Ad

திங்கள், 15 மார்ச், 2021

ஜெயக்குமார், செந்தில் பாலாஜி, செல்லூர் ராஜூ சொத்து மதிப்பு இதுதான்!

ஜெயக்குமார்

ராயபுரம் தொகுதியில் இதுவரை தொடர்ந்து 6 முறை வென்றிருக்கும் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், இந்தத் தேர்தலுக்குத் தன் வேட்புமனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். அவர் மட்டுமல்லாமல், அவர் மனைவி ஜெயக்குமாரியும் அதே ராயபுரம் தொகுதியில் அ.தி.மு.க சார்பாக வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்.

2018-19 ஆண்டில் 15.56 லட்ச ரூபாயாக இருந்த ஜெயக்குமாரின் ஆண்டு வருமானம், 2019-20 நிதி ஆண்டில் 15.13 லட்ச ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவர் பெயரில் 39,14,557 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் இருக்கின்றன. அவர் மனைவியின் பெயரில் 93,93,362 லட்ச ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்கள் இருக்கின்றன. இருவரின் பெயரிலுமே எந்த மோட்டார் வாகனங்களும் இல்லை. ஜெயக்குமார் மனைவி ஜெயக்குமாரியின் பெயரில் சுமார் 40 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் இருக்கின்றன. ஜெயக்குமாரியின் பெயரில் கும்மிடிப்பூண்டியில் 10,890 சதுர அடி நிலம் இருக்கிறது. அதன் இப்போதைய தோராய மதிப்பு சுமார் 22 லட்ச ரூபாய்.

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

கரூர் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடுகிறார் செந்தில் பாலாஜி. 2006 மற்றும் 2011 சட்டமன்றத் தேர்தல்களில் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், 2016 தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 2011-16 காலகட்டத்தில் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர், 2018-ல் தி.மு.க-வில் இணைந்தார். அதனால், இம்முறை மீண்டும் கரூர் தொகுதியிலேயே களம் காண்கிறார்.

2019-20 நிதி ஆண்டில் சுமார் 9 லட்ச ரூபாய் ஆண்டு வருமானமாகக் காட்டியிருக்கும் செந்தில் பாலாஜியின் பெயரில் 97,93,067 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் இருக்கின்றன. 11.56 லட்ச ரூபாய் மதிப்பிலான ஃபார்ச்சூனர் கார், 11.62 ரூபாய் மதிப்பிலான இனோவா கார் போக, 1.15 லட்சம் மதிப்பிலான டெம்போ டிரக்கும் அவர் பெயரில் இருக்கிறது. அவர் பெயரில் இருக்கும் ஒரே அசையாத சொத்து, ஆத்தூர் கிராமத்தில் இருக்கும் 3.59 ஏக்கர் விவசாய நிலம் மட்டுமே. அதன் தற்போதைய மதிப்பு தோராயமாக 1.1 கோடி ரூபாய். தன்னிடம் 85,000 ரூபாய் மதிப்பிலான ஒரு கைத்துப்பாக்கி இருப்பதாகவும் தன் வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கிறார் செந்தில் பாலாஜி.

செல்லூர் ராூ

2011, 2016 சட்டமன்ற தேர்தல்களைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ. இவர் பெயரில் இருக்கும் அசையும் சொத்துக்களின் மதிப்பு 39.05 லட்ச ரூபாய். அதில் 2,45,650 லட்ச ரூபாய் கையிருப்புத் தொகை. மற்றவற்றை வங்கிக் கணக்குகளிலும் சேமிப்புத் திட்டங்களிலும் போட்டு வைத்திருக்கிறார். அதேசமயம், அவர் மனைவி ஜெயந்தியின் பெயரில் சுமார் 2.7 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகள் இருக்கின்றன. சாகர் சில்க்ஸ் நிறுவனத்தில் கடந்த ஆண்டு சுமார் 2.3 கோடி ரூபாய் அவர் மனைவியின் பெயரில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

அமைச்சரின் பெயரில் சுமார் 13 லட்சம் மதிப்பிலான அசையாச் சொத்துக்கள் இருக்கின்றன. அதேசமயம், அவர் மனைவியின் பெயரில் 3.26 கோடி ரூபாய் மதிப்பிலான அசையாச் சொத்துகள் இருப்பதாக செல்லூர் ராஜூவின் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவர் மனைவியின் பெயரில் சுமார் 2 கோடி ரூபாய்க் கடன் இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019-20 நிதி ஆண்டில் தன்னுடைய வருமானம் 8,43,810 என்றும் குறிப்பிட்டிருக்கிறார் செல்லூர் ராஜூ.

Also Read: மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி சொத்து மதிப்பு இதுதான்!



source https://www.vikatan.com/government-and-politics/politics/jayakumar-senthil-balaji-sellur-raju-property-value

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக