நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள மூன்று தொகுதிகளிலும் அ.தி.மு.க வேட்பாளர்களை களமிறக்க அக்கட்சியின் தலைமை முடிவு செய்து வேட்பாளர் பட்டியலை தயார் செய்தது. இந்த நிலையில் ஊட்டி தொகுதியை பா.ஜ.க-வுக்கு வழங்க கட்சி தலைமை திடீரென முடிவு செய்தது.
கூடலூர் தனி தொகுதி என்பதால், குன்னூர் தொகுதியில் போட்டியிட சிட்டிங் எம்.எல்.ஏ ராமு அல்லது மாவட்ட செயலாளர் வினோத் இருவரில் யாராவது ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இந்த கடுமையான போட்டியில் மாவட்ட செயலாளர் வினோத்துக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சிட்டிங் எம்.எல்.ஏ-வுக்கு சீட் வழங்கப்படாதல் குன்னூர் தொகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த மாவட்ட செயலாளர் வினோத், சென்னையிலிருந்து திரும்பிய கையோடு எம்.எல்.ஏ ராமுவின் வீட்டிற்கேச் சென்று சமாதானம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து கோத்தகிரி டானிங்டன் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை முன்பு வேட்பாளர் அறிமுக கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக மூடி வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் சிலை முன்பு கழுத்தில் மாலையுடன் வேட்பாளர் வினோத் நின்றுகொண்டிருந்தார்.
தங்களை முன்னிலைப்படுத்துவதில் இரு கோஷ்டியினர் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டதில், எம்.எல்.ஏ ராமுவை மேடையில் ஏற விடாமல் வெலிங்டன் கன்டோன்மென்ட் முன்னாள் துணைத் தலைவரும் அ.தி.மு.க நிர்வாகியுமான பாரதியார் தடுத்தார். இதில் ஆவேசமடைந்த எம்.எல்.ஏ ராமுவும் தள்ளினார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பொதுவெளியில் நடந்த இந்த தள்ளுமுள்ளு குறித்து நம்மிடம் பேசிய கட்சி நிர்வாகி ஒருவர், "ஊட்டி தொகுதியை பி.ஜே.பிக்கு கொடுத்தும், சிட்டிங் எம்.எல்.ஏ ராமுவுக்கு சீட் கொடுக்காததும் எங்களுக்கு உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு கோஷ்டிக்கும் ஏற்கனவே மோதல் இருந்து வந்தது. சீட் விவகாரத்தில் இது வெடித்துள்ளது. சீட் கிடைக்காத விரக்தியில் எம்.எல்.ஏ ராமு தன்னை தாக்கியதாக பாரதியார் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுவிட்டார். புகார் அளிக்கவும் முடிவு செய்துள்ளனர். விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுக்கும்" என புலம்பினார்.
source https://www.vikatan.com/news/election/nilgiri-admk-controversy-in-candidate-announcement
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக