Ad

ஞாயிறு, 14 மார்ச், 2021

அங்க பிக்பாஸ், இங்க ஸ்மால் பாஸ்... கன்ஃபஷன் ரூம், கன்ஃப்யூஷன் ரூம்... 'குக்கு வித் கோமாளி' புலிப்ஸ்!

”டிப்ரஷனுக்கு என்னை விட்டா வேற உதாரணம் இருக்காது. நாலாங்கிளாஸ்ல ஃபெய்ல். எட்டாம்கிளாஸ்ல ஃபெய்ல். ஒம்பதாம் க்ளாஸ்ல ஃபெய்ல். ஒம்பதாங் கிளாஸ் ரெண்டாவது அட்டெம்ப்ட்லயும் ஃபெய்ல். என் மேரேஜ் லேட். ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடிச்சு வேலை கெடைச்சது லேட். என் மொத ஷோ டிவில வர்றப்ப டிரெய்ன் ஆக்சிடென்ட்ல எங்க அம்மா இறந்தாங்க. என் வாழ்க்கைல ஒவ்வொரு அத்தியாயத்துலயும் எனக்கு தோல்விதான். பெரிய புல்டோசர் என்னை இடிச்சுட்டே இருந்துச்சு. ஆனா எல்லாத்துலயும் மோதி மோதி இந்த இடத்துக்கு வந்திருக்கேன். சிரிப்போம். சிரிக்க வைப்போம். இந்த ஷோவும் அதைத்தான் பண்ணுது” இரண்டாம் நாள் எலிமினேஷன் முடிந்ததும் நெகிழ்ச்சியாக இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொண்டது யார்?

கடைசியில் பார்க்கலாம்!

சென்ற வாரம் இம்யூனிட்டி பேண்ட் வாங்கி ஸ்டைலா கெத்தா உட்காரவெச்சிருக்கும் பாபா பாஸ்கரைத் தவிர மற்ற நால்வருக்கும் இந்த வாரம் எலிமினேஷன் வீக். பாபா பாஸ்கர் லீவு. அவருக்கு பதில் அவருடைய கெட்டப்பில் இருந்தார் புகழ். ஸ்டைலாக பில்லா நயன்தாரா போல இருந்தார் மணிமேகலை. சேலையில் ஷிவாங்கி, கோட் சூட்டில் பாலா!

பாபா பாஸ்கர் இல்லாதது எத்தனை ரிலீஃப் என்று அஷ்வின், கனி, பவித்ரா ஆகியோர் மனதாரச் சொல்லிக்கொண்டிருக்க ஷகிலா ஒருபடி மேலே போய் “அஞ்சு நிமிஷம் பேசவேண்டிய இடத்துல அம்பது நிமிஷம் பேசுவாரு. அவரு வொர்க் ஸ்டேஷன்ல இருக்காம சுத்திட்டே இருப்பார். தொந்தரவு பண்ணுவார்” என்று தேர்தல் அறிக்கை ரேஞ்சுக்கு பக்கம் பக்கமாகபுகார் அறிக்கை வாசித்தார்.

நான்கு டிவி செட்டப் வைக்கப்பட்டிருந்தன. குக்குகள் ஒரு ரிமோட்டை எடுத்து அதற்கான டிவியை ஆன் செய்ய, அதில் விஜய் டிவியின் பிரபல ஷோ ஒன்று வரும். அதில் இருக்கும் கதாபாத்திரமாக ஒரு கோமாளி வருவார். இதுதான் இந்த வார Pairing நடைமுறை.

ஷகிலாவுக்கு ஜோடி நம்பர் ஒன் - சாண்டி மாஸ்டர் வந்தார். அதுதான் மணிமேகலை. இதனால்தான் அவர் மெட்ராஸ் ஸ்லாங்கில் பேசிக்கொண்டிருந்தாரா என்று தோன்றியது. அறிமுகமாகி அழைக்கப்பட்டது, வேற லெவலில் ஸ்டெப் போட்டு செஃப் வெங்கடேஷ் பட், ரக்‌ஷன் உள்ளிட்ட எல்லாரிடமும் லந்தைக் கூட்டினார். அதுவும் முக்காலா பீட்டுக்கு ஆடிய ஆட்டம் தெறி ரகம் மாமே!

புகழ், ஷிவாங்கி

அஷ்வின் சூப்பர் சிங்கரைத் தேர்வு செய்ய, அனுராதா ஸ்ரீராம் வேடம் போட்டிருந்த ஷிவாங்கி மயக்கமே போட்டார். ஓடி வந்தவர் அஷ்வினிடம் “மொத வாட்டி நான் அழகா இருக்கறப்ப என்னை செலக்ட் பண்ணிருக்கீங்க” என்றார். ஷகிலா, ஷிவாங்கியின் அம்மா பின்னி கிருஷ்ணகுமார் பாடிய ‘ராரா சரசுக்கு ராரா’ பாடலைப் பாடச் சொல்லிக் கேட்க அழகாகப் பாடினார். “எல்லாரும் என் செல்லப் புள்ளைங்க” என்று அனுராதா ஸ்ரீராமாக மாறிச் சொன்னவர் “இந்த எலிமினேஷன் ரவுண்டை பயந்து சமைக்காம, இவ்ளோ தூரம் வந்தோமேனு வியந்து சமைக்கணும். அப்பதான் இன்னும் உயர்ந்து போவீங்க” என்று நம்பிக்கை டானிக்கை சில பல டீஸ்பூன்கள் ஊற்றினார். அஷ்வினிடம் போய் நின்றவர் “நான் இவ்ளோ அழகா வந்திருக்கறப்ப இவர் ஏன் கோமாளி மாதிரி வந்திருக்காரு?” என்று அவரையே கலாய்க்கவும் செய்தார். தேறிட்ட தாயி!

கனி குக்கு வித் கோமாளியையே தேர்வு செய்ய பாபா பாஸ்கராக வந்தார் புகழ். முழுக்க முழுக்க பாபா பாஸ்கராகவே மாறி உடல்மொழி, பேச்சு என்று கலக்கினார். ஆனால் அதே சமயம். இதான் சான்ஸ் என்று 'மாரி' மியூசிக் போட்டதும் பவித்ராவைத் தூக்கிக் கொண்டு போனார். கொஞ்சம் எல்லை மீறுது ப்ரோ!

உள்ளே ‘நீயா நானா’கெட்டப்பில் இருந்த பாலா, வைரமுத்து போல பேசிக்கொண்டிருந்தார். பவித்ராவுக்கு ஜோடி சேர்ந்த அவர் கோபி ஆங்கரிங் செய்வது போல பேசி, ஷோவில் உள்ள எல்லா குக்கையும் கலாய்த்தார்.

போட்டி ஆரம்பித்தது. பொரி உருண்டை சேலஞ்ச். 10 பொரி உருண்டைகள் செய்து அதை பிரமிடு போல அடுக்கி கொண்டு போய்க் கொடுக்க வேண்டும். செஃப் அதை ஓகே செய்ததும், கோமாளி அந்த 10 உருண்டைகளையும் சாப்பிட வேண்டும் என்பதுதான் போட்டி. செய்யலாம், அதைச் சாப்பிடவும் வேண்டுமா என்று கவலையோடு போட்டியை ஆரம்பித்தனர்.

போட்டிகள் ஒரு பக்கம் நடக்க மாரி இசை போட்டால் ஆளுக்கொருத்தரை தூக்கிக் கொண்டு ஓடுவதும், ‘வலி மாமே வலிப்... புளி மாங்கா புலிப்’ பாட்டு போட்டால் மணிமேகலை டான்ஸ் ஆடுவதும் நடந்தது. மணிமேகலையின் வைப்ரேஷனில் ஷகிலாவும் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தார். பொரி உருண்டை செயும்போது அஷ்வினுக்கு கை சுட, ஷிவாங்கி பாட்டுப் பாடி ஆறுதல்படுத்தினார்.

குக்கு வித் கோமாளி

இதெல்லாம் போதாதென்று இன்னொரு கூத்து வேறு நடந்தது. ‘அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாள்” பாடல் யாருக்கான பாடல் என்று புகழ் - பவித்ராவுக்கும், அஷ்வின் - ஷிவாங்கிக்கும் போட்டி நடந்தது. டிஜே அந்தப் பாடலைப் போட எல்லாருமே ஆட ஆரம்பித்தார்கள். வெங்கடேஷ் பட் வந்து “பொரி உருண்டை செய்யச் சொன்னா என்ன பண்ணிட்டிருக்கீங்க?” என்று திட்டிய பிறகுதான் வேலையை ஆரம்பித்தார்கள்.

எல்லாரும் பொரி உருண்டைகள் செய்து முடிக்க சாப்பிடச் சொன்னார் வெங்கடேஷ் பட். அவசர அவசரமாக அள்ளிப் போட்டு சாப்பிடதில் மணிமேகலை முதலில் சாப்பிட்டார். அதனால் ஷகிலா அட்வான்டேஜ் டாஸ்க்குக்கு முன்னேறினார். அடுத்து கனி - புகழ், அஷ்வின் - ஷிவாங்கி இரு ஜோடிகளும் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர்.

ஸ்பெஷல் கெஸ்ட்டாக ராப் சிங்கர் மதுரை முத்து உள்ளே வந்து ரெண்டு ஜோக் சொல்லி கலந்து கொண்டார். இரண்டாவது சுற்றில் கத்தாழையுடன் பாக்ஸிங் கிளவுஸ் ஒன்றும் கொடுக்கப்பட்டது. கிளவுஸைப் போட்டுக்கொண்டு அந்தக் கத்தாழையை உரித்து அதன் பல்ப்பை ஒரு பவுலில் போடவேண்டும். யார் அதிகமாக உரிக்கிறார்களோ அதைப் பொறுத்து வெற்றியாளர் அறிவிக்கப்படுவார் என்றார் வெங்கடேஷ் பட்.

கத்தாழையின் ஜெல்லை உரிக்க புகழ் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார். அவரைப் பார்த்து “சொரணையே இல்லையா?” என்று வெங்கடேஷ் பட் கேட்க, “இல்லைங்க. விஜய் டிவில வேலை செய்யறேன்” என்றார் புகழ்.

புகழுக்கும் ஷிவாங்கிக்கும் ஒரு 'பாசமலர்' எபிசோட் ஓடியது. அஷ்வின் சீரியஸாக விளையாடிக் கொண்டிருக்க புகழ் எதோ பேசினார். “தொந்தரவு பண்ணாத அண்ணே” என்று விரட்டிவிட்டார் ஷிவாங்கி. அப்போது புகழ் கொடுத்த நடிப்பு ஆஸ்கர் ரகம். உடனே சீரியஸாகவே சங்கப்பட்டு ஷிவாங்கி திரும்பத் திரும்ப வந்து ஸாரி கேட்டார். காலில்கூட விழப் போனார். செட் எங்கும் பாசமழை பொழிந்தது!

கத்தாழையின் ஜெல்லை உரிப்பதில் புகழ் உசுரைக் கொடுத்து வேலை செய்து கொண்டிருந்தார். ஷகிலா மணிமேகலையிடம் “பரவால்ல விடு” என்றார். ஷிவாங்கி ஜெயிக்கவில்லையே என்று ஃபீலாங்கி ஆனார். முடிவில் கனி - புகழ் ஜெயித்தனர். இரண்டாம் நாள் நடக்கும் போட்டியில் பெரியதொரு அட்வான்டேஜ் கிடைக்கும் என்று சொல்லி முதல் நாள் ஷோவை முடித்துவைத்தார் ரக்‌ஷன்.

குக்கு வித் கோமாளி

அடுத்த நாள் மெய்ன் டாஸ்க். குக்குகளையெல்லாம் வெளியேறச் சொன்னார் தொகுப்பாளர் ரக்‌ஷன். ''என்ன சூனியம்னு தெரியலையே” என்று அஷ்வின் புலம்ப அனைத்து போட்டியாளர்களும் வெளியேறினர். கோமாளிகள் அரங்கில் இருக்க “இன்னைக்கு முக்கியமான டே. அதாவது கன்ஃப்யூஷன் ரூம் சேலஞ்ச்” என்றார் நடுவர் வெங்கடேஷ் பட்.

அதாவது, பிக்பாஸின் கன்ஃபெஷன் ரூம் போல, 'குக்கு வித் கோமாளி'க்கு இந்த கன்ஃப்யூஷன் ரூம். அதில் பிக்பாஸ் என்றால் இதில் ஸ்மால் பாஸ் என்று வைத்துக் கொள்ளலாம். கோமாளிகளை ஒவ்வொருவராக வரச்சொல்லி கையில் நோட்டு, பேனா இருக்க - ஸ்மால் பாஸ் குரல் ஸ்பீக்கரில் ஒலிக்கும். அவர் வரிசையாக செய்பொருட்களை படிப்பார். கோமாளி குறிப்பெடுத்துக் கொள்ளலாம். பிறகு செய்முறை சொல்லுவார். செய்முறையின்போது குறிப்பெடுக்கக்கூடாது. கவனித்து கேட்டு, மனதில் வைத்துக்கொண்டு குக்கிடம் வந்து சொல்லி அந்த டிஷ்ஷை சமைக்க வேண்டும்.

இதுல என்ன ஈஸிதானே என்று நினைத்தீர்களானால்.. அதுதான் இல்லை.. “ம்ம்.... எழுதிட்டிங்களா அடுத்து புளி..” இப்படிச் சொல்ல மாட்டார் அந்த காணாக்குரலோன். கடகடவென்று படித்துக் கொண்டே இருப்பார். கோமாளியாக எழுதிக்கொண்டாலோ மனதில் வைத்துக்கொண்டாலோ தப்பித்தார்கள். அவ்வளவுதான்.

முதலில் ஷிவாங்கி அந்த குழப்ப அறைக்குள் போனார். “எனக்குப் பிடிச்ச ஜோடி எப்படியாச்சும் ஜெயிக்க வைங்க” என்று சொல்லி ஆரம்பித்தார் ஸ்மால் பாஸ். அவர் கடகடவென்று சொல்ல திணறிக்கொண்டு கொஞ்சம் குறிப்பெடுத்தார். அடுத்து பாலா உள்ளே போய் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டார். பிறகு மணிமேகலை. அவரையும் ஸ்மால் பாஸ் கலாய்த்துத் தள்ளினார். கடைசியாக புகழ். போன சீசனில் புகழ், புகழடைந்ததே இங்குதான். அவரைக் கொஞ்சம் வாழ்த்திய ஸ்மால் பாஸ் கடகடவென்று ஒப்புவித்து முடித்தார். போகும்போது ஃபீலிங்கில் சேரையெல்லாம் இழுத்துப் போட்டு விழுந்து வாரிக்கொண்டார் புகழ்.

செய்முறை சொல்லும்போது யார் யாருக்கு என்ன டிஷ் என்று எழுதிக் காட்டினார்கள். ஆனால் அதை கோமாளிகளுக்குச் சொல்லவில்லை. அதன்படி அஸ்வின் ஷிவாங்கிக்கு நெய்க்காரப்பட்டி தயிர் குருமா, பாலா பவித்ராவுக்கு மொச்சைப் பருப்புக் குழம்பு, ஷகிலா மணிமேகலைக்கு அரசினக்காய் குழம்பு, புகழ் கனிக்கு கொங்குநாட்டு அரைத்துவிட்ட குழம்பு. இவைதான் செய்யவேண்டிய டிஷ்.

குக்கு வித் கோமாளி

குக்குகள் வந்தனர். ஷிவாங்கி செய்பொருட்களைச் சொன்னதும் ஏதோ குருமா என்று சரியாகச் சொல்லி அசத்தினார் அஷ்வின். மணிமேகலை வந்து டான்ஸுக்கு நடுவே எழுதியதைப் படிக்க ஷகிலாவுக்கு காதில் புகை வந்தது. பாலா, வைரமுத்து வாய்ஸில் ''தக்காளி வெங்காயம் தவிர எதும் எழுதல'' என்று பவித்ராவுக்கு ஷாக் கொடுத்தார். புகழ் பேப்பரில் கடவுள் துணை தவிர எதுவுமிருக்கவில்லை.

எக்ஸ்ட்ரா துருப்புச்சீட்டாக இரண்டு சொன்னார்கள். ஒன்று தூதூவராக சுனிதா வந்தார். யாருக்காவது டவுட் என்றால் அவர் போய் கன்ஃப்யூஷன் ரூமில் கேட்டு வந்து விளக்குவார். அதற்கடுத்து மதுரை முத்துவும் அந்த ஹெல்பைச் செய்வார் என்றார்கள்.

முந்தைய நாள் அட்வான்டேஜ் டாஸ்க் ஜெயித்த கனி - புகழுக்கு இரண்டு அட்வான்டேஜ்கள். முதலாவதாக மொத்த செய்பொருட்கள் லிஸ்ட்டும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.

இடைஞ்சலாக இரண்டு தொப்பி வைத்த ஒரு நீள பைப். இரண்டையும் குக்கு, கோமாளிகள் இருவரும் அதை அணிந்து கொண்டே சமைக்க வேண்டும்.

முதலில் ஷகிலா சுனிதாவை அழைத்து மெய்ன் செய்பொருட்களைக் கேட்டு வரச்சொன்னார். அடுத்து கனி ‘மசாலாவை அரைக்கணுமா?’ என்று கேட்டு வரச்சொன்னார். கேள்வியைக் கேட்கவே சிரமப்பட்டவர் பதில் செந்தமிழில் சொல்லச் சொல்ல புரியல சார் என்று சொல்ல ஸ்மால் பாஸ் சிரித்துவிட்டார்.

வெளியே வந்த சுனிதா அரைகுறையாக சிரித்துக் கொண்டே கேட்டதை ஒருவாறு பகிர்ந்து கொண்டார். அடுத்து ஷகிலா மதுரை முத்துவிடம் ஒரு சந்தேகம் கேட்டு அனுப்பினார்.

அடுத்து அஷ்வினும் சுனிதாவிடம் ஒரு டவுட் கேட்டு அனுப்பினார். ''ஆமா நீங்க என்னா சமைக்கறீங்கோ?” என்று அஷ்வினிடம் டவுட் கேட்டார் சுனிதா. “அது தெரிஞ்சா நான் ஏன்மா ஒன்ன அனுப்பறேன்?’ என்று புலம்பினார் அஷ்வின். சைடு கேப்பில் “அஷ்வின் ஷிவாங்கி. அஷாங்கி எங்க டிஷ் பேரு” என்று ரொமான்ஸ் ரூட்டில் போனார் ஷிவாங்கி.

குக்கு வித் கோமாளி

ஒரு பக்கம் ''வலி மாமே வலிப்'' பாடலை டிஜே போட, ஆட சிரமப்பட்டு அடக்கிகொண்டிருந்தார் மணிமேகலை. பாப் கட்டிங்கில் பக்காவாக இருந்தார்.

கடைசியாக எல்லாரும் அவர்கள் டிஷ்ஷை சமர்ப்பித்தனர். ஷகிலா மணிமேகலைக்கு அரசினக்காய் குழம்பு கொடுத்திருந்தார்கள். ஷகிலா பேர் சொல்லும்போது “முட்டாள் மணிமேகலை மஞ்சப்பூசணிக்கா காரக்கொழம்பு” என்றார். வெங்கடேஷ் பட் சுவைத்துவிட்டு பாராட்டித் தள்ளினார். அவுட் ஆஃப் த வேர்ல்ட் பாராட்டு பெற்றார்.

அடுத்து அஷ்வின் - ஷிவாங்கி. டிஷ் பெயர் கேட்டதுக்கு ‘அஷாங்கி’ என்றார் ஷிவாங்கி. அஷ்வின் ஷிவாங்கி சேத்ததாம்! தயிர்குருமா என்று சரியாகச் சொன்னார் அஷ்வின். ''95 மார்க்'' என்றுசொல்லிவிட்டு ''200க்கு எனப் பன்ச் வைத்தார்'' பட்.

பாலா பவித்ரா, கொண்டு வந்ததுக்கு மசாலா மொச்சக்கொட்ட உருளைக்கிழங்கு என்று அவர்கள் பெயர் வைத்திருந்தார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது மொச்சைப் பருப்புக் குழம்பு. ஆவரேஜ் பாராட்டைப் பெற்றது அது. அடுத்து கனி புகழ். கொங்கு நாட்டு அரச்சு விட்ட கொழம்பு என்று சொல்லப்பட்டதை கடுப்புல வெச்ச காரக்கொழம்பு என்று பெயர் வைத்து கொண்டு போய் வைத்தார்கள். வெரி நைஸ், ஃபண்டாஸ்டிக் என்றார் வெங்கடேஷ் பட்.

கனி புகழ், ஷகிலா மணிமேகலை இருவரும் சேஃப் ஸோன் போனார்கள். எலிமினேஷன் சேலஞ்சில் பவித்ராவும், அஷ்வினும் போட்டி போட்டார்கள்.

இங்லீஷ் வெஜிடபிள் டெஸ்ட். ப்ரொக்கோலி, அவகாடோ, ஆஸ்பராகஸ், brussels sprouts என்று நான்கின் பெயரைச் சொன்ன்னார் வெங்கடேஷ் பட். கடைசி இரண்டின் பெயரை கூகுளில் தேடவே கஷ்டமாக இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பவித்ரா, அஷ்வின் இருவருமே ப்ரொக்கோலியைத் தேர்வு செய்தனர்.

''மெய்ன் டிஷ்ஷோ, ஸ்டார்ட்டரோ எதுவாகவோ இருக்கலாம். 20 நிமிஷத்தில் சமைக்கவேண்டும்'' என்றார் நடுவர்.

கடகடவென்று சமைத்து இருவரும் நடுவரிடம் கொண்டு வந்தனர். அஷ்வின் மலாய் ப்ரொக்கோலியும், பவித்ரா ப்ரொக்கோலி சீஸ் ஃப்ரிட்டர்ஸும் சமைத்திருந்தனர். செய் பொருட்கள், செய்த விதம் இவற்றை வெங்கடேஷ் பட் கேட்டுக்கொண்டு அவற்றை டேஸ்ட் செய்தார்.

இருவரையும் பாராட்டினார் பட். சமமான முயற்சியைச் செய்திருந்தார்கள் என்று புகழ்ந்தார். பவித்ரா வைத்திருந்த சாஸுக்கு கொஞ்சம் மைனஸ் கமென்ட்ஸ் வந்தது. உப்பு கொஞ்சம் கூட என்று சொல்லி அவரை பார்டரில் எலிமினேட் செய்தார் வெங்கடேஷ் பட்.

”லாக் டவுண்ல டிப்ரஷன்ல இருந்தேன். இதுதான் என்னை அடுத்த எடத்துக்கு கொண்டு போயிருக்கு. சமையல் என் க்ரவுண்ட் இல்ல. நான் சந்தோஷமா இருக்கறத பாத்து என் அம்மா சந்தோஷமா இருக்காங்கறத விட என்ன இருக்கு? என் அபார்ட்மென்ட்ல குட்டீஸ் இந்த ஷோ பத்தி பேசுவாங்க. குட்டீஸுக்கும் குக்குக்கும் என்ன சம்பந்தம் சொல்லுங்க... அவங்க வரைக்கும் இது ஸ்ட்ரெஸ் பஸ்ட்டரா இருக்கு. மொத எபிசோட்ல புகழுக்கு ஜோடியா வந்தேனு என்னை தெரிஞ்சது. இப்ப பவித்ராவா தெரியுது, என் புகழ் எல்லாம் புகழைத் தான் சேரும்” என்று சென்சிபிளாகப் பேசினார் பவித்ரா. புகழ் நெகிழ்ந்துபோய் பேசத் தோன்றாமல் நின்றார். “நான் முயற்சி பண்ணி இந்த இடத்துக்கு வந்தேன்னு சொல்வாங்க. இப்படி அவங்க முயற்சி பண்ணி இவ்ளோ தூரம் வந்ததுக்கு எனக்கு பேர் கொடுக்கறாங்க. இந்த மனசுக்கே நீங்க நல்லா வருவீங்க” என்றார் புகழ்.

அதன்பிறகு வெங்கடேஷ் பட் பேசியதுதான் நீங்கள் முதல் பாராவில் படித்தது!

பவித்ரா பை பை சொல்ல, இந்த வாரம் முடிந்தது. அடுத்த வாரம் தொடர்வோம்!



source https://cinema.vikatan.com/television/cooku-with-comali-season-2-episode-march-14-review

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக