நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் 234 வேட்பாளர்களையும் கடந்த 7-ம் தேதி, சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், ஒரே மேடையில் அறிமுகம் செய்தார் அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். கடந்த முறை கடலூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான் இந்தமுறை சென்னை திருவொற்றியூரில் போட்டியிடுவதாக அறிவித்தார்.
மழை, வெள்ளம், புயல் என இயற்கைச் சீற்றங்களால் அதிகமாகப் பாதிக்கப்படக் கூடிய பகுதி என்பதாலும், தவிர தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர், அதே பகுதியில்தான் போட்டியிடமுடியும் என்கிற மரபை உடைப்பதற்காகவுமே கடலூர் தொகுதியில் சீமான் போட்டியிடுவதாக அப்போது அந்தக் கட்சி நிர்வாகிகள் விளக்கம் தந்தனர். ஆனால், கடலூரில் சீமானுக்கு போதிய வரவேற்புக் கிடைக்கவில்லை. ஒருபுறம் தி.மு.கவில் மாநில மாணவர் அணிச் செயலாளர் புகழேந்தி, மறுபுறம் அ.தி.மு.கவின் அமைச்சர் எம்.சி.சம்பத், பா.ம.க சார்பில் ஒரு வேட்பாளர், மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் ஒரு வேட்பாளர் என ஐந்து முனைப் போட்டிக்குள் சிக்கிக் கொண்டார் சீமான். தேர்தல் முடிவுகளிலும் 12,497 வாக்குகளுடன் ஐந்தாவது இடைத்தைதான் அவரால் பிடிக்க முடிந்தது. அதனால் இந்தமுறை, வெற்றி வாய்ப்பிருக்கக் கூடிய தொகுதியில்தான் போட்டியிட வேண்டும், தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்கக் கூடாது என கட்சி சார்பில் முடிவெடுக்கப்பட்டது.
அதனால், தென் மாவட்டத்தில், தன் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி தொகுதியில் போட்டியிடலாம் என முதலில் முடிவு செய்தார் சீமான். ஆனால், கட்சி நிர்வாகிகள் எடுத்த சர்வேயில் அந்தத் தொகுதியில் சீமானால் வெற்றிபெறுவது கடினம் என ரிசல்ட் வர, சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என முடிவானது. அதிலும், குறைவான வாக்களர்களைக் கொண்ட ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடலாம் என்றே முதலில் முடிவு செய்யப்பட்டது. இடையில், ``ஸ்டாலின்தான் நான் போட்டியிடும் தொகுதியை முடிவு செய்யவேண்டும். அவர் நிற்கும் தொகுதியில் நான் நிற்பேன். அவர் கொளத்தூரில் நின்றால் நானும் கொளத்தூரில் நிற்பேன்'' என்றார் சீமான். ஆனால், கடைசியாக திருவொற்றியூர் தொகுதியில் சீமான் போட்டியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
Also Read: `போராடிச் சாவோம்' - நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் சீமான் ஆவேச உரை!
திருவொற்றியூர் தொகுதியில் உழைக்கும் தொழிலாளர்கள், மத்தியதர வர்க்கத்தினர் அதிகம் இருப்பதாலும் பல சமூக மக்கள் கலந்திருப்பதாலும் அதைவிட கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் அந்தக் கட்சி 17 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வாங்கியிருப்பதாலுமே இந்தத் தொகுதியைத் தேர்வு செய்திருக்கிறதாம் நாம் தமிழர் வட்டாரம். இந்தத் தொகுதியில், கத்திவாக்கம் நகராட்சி, திருவொற்றியூர் நகராட்சி, மணலி பேரூராட்சி மற்றும் சின்னசேக்காடு பேரூராட்சி ஆகிய பகுதிகள் வருகின்றன. இதுவரை, திருவொற்றியூர் தொகுதியில் இரண்டு முறை சுற்றுப்பயணம் செய்துவிட்டார் சீமான். முதல் சுற்றுப்பயணத்தலேயே சீமானுக்கு தொகுதிக்குள் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. அவரது பேச்சை மக்கள் வெகுவாக ரசித்துள்ளனர். அதேபோல, கடந்த 14-ம் தேதி இரண்டாவது முறை தொகுதிக்குள் சுற்றி வந்த சீமானுக்கு, 'கண்டிப்பாக ஜெயித்துவிடலாம்' என்கிற நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது. அந்த உற்சாகத்தில், கடந்த 15-ம் தேதி வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் சீமான்.
இந்தத் தொகுதியில் அண்ணனை வெற்றிபெற வைக்க, தீவிரமாகக் களத்தில் இறங்கியிருக்கிறார்கள் சீமானின் தம்பி, தங்கைகள். ஒரு குரூப்புக்கு பத்து பேர் வீதம் மொத்தம் பதினைந்து குரூப் ஆகமொத்தமாக 150 பேர் தற்போது களத்தில் பிரசாரம் செய்து வருகின்றனர். ஒரு வீட்டுக்கு இரண்டு பேர் நேரடியாகச் சென்று அமர்ந்து பேசி வாக்கு சேகரித்து வருகின்றனர். சீமான் சுற்றுப்பயணம் செய்யும் நாள்களில் மட்டும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது. ஏதாவதொரு சனி, ஞாயிறு என இன்னும் இரண்டு நாள்கள் முழுமையாக தொகுதிக்குள் சுற்றிவரத் திட்டமிட்டிருக்கிறார் சீமான். ஆனால், ``கடைசி இரண்டு நாள்கள் முழுமையாக தொகுதிக்குள் நீங்கள் பிரசாரம் செய்யவேண்டும் அண்ணா'' என தம்பிகள் சீமானுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். தவிர, இந்தத் தொகுதியில் கணிசமாக தெலுங்கு பேசும் மக்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் நாம் தமிழர் கட்சியில் இருக்கக்கூடிய தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட நிர்வாகிகள் வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
இந்தத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க வேட்பாளர்கள் இன்னும் களத்தில் இறங்கவில்லை. தங்கள் கட்சி நிர்வாகிகள் மட்டத்தில்தான் கூட்டத்தை நடத்திவருகின்றனர். தி.மு.க சார்பில், மறைந்த எம்.எல்.ஏ கே.பி.பி சாமியின் சகோதரர், சங்கர் போட்டியிடுகிறார். அதேபோல, அ.தி.மு.க சார்பில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.குப்பன் போட்டியிடுகிறார். இருவருமே மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தவிர தொகுதிக்குள் நன்கு அறிமுகமானவர்கள். இவர்கள் களத்தில் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்தால், சீமானுக்கு தற்போது இருக்கும் ஆதரவு அலை இருக்குமா என்பது சந்தேகம்தான் என்கிறது தொகுதியை நன்கு அறிந்த வட்டாரம். தவிர, கடைசி நேரத்தில் கரன்சியை இறக்கினால் எல்லாமே தலைகீழாக மாறிப் போகும் எனவும் சொல்கிறார்கள்.
தவிர, சீமானைத் தெரிந்து வைத்திருக்கும் அளவுக்கு தொகுதிக்குள் பரவலாக நாம் தமிழர் கட்சியின் சின்னம் பிரபலமாகவில்லை. அதைக் கொண்டு சேர்ப்பது நாம் தமிழர் கட்சியினருக்கு சவாலான ஒரு காரியமாக இருக்கிறது. தி.மு.க, அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு அந்தச் சிக்கல் இல்லை. தவிர தொகுதிக்குள் நல்ல அறிமுகமும் இருக்கிறது. ஆனால், ``கட்சி சாரத மக்கள் எல்லாம் எங்கள் அண்ணனைத்தான் பொது வேட்பாளராகப் பார்க்கிறார்கள். தி.மு.க அ.தி.மு.க சார்பில் போட்டியிடுபவர்களுக்கு தொகுதிக்குள் நல்ல அறிமுகம் இருந்தாலும் அதுவேதான் அவர்களுக்கு மைனஸாகவும் இருக்கிறது. குழாய் பதிப்பு காலங்களில் மக்களுக்கு ஆதரவாக இல்லை என இரண்டு பேர் மீதும் மக்களுக்கு கோபம் இருக்கிறது. மீனவ கிராமங்களில் பழைய செல்வாக்கு அவர்களுக்கு அப்படியே இருக்கிறது என்றும் சொல்லமுடியாது. ஆர்.கே. நகர் தொகுதிபோல, பணத்துக்காக அப்படியே வாக்குகள் விழுந்துவிடும் என இந்தத் தொகுதியில் சொல்லமுடியாது. அதனால் நிச்சயமாக எங்கள் அண்ணன் வெற்றிபெறுவார்'' என்கிறது களத்தில் நிற்கும் நாம் தமிழர் வட்டாரம்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/seeman-chances-of-success-in-thiruvottiyur-constituency
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக