Ad

வியாழன், 4 மார்ச், 2021

மதுரை ஹேங்அவுட்: மூன்று பக்கம் கடல், அதிசய மணல் குன்று, போர்த்துகீசிய ஆலயம்... மணப்பாடு செல்வோமா?

வெயில் மண்டையை பிளக்கத் தொடங்கிவிட்டது. உடலையும் மனதையும் ஜில் பண்ணிக்கொள்ள அருகிலுள்ள மலைப்பிரதேசங்களுக்குச் செல்லலாம் என்றால் தற்போதைய சூழலில் செலவு அதிகம் பிடிக்கும். அதேநேரம், ரிலாக்ஸ் பண்ணிக்கொள்ள என்னதான் வழி என்று கேட்பவர்களுக்கு ஜில்லென்ற கடல் காற்றை வீசி வரவேற்கிறது மணப்பாடு.

மதுரையிலிருந்து 3 மணி நேரத்துக்குள் சென்று விடக்கூடிய அருமையான இடம்தான் திருச்செந்தூர் அருகிலிருக்கும் மணப்பாடு.

மணப்பாடு

மரம், மலை, மழை பாடுவதை உணர, ரசிக்கத் தெரிந்தவர்கள் கடற்கரை மணல் பாடுவதை மணப்பாடில் நேரில் காணலாம். அகன்று விரிந்த நீலக்கடல், வெண்ணெயை கொட்டி வைத்தது போன்ற நீண்ட கடற்கரை, உடலைத் தழுவும் காற்று, ஆங்காங்கு அதிசயக்க வைக்கும் குன்றுகள், ஊர் முழுவதும் தேவாலயங்கள், விண்ணைத் தொடும் பனை மரங்கள், கரையைக் கொஞ்சிவிட்டு செல்லும் கடல் அலை, படகுகள், வள்ளங்கள், வாஞ்சையோடு அன்பு செலுத்தும் மீனவ மக்கள் என அற்புதமான நெய்தல் நில அனுபவத்துக்காக மணப்பாடு செல்வோம்.

தமிழகக் கடலோரப்பகுதிகளில் பாரம்பர்யமான நகரங்கள் அதிகம் உள்ளன. அதில் முக்கியமானது மணப்பாடு. அக்காலத்தில் வெளிநாட்டு வணிகர்கள் வந்து செல்லும் இடமாகவும் நம்மவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் துறைமுகமாகவும் மணப்பாடு விளங்கியுள்ளது. இப்போதும் மீன் பிடித் தொழிலில் முக்கிய இடத்தில் உள்ளது.

மணப்பாடு

மதுரையிலிருந்து காலையில் கிளம்பினால் அருப்புக்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர் வழியாக மூன்றரை மணி நேரத்தில் மணப்பாடு சென்று விடலாம். திருச்செந்தூரிலிருந்து கிளம்பும்போதே ஜில் காற்று முகத்தை வருடும். ஊராட்சியாக இருந்தாலும் நகரத்தைப் போலவே காட்சி தருகிறது மணப்பாடு. பெரிய பெரிய வீடுகள், அழகிய தெருக்கள், ஆங்காங்கு ஆலயங்கள் என்று ஐரோப்பிய நகரைப்போல காட்சி தரும்.

ஊரைத் தாண்டி கடற்கரையை நெருங்கினால் இயற்கையின் அதிசயத்தைக் காணலாம். கடலோரம் சரிவான மணல் குன்றுகள், மணல் குன்றின் மீது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு தற்போதும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் கலங்கரை விளக்கம். அதன் அருகில் வியக்கும் வகையில் போர்ச்சுக்கீசியக் மாடலில் வானுயர்ந்து நிற்கும் தொன்மையான தேவாலயங்கள் என மூன்று பக்கமும் கடல் சூழ்ந்து தீவு போல அமைந்துள்ளது மணப்பாடு கடற்கரை.

மணப்பாடு
குட்டி கோவா, சின்ன ரோமாபுரி, தென் ஆசியாவின் வெனிஸ் என்றும் இதனை அழைக்கிறார்கள். மணப்பாடு கடற்கரையில் அமைந்துள்ள மணல் குன்றின் வட கடல் அமைதியாகவும், தென் கடல் ஆர்ப்பரித்தும் காட்சி அளிக்கும். இம்மணல் குன்றின் மீது நின்றுப் பார்த்தால் ஊரின் மொத்த அழகும் தெரிகிறது. கடலைப் பார்த்தவுடன் ஓடிச்சென்று கால் நனைக்கவும், குளிக்கவும் தோன்றும். அதே நேரம் கடலலைகள் வரும்போது கவனமாகவும் இருக்க வேண்டும்.

அப்பகுதி மக்கள் மட்டும் ரசித்து வந்த மணப்பாடின் இயற்கை அழகை, தமிழக மக்களை அறிய வைத்து, அவர்கள் தேடி வருவதற்கு முக்கிய காரணம், 'இயற்கை, கடல், நீதானே என் பொன்வசந்தம், நீர்ப்பறவை, மரியான், சிங்கம்' போன்ற திரைப்படங்கள்தான். அப்படங்களில் மணப்பாடின் அழகை அருமையாகக் காண்பித்திருப்பார்கள்.

மணப்பாடு

கி.பி.1540-ம் ஆண்டில் போர்த்துக்கீசியர்களின் பாய்மரக்கப்பல் சூறாவளியில் சிக்கிய நிலையில் அதிலிருந்தவர்கள் செய்த ஜெபத்தால் பாதுகாப்பாக மணப்பாட்டில் கரை ஒதுங்கியதாகவும் அதற்கு நன்றி செய்யும் விதமாக அப்போது மணல் குன்றில் அவர்கள் வைத்த 10 அடி உயர சிலுவை வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. அது இன்னும் அங்கேயே பிரமாண்டமாகக் காட்சி தருகிறது. கிறிஸ்தவ மத ஊழியம் செய்ய வந்த சவேரியாரின் குகை, கடலோரத்தில் உள்ளது.

கடலிலிருந்து 20 மீட்டர் தொலைவில் இருக்கும் இக்குகையினுள் 20 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. இக்கிணற்றின் நீர், உப்பு கரிக்காமல் நன்னீராக இருப்பது அதிசயமாகச் சொல்லப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிலர் குகையில் அமர்ந்து தியானம் செய்துவிட்டு, கிணற்றில் தண்ணீர் எடுத்து குடிக்கிறார்கள். வீடுகளுக்கும் எடுத்துச் செல்கிறார்கள்.

நவம்பர், டிசம்பரில் வெளிநாட்டுப் பறவைகளும் மணப்பாடு கடற்கரைக்கு வந்து செல்லும். சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக அலைச்சறுக்கு, படகுப்போட்டி, காற்றாடி அலைச்சறுக்கு, பாய்மரக்கப்பல், நின்றுகொண்டே துடுப்பு போடுவது, பாராசூட்டில் பறப்பது எனப் போட்டிகளையும் அவ்வப்போது நடத்துகிறார்கள்.
மணப்பாடு

சமீபகாலத்தில் சுற்றுலாத்தலமாக மாறினாலும், பல்லாண்டுகளாக மீன்பிடித் தொழிலில் பரபரப்பாக இயங்கும் ஊர். இங்கு பிடிக்கப்படும் மீன்கள் தமிழகத்தில் பல நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. அது மட்டுமல்லாமல் கருவாடாக மதிப்புக் கூட்டப்பட்டு விற்கப்படுகிறது. 'மணப்பாடு கருவாடு' என்றால் சந்தையில் நல்ல கிராக்கி உள்ளது. மணப்பாடு தெருக்களில் நடந்து செல்லும்போது வீட்டு வாசல்களில் காய வைக்கப்பட்டுள்ள விதவிதமான கருவாடுகளைப் பார்த்து செல்லலாம். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் திரும்பி செல்லும்போது ருசி மிக்க கருவாடுகளை வாங்கிச் செல்வார்கள்.

சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு இங்குள்ள தேவாலய நிர்வாகம் அறைகள் கட்டி வைத்திருக்கிறார்கள். குறைந்த வாடகையில் அங்கு தங்கி ரெப்ரெஷ் ஆகிக் கொள்ளலாம். இல்லையென்றால் திருச்செந்தூரிலும் தங்கலாம். மீன் உணவுகளை அருமையாக செய்து தரும் சிறு உணவகங்கள் இங்கு உள்ளன.

மணப்பாடு

காலையிலிருந்து மாலைவரை கடற்கரையையும், மணல் குன்று, தேவாலயங்களையும், பார்க்க பார்க்க அலுக்காது. போதும் போதும் என்ற அளவுக்கு கடல் காற்றை சுவாசித்துவிட்டு அங்கிருந்து கிளம்பி வரும்போது அருகிலுள்ள தேரிக்காட்டின் அழகையும் பார்த்து வரலாம். திருச்செந்தூர் வட்டாரத்தில் பார்க்கும் திசையெங்கும் பாலைவனம் போலக் காணப்படும் அதிசய செம்மண் நிலப்பரப்புதான் தேரிக்காடு.

இந்த செம்மணல் மிருதுவாக இருப்பதால் காற்று அடிக்கும் போது, பள்ளம் மேடாகவும், மேடு பள்ளமாகவும் மாறிவிடும். பலத்த காற்று வீசும் மே முதல் செப்டம்பர் வரையிலான மாதத்தில் இதுபோன்ற மணல் குன்றுகள் இடம்விட்டு இடம் மாறி தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளும் மேஜிக் நடப்பதை நாம் காணலாம். ஆங்காகங்கு நிற்கும் முந்திரி மரங்களையே காற்றில் பறக்கும் செவல் மண் மூடிவிடும். நடந்து சென்றாலே அரை அடி ஆழத்தில் கால் புதையும் வகையில் ஆங்காங்கே புதை மணல்களையும் கொண்டுள்ளது. இப்பகுதியை தவிர தமிழகத்தில் வேறு எங்கும் இதுபோன்ற தேரி மணலை காண முடியாது. தேரிக்காட்டை நாமும் எட்ட நின்று பார்த்துவிட்டு ஊருக்கு வந்து சேரலாம்.

தேரிக்காடு

மணப்பாடு எப்படி செல்வது?

மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கு அதிமான பேருந்துகள் உள்ளன. திருச்செந்தூரிலிருந்து மணப்பாடுக்கு பேருந்துகள், தனியார் வாகனங்கள் அடிக்கடி உள்ளன.

மதுரையிலிருந்து மணப்பாடு தூரம் 198 கி.மீ.

பயண நேரம் - 3 மணி 30 நிமிடம் (சொந்த வாகனத்தில் செல்வோருக்கு பயண நேரம் இன்னமும் மிச்சமாகும்).

பொதுப் பேருந்தில் ஒருவர் சென்று வர உணவுடன் சேர்த்து ரூ.700 செலவாகும்.

மணப்பாடில் நல்ல மீன் உணவுகள் கிடைக்கும். திருச்செந்தூரில் தங்கும் விடுதிகள், சைவ அசைவ உணவகங்கள் அதிகம் உண்டு.



source https://www.vikatan.com/lifestyle/travel/madurai-to-manapad-coastal-tour-notable-hangout-activities

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக