மக்கள் பணிக்காக தேர்தலில் களமிறங்கும் வி.ஐ.பி வேட்பாளர்கள், சமர்ப்பித்திருக்கும் சொத்துக்கணக்குகள் 'வழக்கம்போல்' தலைசுற்ற வைத்திருக்கிறது! 'ஊழலை ஒழிக்கப்போகிறோம்' என்று பரப்புரை செய்துவரும் வேட்பாளர்களேகூட தங்களது 'முழுமையான' சொத்துக் கணக்கைக் காட்டாது, தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கவென்று பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பட்டியலை தாக்கல் செய்துவருவது, ஊழல் ஒழிப்பில் அவர்களுக்கிருக்கும் 'உறுதியையும் உண்மையையும்' வெட்ட வெளிச்சமாக்கி வருகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களத்தில், இதுவரை வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கும் வி.ஐ.பி-களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முதன்மையானவர்கள்.
இவர்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது தனது சொத்தாக காண்பித்த தொகையைவிடவும் குறைவான தொகையையே தற்போது காட்டியிருக்கிறார். 'ஜெ. மறைவுக்குப் பிறகு முதல்வர் பொறுப்பேற்று ஓயாது உழைத்துவருவதால், சொந்த வருமானத்தைப் பெருக்குவதற்கு நேரம் கிடைக்கவில்லை' என்றும்கூட இதற்கு காரணம் சொல்லப்படலாம்.
அடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவரது சொத்துக் கணக்கின் மொத்த தொகை, அவரது மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் சொத்துக்கணக்கை விடவும் குறைவாக இருப்பது கண்டு உடன்பிறப்புகளே அதிர்ந்துதான் போயுள்ளனர்.
கவுன்சிலர்களே கோடிகளில் புரளும் இந்த காலகட்டத்தில், மாநிலத்திலுள்ள மிகப்பெரிய கட்சிகளின் தலைவர்களே இதுபோன்று லட்சங்களில் சொத்துக்கணக்கு காட்டிவருவது குறித்து பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான ப்ரியனின் கருத்து கேட்டபோது, ``தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் சொத்துக்கணக்கைக் காட்டவேண்டும், தங்கள் மீதான குற்றப்பின்னணி என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்பதெல்லாம் கடந்த 10, 15 வருடங்களாகத்தான் தேர்தல் சீர்திருத்தங்களின் வழியே நடைமுறைக்கு வந்திருக்கின்றன. அதற்கு முன்புவரையிலும் அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளைப் பயன்படுத்தி முறைகேடாக பணம் சம்பாதிக்கின்றனர் என்பது மட்டுமேதான் மக்களுக்குத் தெரிந்திருக்குமே தவிர அப்படி அவர்கள் எவ்வளவு சொத்துக்களை சேர்த்துள்ளார்கள் என்பதெல்லாம் சரிவரத் தெரியாது.
ஆனால், இப்போது அரசியல்வாதிகளின் சொத்துக்கணக்கு தேர்தல் ஆணையத்தின் இணையப் பக்கத்திலேயே பதிவேற்றப்பட்டுவிடுவதால், 'அடேயப்பா இவ்வளவு சொத்துகள் சேர்த்துவிட்டாரா' என்று மக்கள் மலைப்பதற்கும், 'பரவாயில்லை இத்தனை ஆண்டுகளாக பதவியிலிருந்தும் குறைந்தளவில்தான் சம்பாதித்திருக்கிறார்' என்று மக்கள் மனதில் இடம்பிடிப்பதற்கும் வாய்ப்பு உருவாகிவிட்டது. ஆனால், இதைத் தெளிவாக உணர்ந்துகொண்ட அரசியல்வாதிகள் தங்கள் பெயரிலோ அல்லது தங்களது மனைவியின் பெயரிலோ புதிதாக சொத்துவாங்குவதையே நிறுத்திக்கொண்டு, உறவினர் பெயரில் அல்லது பினாமிகளின் பெயரில் மட்டுமே வாங்குகிறார்கள்.
அப்படியே வீடு, கார் என ஏதாகிலும் வாங்கவேண்டியிருந்தாலும், அதற்காக தங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களிடமிருந்தே கடன் பெற்றதாகச் சொல்லி கடன் கணக்கைக் காட்டுகிறார்கள். இதில் சில அரசியல்வாதிகளின் சொத்துக்கள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதும்கூட அந்த அசையா சொத்துக்களின் மதிப்பு கூடி, குறைவதால் ஏற்படும் பாதிப்புகள்தான். அதனால்தான் கோடிக்கணக்கிலான ரூபாய் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய தலைவர்களின் சொத்துக் கணக்கும்கூட தேர்தலின்போது வெறும் லட்சங்களுக்குள் சுருங்கியிருக்கிறது. அரசியல்வாதிகளின் இந்த தகிடுதத்தங்கள் பொதுமக்களுக்கும் தெரிந்தே இருப்பதால், அவர்களும் இந்த கணக்கு வழக்குகளையெல்லாம் இப்போது சீரியஸாக பார்ப்பது இல்லை.
ஒரு சட்டமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய்க்குள்தான் வேட்பாளர்கள் பிரசார செலவு செய்யவேண்டும் என்று தேர்தல் ஆணையம் சொல்கிறது. ஆனால், நடைமுறையில் ஒவ்வொரு வேட்பாளரும் எத்தனை கோடிகள் செலவு செய்கின்றனர் என்பது மக்களுக்கே நன்றாகத் தெரியும். அப்படியிருக்கும்போது, ஆண்டாண்டுகாலமாக அரசியல் செய்துவரும் தலைவர்கள் இதுபோன்று குறைவான சொத்துக் கணக்கைக் காட்டுகிறார்கள் என்றால், இது தேர்தல் ஆணையத்துக்காகக் காட்டப்படுகிற கண் துடைப்பு கணக்கு என்பது மக்களுக்கும் புரிகிறது!
Also Read: சென்னை: ஆபாசப் படங்களை பரப்புவேன் என மனைவியை மிரட்டிய மதபோதகர் - அதிர்ச்சிப் பின்னணி
அரசியலில் நல்லவர்கள் வந்து மக்களுக்காகப் பணியாற்றவேண்டும் என்பதற்காகத்தான் இதுபோன்ற நடைமுறைகளை தேர்தல் ஆணையம் கொண்டுவருகிறது. அதாவது வேட்பாளர்கள் சொத்துக்கணக்கு காட்டுவதுபோல், தங்கள் மீதுள்ள குற்ற வழக்குகள் குறித்த விவரங்களையும் வெளிப்படையாகத் தெரிவிக்கவேண்டும். ஆனால், நடைமுறையில் வேட்புமனுவில் மட்டுமே குற்றப் பின்னணி வழக்குகள் குறித்த விவரங்களை வேட்பாளர்கள் கொடுக்கிறார்களே தவிர, தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி செய்தித்தாள்களில் இதுகுறித்த விளம்பர அறிவிப்பை வெளியிட்டு வாக்காளர்களின் கவனத்துக்கு கொண்டுசெல்வதில்லை. ஆக நல்ல எண்ணத்தோடு கொண்டுவரப்பட்ட நடைமுறைகள் காலப்போக்கில், வெறும் சடங்குகளாக, கேலிக்கூத்தாக மாறிப்போவதுதான் வேதனை!'' என்கிறார் அழுத்தமாக.
இவரது கருத்தையே ஆமோதிக்கும் மற்றொரு அரசியல் விமர்சகரான கணபதி, ``மக்கள் பணிக்காக வருபவர்கள், அதன் மூலம் தங்களை வளப்படுத்திக்கொள்ளக்கூடாது என்ற அடிப்படையில்தான் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் வழியே இதுபோன்ற நடைமுறைகள் கொண்டுவரப்படுகின்றன. ஆனாலும் நம் ஜனநாயக அமைப்பில் உள்ள ஓட்டைகளை அரசியல்வாதிகள் மிக சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
இதுபோன்ற நடைமுறைகளை தேர்தல் ஆணையம்தான் மிகத் தீவிரமாக கண்காணித்து நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால், அப்படியான சூழல் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போதும் மிகப்பெரிய கட்சிகள் 'இலவச பொருட்கள் வழங்குவோம்' என தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. இதுகுறித்து சர்ச்சை, நீதிமன்ற வழக்கு, தேர்தல் ஆணையம் கண்டனம் என பல்வேறு விஷயங்கள் நடந்துமுடிந்தன. ஆனால், இப்போது மறுபடியும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் இலவச அறிவிப்புகள் வந்திருக்கின்றன.
Also Read: குமரி: "காங்., திமுக-வினர் கண்களுக்கு மட்டும் மேம்பாலம் ஆடுவது தெரிகிறதாம்" - பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழக அரசின் மொத்தக் கடன் சுமை அதிகரித்திருக்கிற இந்த நேரத்தில் இலவச அறிவிப்புகள், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலை என சாத்தியமில்லாத வாக்குறுதிகள், அரசு பணத்தில் விளம்பரங்கள் என பல்வேறு பிரச்னைகள் தேர்தல் ஆணையம் முன் நிற்கின்றன. ஆனால், இந்தக் குளறுபடிகளையெல்லாம் தேர்தல் ஆணையம் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. காரணம் தேர்தல் ஆணையத்துக்கு என்று தனிப்பணியாளர்களோ செயல்படுத்துவதற்கான முழு அதிகாரமோ இல்லை.
தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஆணையம் நிறைய வழிமுறைகளை சொல்லியிருக்கிறது. ஆனால், அவற்றை நிறைவேற்றுவதற்கு உரிய சட்டத் திருத்தங்களும் செய்யப்படுவது இல்லை. எனவே அரசியல்வாதிகள் சொத்துக்கணக்குகள் காட்டுவதுபோன்ற வேடிக்கைகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்!'' என்கிறார் வருத்தமாக.
source https://www.vikatan.com/government-and-politics/policies/secret-behind-assets-of-vip-candidates-in-assemble-election
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக