பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியினை தி.மு.க தொடர்ந்து 15 ஆண்டுகள் கூட்டணிக்கு கட்சிக்கு ஒதுக்கி வந்த நிலையில், இந்த முறை தி.மு.கவே நேரடியாக போட்டி யிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளரை தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறித்த உடனேயே அப்பகுதியை சேர்ந்த தி.மு.கவினர் பட்டாசு வெடித்துடன், பட்டுக்கோட்டைக்கு சூரியன் வந்துவிட்டது என உற்சாக கோஷமிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தொடர்ந்து மூன்று சட்டமன்ற தேர்தல்களில் தி.மு.க அதன் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கி வந்தது. ஒவ்வொரு முறையும் தி.மு.க நிர்வாகிகள் விருப்ப மனு தாக்கல் செய்து விட்டு தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என ஆர்வமுடன் காத்திருப்பர்.
ஆனால் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு வரும் போது பட்டுக்கோட்டை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். போட்டியிட விரும்பியவர்களுக்கு மட்டுமல்ல கட்சி தொண்டர்களுக்கும் இது ஏமாற்றத்தை தந்தாலும் தலைமையின் அறிவிப்பிற்கு கட்டுப்பட்டு தேர்தல் பணிகளை செய்தனர்.
இந்நிலையில் இந்த சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதற்கு பட்டுக்கோட்டை தொகுதியினை கேட்டு அழுத்தம் கொடுத்து வந்தது. இதனால் தற்போதும் தி.மு.கவிற்கு தொகுதி ஒதுக்கப்படுமா என்ற கேள்வியும்,எதிர்பார்ப்பும் நிர்வாகிகள்,தொண்டர்கள் மத்தியில் எழுந்தது.
ஒவ்வொரு முறையும் கூட்டணி கட்சிக்கான தொகுதி அறிவிப்பு வந்த போதும் பட்டுக்கோட்டை கூட்டணிக்கு செல்கிறதா என்பதை அறிய பதைபதைப்புடனேயே எதிர்கொண்டும் வந்தனர். மேலும் தி.மு.க தலைமையிடம் பட்டுக்கோட்டை தொகுதியினை கூட்டணிக்கு ஒதுக்க கூடாது எனவும் சில மாதங்களாகவே தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் பட்டுக்கோட்டை தொகுதியினை கூட்டணிக்கு ஒதுக்காமல் தி.மு.க போட்டியிடும் என தலைமை அறிவித்தது. அத்துடன் வேட்பாளராக முன்னால் எம்.எல்.ஏவான அண்ணாத்துரை என்பவரையும் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது அப்பகுதி தி.மு.கவினரை பெரும் கொண்டாட்ட மன நிலைக்கு தள்ளியுள்ளது. பட்டுக்கோட்டைக்கு 15 வருடங்கள் கழித்து சூரியன் வரப் போகிறது என உற்சாகமாக கூறி பிரசார பணிகளை தொடங்கியுள்ளனர். இது குறித்து தி.மு.கவை சேர்ந்த சிலரிடம் பேசினோம், தேர்தலில் கட்சிகளுடன் வைக்கப்படும் கூட்டணி என்பது வெற்றிக்கான அச்சாணியாகவே பார்க்கப்படும். ஆனால் ஒரு தொகுதியினை தொடர்ச்சியாக கூட்டணிக்கு ஒதுக்கி வந்தால் கட்சியின் வளர்ச்சி என்பது தடைபடும்.
அத்துடன் நிர்வாகிகள், தொண்டர்கள் என பலருக்கும் சோர்வை உண்டாக்கி விடும். எங்க தொகுதியான பட்டுக்கோட்டை தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு வந்தது. நாங்கள் தலைவர் ஸ்டாலின் மீதுள்ள பற்றாலும், கட்சி மீது கொண்ட கொள்கையாலும் தலைமையின் இந்த முடிவை நூறு சதவீதம் ஏற்று கொண்டு தேர்தல் பணிகளை செய்தோம்.
ஆனால் ஒவ்வொரு முறையும் நம்ம கட்சிக்கு தொகுதியை ஒதுக்குங்க என்ற கோரிக்கையினை வைத்து வந்தோம். ஆனாலும் கூட்டணியிலிருந்த த.மா.கா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொகுதியினை பெற்று விடும். 2001 தேர்லில் தி.மு.க போட்டியிட்டு தோல்வியுற்றது. அதன் பிறகு 2006 தொடங்கி 2016 வரை கூட்டணி கட்சிக்கு சென்று விட்டது. அதன் படி பார்த்தால் 20 வருடங்கள் பட்டுக்கோட்டைதொகுதியில் உதயசூரியன் உதிக்கவில்லை.
20 வருடம் என்பது ஒரு இளைய தலைமுறையினை கொண்டது. அவர்கள் மத்தியில் தி.மு.கவினை கொண்டு சேர்க்க முடியாத சூழல் நிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதனை தி.மு.கவை சேர்ந்த நிர்வாகி ஒருவர் அடிக்கடி கவலையுடன் கூறுவார். ஆனாலும் நாங்க கட்டுகோப்பாக, கொள்கையின் மீது கொண்ட பிடிப்புடன் இருந்ததால் எங்க பகுதியில் கட்சி வளர்ச்சியடைந்து கொண்டே இருந்தது. இந்த முறையும் கூட்டணி கட்சிக்கு சென்று விடக்கூடாது என்ற கவலையும் எங்களை சூழ்ந்திருந்தது.
Also Read: 'உழைப்புக்கு மதிப்பில்லை' - தி.மு.க-வுக்கு தாவிய முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ!
தேர்தல் பற்றிய பேச்சு தொடங்கப்பட்ட உடனேயே தலைமைக்கு எங்க கோரிக்கையினை வெளிபடுத்தி நம்பிக்கையுடன் காத்திருந்தோம். எங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை எங்க உணர்வினை உணர்ந்த தலைமை தி.மு.கவே போட்டியிடும் என அறிவித்ததுடன், வேட்பாளராக முன்னால் எம்.எல்.ஏவான அண்ணாத்துரை என்பவரையும் அறிவித்துள்ளது. பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கிட்டதட்ட பண்டிகைக்கு நிகராக நாங்க இதனை கொண்டாடி வருகிறோம். அதுமட்டுமல்லாமல் நிச்சயம் தொகுதியினை தி.மு.க கைபற்றும். பெரும் எழுச்சியுடன் அனைவரும் தேர்தல் பணிகளை செய்ய தொடங்கி விட்டனர். சொல்லப்போனால் 20 வருடங்களுக்கு பிறகு பட்டுக்கோட்டையில் சூரியன் உதிக்க இருக்கிறது’ என உற்சாகமுடன் தெரிவித்தனர்.
source https://www.vikatan.com/news/politics/pattukottai-dmk-cadres-celebrated-party-announcement-that-the-dmk-will-contest-directly
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக