Ad

திங்கள், 15 மார்ச், 2021

வாரிசுகளுக்கு வாய்ப்பு... காங்கிரஸ் வேட்பாளர் தேர்வும் கதர்ச்சட்டைகள் கதறலும்!

பல கலவரங்களுக்கு இடையே காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகளில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டார்கள். அதில் பெரும்பாலான தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளின் வாரிசுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க - தி.மு.கதான் இதுவரை வாரிசு அரசியல் என்ற விமர்சனத்திற்குள் சிக்கிக்கொள்ளும். ஆனால், இந்தமுறை அவற்றைப் பின்னுக்குத் தள்ளி காங்கிரஸ் கட்சி முதலிடம் பிடித்திருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில்தான் அதிக வாரிசுகள் இடம்பெற்றிருக்கிறார்கள். அழுது, புரண்டு, தி.மு.க-விடம் வாங்கிய 25 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில் 6 வாரிசுகள் இடம்பிடித்திருக்கிறார்கள்.

தி.மு.கவுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடங்கியதிலிருந்தே தமிழக காங்கிரஸ் கமிட்டியில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கான தொகுதியைப் பெறுவதிலேயே கவனம் செலுத்தினார்கள் என்றும் தி.மு.கவுடனான பேச்சுவார்த்தை இழுபறிக்கு இதுவும் ஒரு காரணம் என்றும் கூறுகிறார்கள். அதுமட்டுமல்ல காங்கிரஸ் நிச்சயம் வெற்றிபெறும் தொகுதிகள் என்று தெரிந்தும்கூட அவற்றை எல்லாம் விட்டுக்குக் கொடுத்துவிட்டு தி.மு.க தரும் தொகுதிகளைச் சத்தம் காட்டாமல் வாங்கி வந்துவிட்டார்கள் என்றும் பவனில் புலம்பல் சத்தம் அதிகமாகக் கேட்கத் தொடங்கியிருக்கிறது. இப்படி காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியல் தேர்வில் பல உள்ளடி வேலைகள் நடந்ததாகக் கூறுகிறார்கள் சத்தியமூர்த்தி பவனில் பேசிவருகிறார்கள்.

கே.எஸ்.அழகிரி, உம்மன்சாண்டி

வேட்பாளர் தேர்வில் என்ன நடந்தது என்பதையும் வாரிசுகளுக்கு அதிக அளவில் தொகுதிகளை ஒதுக்கியதற்கான பின்னணி குறித்தும் காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்தோம்.

Also Read: தி.மு.க - காங்கிரஸ்: இழுபறியை முடிவுக்குக் கொண்டுவந்த `போன் கால்'!

“வேட்பாளர் பட்டியலைப் பார்க்கும்போது அப்பாவுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளைத்தானே பிள்ளைகளுக்கு ஒதுக்கியிருக்கிறார்கள் என்பதுபோல உங்களுக்குத் தெரியும். ஆனால், உண்மை அது அல்ல” என்றவர்கள் “கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிட வேண்டும் என்பது மேலிடத்தின் முடிவு. அதற்குக் காரணம் கட்சிக்காக வசந்தகுமார் செய்த பணியும், செலவழித்த பணமும்தான். கன்னியாகுமரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதும் சரி, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதும் சரி, அனைத்து வேலைகளையும் விஜய் வசந்தை வைத்துத்தான் செய்து வந்தார் வசந்தகுமார்.

கொரோனா காலத்தில் கூட விஜய் வசந்த் கன்னியாகுமரி தொகுதியில் பல நலத்திட்டங்களைச் செய்திருக்கிறார். ஆனால், அவை எதுவும் வெளியில் வரவில்லை. அதனால் அந்தத் தொகுதியை விஜய் வசந்திற்கு ஒதுக்கியதில் தவறில்லை” என்று ஆதரவுக் கரம் நீட்டியவர்கள், “ஓமலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகன் மோகன் குமாரமங்கலம் அறிவிக்கப்பட்டதற்கும் பெரிய அளவில் எதிர்ப்புகளைக் காட்டவில்லை. “மோகன் குமாரமங்கலம் பல ஆண்டுகளாகக் கட்சிப் பணி செய்து வருகிறார். வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டதில் கட்சியில் யாருக்கும் பெரிய அளவில் வருத்தம் இல்லை.

விஜய் வசந்த்

திருவாடானை காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர்.ராமசாமியின் மகன் கரியமாணிக்கம், அறந்தாங்கி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசரின் மகன் எஸ்.டி.ராமச்சந்திரன், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா ஆகியோர் மழைக்குக்கூட சத்தியமூர்த்தி பவனில் ஒதுங்கியதில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் சத்தியமூர்த்தி பவன் பக்கம் காரை ஓட்டுபவர்களுக்குச் சீட் ஒதுக்கப்பட்டுள்ளதுதான் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை” எனக் கொதிக்கிறார்கள்.

“கட்சிக்காக எந்த வேலையும் பார்க்காதவர் கரியமாணிக்கம், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியைத் தன் மகனுக்கு விட்டுக்கொடுத்தார் என்ற ஒரே காரணத்திற்காக கே.ஆர்.ஆர். மகனுக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்புத் தர வேண்டும் என ப.சிதம்பரம் மேலிடத்தில் சிபாரிசு செய்திருக்கிறார்” எனத் திருவாடனை தொகுதி கரியமாணிக்கத்திற்கு ஒதுக்கிய கதையைச் சொல்கிறார்கள். “திருநாவுக்கரசரோ தன்னுடைய மகனுக்கு மட்டும் சீட் கிடைத்தால்போதும் என்ற மனநிலையில் தி.மு.க தரப்பில் என்ன சொன்னாலும் அதற்குச் சரி என்று மட்டும் தலையாட்டிவிட்டு வந்திருக்கிறார்” என்றவர்கள் “உண்மையில் ஈரோடு கிழக்குத் தொகுதிக்குப் போட்டியிட அந்த மாவட்டத் தலைவர் ரவிதான் தீவரமாக முயற்சி செய்தார். அவருக்கு சீட் கொடுக்கும் முடிவில்தான் கட்சித் தலைமையும் இருந்தது. ஆனால், ஈ.வி.கேஸ் தன்னுடைய மகனுக்கு அதை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று ரவிக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துள்ளார்.

ஈவிகேஎஸ்

ஈ.வி.கே.எஸ் செய்த சிபாரிசால்தான் மாவட்டத் தலைவர் பதவி தனக்குக் கிடைத்தது என்ற நன்றி உணர்வில் ரவியும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை ஈ.வி.கே.எஸ் மகனுக்கு விட்டுக்கொடுத்திருக்கிறார்” என்று ஈரோடு தொகுதி ஈ.வி.கே.எஸ் மகனுக்கு ஒதுக்கப்பட்டது குறித்த ஆதங்கத்தைப் பதிவு செய்தனர்.

காங்கிரஸ் கட்சியின் வாரிசு அரசியல் இத்தோடு முடியவில்லை என்றவர்கள் “வேளச்சேரி தொகுதிக்கு ஜெ.எம்.ஆரூன் மகன் அசன் மௌலானா அறிவிக்க இருப்பதாகச் சொல்லிக்கொள்கிறார்கள். சிறுபான்மையினர் வாக்குகளே இல்லாத இத்தொகுதியில் எதற்கு அசன் மௌலானாவை நிறுத்த வேண்டும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பல ஆண்டுகளாக கட்சியில் வேலைசெய்து வரும் வேறு யாருக்காவது ஒதுக்கினால்தான் நாங்கள் உற்சாகமாக வேலை பார்ப்போம்” என்று கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட மூத்த தலைவர்களிடம் நேரடியாகவே சிலர் எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாகவும் கூறினர். “விளவங்கோடு - விஜயதாரணிக்கும் குளச்சல் - பிரின்ஸ்-க்கும் ஒதுக்கப்படும்” என்றவர்கள் “மயிலாடுதுறை மட்டும் யாருக்கு ஒதுக்குவது என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது” என்கிறார்கள்.

“தி.மு.க-வுடன் போராடி 25 தொகுதிகளைக் கேட்டுப் பெற்றது கட்சியின் வளர்ச்சிக்காக இல்லை. தங்கள் குடும்ப நலனுக்காக, வளர்ச்சிக்காக மட்டுமே. கட்சியில் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சிலரும், சில குடும்பத்தை சேர்ந்தவர்களும் மட்டுமே பயனடைந்து வருகிறார்கள். இப்படியிருக்கும்போது எப்படி மற்றவர்களால் உற்சாகமாக கட்சிப் பணிசெய்ய முடியும்?” என்று வேட்பாளர் அறிவிப்பைப் பார்த்துவிட்டுச் சத்தியமூர்த்தி பவனில் கதர் வேட்டிகள் கதறிக்கொண்டிருக்கிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/background-behind-congress-candidate-selection-in-tn-election-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக