தான் வரும் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள 20 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை, டெல்லியில் உள்ள இக்கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிட்டது. அதில் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் கையெழுத்திட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் மற்றும் தொகுதிகளின் விவரங்களை ஏன் இந்தியில் வெளியிட வேண்டும் என பலரும் பெரும் கேள்வி எழுப்பு வருகிறார்கள். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. நீங்கள் போட்டியிடுவது தமிழ்நாட்டில்... வடமாநிலங்களில் அல்ல. தமிழர்கள்தான் வாக்கு செலுத்தப் போகிறார்கள். பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தமிழ்நாட்டில் போட்டியிடப் போவதும் தமிழர்கள்தான். இவர்கள் தமிழில் பேசி தானே வாக்கு கேட்கப் போகிறார்கள். ஆனால் வேட்பாளர் பட்டியல் மட்டும் இந்தி மற்றும் ஆங்கிலத்திலா? ஒருவேளை, இவர்கள் தங்களது கட்சியின் தலைமைக்கு பயந்து இந்தி அல்லது ஆங்கிலத்தில் வாக்கு கேட்கப் போகிறார்களோ’’ என சமூக வலைத்தளங்களில் பலரும் பெரும் ஆதங்கத்தோடு நக்கலடித்து வருகிறார்கள்.

பெ.மணியரசன்

தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் பெ.மணியரசன் இதுகுறித்து நம்மிடம் பேசியபோது, ‘’பா.ஜ.க. இப்படி செய்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைய வேண்டியதில்லை. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இந்தி மற்றும் சமஸ்கிருதம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற இருமொழி கொள்கைதான் அவர்களது குறிக்கோள். தமிழ்நாட்டில் இக்கட்சியின் இருமொழி கொள்கையை ஏற்றுகொண்டவர்கள்தான் இதில் இணைந்திருக்கிறார்களா என சந்தேகமாக உள்ளது.

தமிழ்நாட்டு மக்களும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆதிக்க மனப்பான்மையோடுதான் வேட்பாளர் பட்டியலை, இந்தியில் வெளியிட்டுள்ளது, பா.ஜ.க தலைமை. இந்தி புரியவில்லை என சொல்பவர்களுக்காக, ஜனநாயக பிச்சையாக, ஆங்கிலத்திலும் விவரங்களை வெளியிட்டுள்ளார்கள். தமிழின் பெருமையையும் தொன்மையையும் பிரதமர் மோடி பேசுவது, அவரின் இதயத்தில் இருந்து வரும் வார்த்தை அல்ல. தமிழர்களை அரவணைத்து, தமிழை காலி செய்யும் யுக்தியே. இதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொண்டு, நம்முடைய மொழி, இனம், ஜனநாயகத்தை பாதுகாக்க போராட வேண்டும்’’ என்றார்.

வானதி சீனிவாசன்

இது தொடர்பாக, பாரதிய ஜனதா கட்சி சார்பில் வானதி சீனிவாசனிடம் பேசியபோது ‘’பா.ஜ.க-வின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தவறானது. தமிழை புறக்கணிக்க வேண்டு என்பது எங்கள் கட்சியின் நோக்கம் அல்ல. எங்கள் கட்சியின் தேசிய தலைமையில் இருந்து வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் போது எப்போதுமே இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருப்பதுதான் வழக்கம். மற்ற மாநிலங்களின் வேட்பாளர் பட்டியலும் இவ்வாறுதான் வெளியிடப்பட்டு வருகிறது. பா.ஜ.க தேசிய தலைமை அலுவலகத்தில் இருந்து, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலை, உடனடியாக, தமிழக பா.ஜ.க தலைமை தமிழில் வெளியிட்டுள்ளது’’ என தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/politics/bjp-candidate-announcement-issue-vanathi-clarifies-the-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக