மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்றத் தொகுதி, விவசாயத்தை அடிப்படையாக கொண்டது. பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பன்னீர் திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது. வருடம் முழுவதும் பன்னீர் திராட்சி விளையக்கூடிய இடமாகவும் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி உள்ளது.
வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க சார்பில் கம்பம் ராமகிருஷ்ணனும், அ.தி.மு.க சார்பில் சையதுகானும் போட்டியிடுகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளராக, வேதா கல்வி நிறுவனத்தின் வெங்கடேஷ் களம் இறக்கப்பட்டுள்ளார். சமூக சேவை, கல்விச் சேவை என கம்பம் பகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமான நபராக வெங்கடேஷ் இருக்கிறார். தற்போது அவர் மேற்கொண்டுவரும் பிரசார முறை, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
Also Read: தேனி: இட ஒதுக்கீட்டில் அதிருப்தி; அ.தி.மு.க-வுக்கு எதிராக சீர்மரபினர் நலச்சங்கம் பிரசாரம்
பிரசாரத்தின் போது, சந்திக்கும் நபர்களுக்கு, பச்சைத்துண்டு போட்டு, ’உங்கள் வீட்டு விஷேசம்’ என அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ் ஒன்றினைக் அவர்கள் கையில் கொடுக்கிறார் வெங்கடேஷ். அந்த அழைப்பிதழில், தேர்தல் விழா என குறிப்பிட்டு, தேர்தல் தேதி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் வாக்குறுதிகள் இடம்பெற்றிருக்கின்றன. அதோடு, கட்சியின் சின்னம், வேட்பாளர் படம் அச்சடிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக வெங்கடேஷ் கூறும் போது, “ என்னோடு கம்பம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும், நபர்கள் பற்றியும், அவர்கள் கட்சி பற்றியும், அவர்கள் இதற்கு முன்னர் தேர்தலில் நின்று வெற்றி பெற்று, நிறைவேற்றித் தருவேன் என வாக்குறுதி கொடுத்து அதனை செயல்படுத்தாமல் இருப்பது பற்றியெல்லாம் நான் மக்களிடம் பேசுவதில்லை. எனக்கு வாக்களித்தால், கம்பம் தொகுதி மக்களுக்கு என்ன திட்டங்கள் கொண்டுவருவேன் என்பதை பற்றியும், எங்கள் தலைவரின் வாக்குறுதிகள் பற்றியும் தான் மக்களிடம் பேசுகிறேன். மேலும், விவசாயத்தை பிரதானமாக கொண்ட இடம் கம்பம். அதனால், பச்சைத்துண்டு போட்டு, தேர்தலில் வாக்களிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, அழைப்பிதழ் ஒன்றினையும் வாக்காளர்களாகிய மக்கள் கையில் கொடுக்கிறேன். என்னுடைய பிரசார முறை, மக்களிடையே கவனம் பெற்றிருக்கிறது. ரொம்பவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
Also Read: தேனி : `1+20; தேர்தல் விதிகளை மீறிய ஓ.பி.எஸ்!’ - நடவடிக்கை பாயுமா?
source https://www.vikatan.com/news/politics/mnm-candidates-campaign-strategy-has-been-well-received-by-the-people
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக