மேற்கு வங்கத்திற்கு 8 கட்டமாக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் எப்படியாவது மம்தா பானர்ஜியை தோற்கடித்துவிடவேண்டும் என்பதற்காக பா.ஜ.க பல்வேறு வழிகளில் காய் நகர்த்தி வருகிறது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பல எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்களை பா.ஜ.க தனது கட்சிக்கு இழுத்துவிட்டது.
ஆனாலும் மம்தா பானர்ஜி எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறார். முதலில் பா.ஜ.க-வின் முதல்வர் வேட்பாளராக கிரிக்கெட் வீரர் கங்குலியை நிறுத்தலாம் என்று அக்கட்சி திட்டமிட்டது. கங்குலிக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவி கொடுத்ததே பிற்காலத்தில் தங்களது கட்சிக்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற நினைப்பில்தான் என்கிறார்கள் அரசியல் விஷயம் தெரிந்தவர்கள். கங்குலியும் இதற்கு சம்மதித்துதான் இருந்தார். ஆனால் கங்குலிக்கு திடீரென அடுத்தடுத்து இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டதால் அந்த முடிவில் இருந்து பின்வாங்கியதாக கூறப்படுகிறது.
`இப்போது தன்னால் மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட முடியாது’ என்று கங்குலி திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். கங்குலியை பா.ஜ.க சார்பில் அமித் ஷாவும், அவரது மகனும் பலமுறை சந்தித்து பேசினர். ஆனால் கங்குலியின் குடும்ப உறுப்பினர்கள் இதற்கு சம்மதிக்கவே இல்லை. கங்குலிக்கு இப்போதுள்ள உடல் நிலையில் தேர்தல் பிரசாரத்திற்கு அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியாது. அதனை காரணம் காட்டி கங்குலி மறுத்து வருகிறார். ரஜினிகாந்த் வழியில் கங்குலி கைவிரித்ததால் பா.ஜ.க அதிர்ச்சியடைந்தது. கங்குலி கைவிரித்ததை தொடர்ந்து கடந்த மாதத்தில் இருந்தே இதற்கு மாற்றாக என்ன செய்யலாம் என்று பா.ஜ.க ஆலோசித்து வந்தது.
தொடர்ந்து, நடிகர் மிதுன் சக்ரவர்த்தியை களம் இறக்க காய்களை நகர்த்தி வருகிறது. நாளை பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்கத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார். அதற்குள் பா.ஜ.க முகமாக மேடையில் நிறுத்தவேண்டும் என்று பா.ஜ.க போராடிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே இதற்காக மிதுன் சக்ரவர்த்தியுடன் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் நேரில் சென்று மிதுன் சக்ரவர்த்தியை சந்தித்து இது குறித்து ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். ஆனாலும் அவர், `ஆகட்டும் வருகிறேன்’ என்று உறுதியாக சொல்லவில்லை என்று தெரிகிறது. என்றாலும் நாளை நடக்கும் பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ளும்படி மிதுன் சக்ரவர்த்திக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக மேற்கு வங்க பா.ஜ.க நிர்வாகி கைலாஷ் தெரிவித்துள்ளார்.
ஆனால் வருவாரா மாட்டாரா என்பதுதான் இப்போது கேள்விக்குறியாக இருக்கிறது. மிதுன் சக்ரவர்த்தி 2013ம் ஆண்டில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்ய சபை உறுப்பினராக இருந்து வந்தார். ஆனால் 2015ம் ஆண்டு நிதி நிறுவனம் ஒன்றின் விளம்பர தூதராக இருக்க பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்நிறுவனத்திடம் வாங்கிய பணம் முழுவதையும் விசாரணை ஏஜென்சியிடம் கொடுத்துவிட்டு ஆளைவிட்டால் போதும் என்று மும்பைக்கு வந்துவிட்டார். மும்பையில் மத் தீவில் தற்போது வாழ்ந்து வருகிறார்.
பா.ஜ.க சவாலை ஏற்ற மம்தா!
இதற்கிடையே மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தான் வழக்கமாக போட்டியிடும் தொகுதியை விட்டுவிட்டு பா.ஜ.க விடுத்த சவாலை ஏற்று, நந்திகிராம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்து அது தொடர்பாக அறிவிப்பும் வெளியிட்டுள்ளார். நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியின் முன்னாள் விசுவாசியும் தற்போது பா.ஜ.க வேட்பாளராகவும் இருக்கும் சுவந்து அதிகாரியை எதிர்த்து களம் காண்கிறார். கடந்த 30 ஆண்டுகளில் மம்தா பானர்ஜி இது போன்று தனது செல்வாக்கான தொகுதியை விட்டுவிட்டு தனியாக வந்து போட்டியிட்டதில்லை. ஆனால் பா.ஜ.கவின் சவாலை ஏற்கவேண்டும் என்பதற்காகவே இப்போது நந்திகிராம் தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
அதுவும் இம்முறை நந்திகிராம் தொகுதியில் மட்டுமே மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். மம்தாவின் இந்த முடிவு மிகவும் துணிச்சலானது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் தன்னுடன் பல ஆண்டுகளாக இருந்துவிட்டு பா.ஜ.க-வுக்குச் சென்ற அதிகாரிக்கு தக்க பாடம் கற்றுக்கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் மம்தா இம்முடிவை எடுத்துள்ளார். 2011ம் ஆண்டில் இருந்து மம்தா பானர்ஜி போவானிபோரா தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
source https://www.vikatan.com/news/politics/bjp-without-a-chief-ministerial-candidate-for-west-bengal
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக