Ad

செவ்வாய், 16 மார்ச், 2021

``வெற்றிநடை vs விடியல்..!’’ - தமிழ்நாட்டில் எடுபடுமா டிஜிட்டல் மேடை பிரசாரம்..? #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

தமிழக அரசியல் களம் அனல் பறக்கிறது. ஆட்சியைப் பிடிக்க, அதிகாரத்தை ருசிக்க முட்டி மோதுகின்றன அரசியல் கட்சிகள். கொரோனா பெருந்தொற்று நம்மை விட்டு இன்னும் முற்றிலும் நீங்கவில்லை. இந்நிலையில் ஐந்தாண்டு கால மரபு வழி ஆக்கிரமிப்பான தேர்தல் காய்ச்சல் நம்மைச் சூழ்ந்து நிற்கிறது.

தேர்தல் களத்தின் பிரசார மேடையாக வழக்கமான அலங்கார மேடைகள், வாகனங்கள், மைக்குகள் ஆகியவை குறைக்கப்பட்டு ஆன்லைன் டிஜிட்டலிலும், சோசியல் மீடியாக்களிலும் அவை அரங்கேற்றம் காண்கின்றன.

Election banner

அதேபோல் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஏராளமான முகநூல் பக்கங்கள், ட்விட்டர் கணக்குகள், யூ டியூப் சேனல்கள், வாட்ஸப் குழுக்கள் , இன்ஸ்டாகிராம்கள் இப்படி சமூக ஊடகங்களை நம் தமிழக அரசியல் கட்சிகள் ஆக்கிரமித்து நிற்கின்றன.

இன்று நம் தேசத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு உடனே எதிர்வினை ஆற்றக் கூடியவைகளாக சமூக ஊடகங்கள்தான் திகழ்கின்றன. நாட்டின் ஒவ்வொரு பிரச்னையின் வீரியத்தையும், அதற்கான அறச் சீற்றத்தையும் மதிப்பிடக்கூடிய கருவியாக சமூக ஊடகங்களைத்தான் பார்க்க முடிகிறது. எதிர்க்கட்சிகளைவிட சமூக ஊடகங்களைக் கண்டுதான் ஆளும் அரசுகள் மிரளுகின்றன. அதன் அடிப்படையில்தான் டெல்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பதிவிட்டதாக கூறி 1,178 ட்விட்டர் கணக்குகளை நீக்க மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.

இது தகவல் தொழில்நுட்ப யுகம். எனவே டிஜிட்டல் வழி தேர்தல் பிரசாரங்கள் என்பவை தவிர்க்க முடியாதவை. ஒரு காலத்தில் தலைவர்களின் அரசியல் மற்றும் தேர்தல் பிரசார மேடைப் பேச்சுகளைக் கேட்க பல நூறு மைல்கள் பயணம் சென்ற காலம் இன்று இல்லை. இன்று மாநாடு செல்லும் பெரும்பாலான பொது ஆட்கள் எல்லாம் தலைக்கு விலை வைக்கப்பட்ட கூட்டம். எப்போது கூட்டம் முடியும்? கூலி கிடைக்கும்? என்ற தவிப்பில்தான் இன்றைய கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

Social media

ஒவ்வொரு குடும்பத்தின் பெரும்பாலும் அனைத்து உறுப்பினர்களின் கையிலும் ஆன்ட்ராய்டு செல்போன்கள் சிம்மாசனமிட்டுள்ளன. சொல்லப்போனால் தொலைக்காட்சிகளைவிட மிக அதிவேகமாகவும், அதிக எண்ணிக்கையிலும், தகவல்களும், காட்சிகளும் கொண்டு போய்ச் சேர்க்கும் சிறந்த தளமாக சமூக ஊடகங்கள் விளங்குகின்றன. அதனை மிகச்சிறந்த தேர்தல் பிரசார மேடையாக பயன்படுத்தி அறுவடைக்கு காத்திருக்கின்றன அரசியல் கட்சிகள்.

கருணாநிதி, ஜெயலலிதா என்ற மிகப்பெரும் இரண்டு ஆளுமைகள் இல்லாமல் தமிழகத்தில் நடைபெறக்கூடிய முதல் சட்டமன்றத் தேர்தல் களம் இது. அந்த இருபெரும் தலைவர்களும் தேர்தல் பிரசாரங்களை ஒரு மிகப் பெரும் திருவிழாவாகவே நடத்தியவர்கள். தேர்தல் பிரசாரத்தின்போது அவர்கள் உச்சரித்த ஒவ்வொரு சுலோகனும் மக்கள் மன்றத்தில் இடம்பிடித்தன. கடந்த தேர்தலின்போது “ மோடியா..? லேடியா?’ என்று ஜெ.எழுப்பிய பகிரங்க சவாலும் “ செய்வீர்களா..? செய்வீர்களா..?‘ என்று மக்களை நோக்கி அவர் கேட்ட கேள்வியும் இன்றுவரை பிரசித்தம். கருணாநிதியின் பேச்சே திமுக தேர்தல் களத்தின் மூச்சாக இருந்தது. அவருடைய தேர்தல் பிரசார உரை ஒவ்வொன்றும் ஒவ்வொரு அடிமட்டத் தொண்டனுக்கும் உற்சாக டானிக். இப்படி இருந்த தமிழக தேர்தல் பிரசார மேடை இன்று டிஜிட்டல் வடிவத்திற்குள் நுழைந்துள்ளது.

Stalin

குறிப்பாக தற்போதைய தமிழக தேர்தல் களத்தில் ஆன்லைனில் அதிமுக்கியம் காட்டி வரும் அரசியல் கட்சியாக திமுக விளங்குகிறது. எந்த இணையதளங்களுக்குச் சென்றாலும் அங்கே மு.க.ஸ்டாலினும், உதயசூரியனும் முகம் காட்டத் தவறுவதில்லை. திமுகவின் நடப்புத் தேர்தல் வழிகாட்டியாக விளங்கும் ஐ-பேக்க்கின் அறிவுரைப்படி டிஜிட்டல் மேடையை கனகச்சிதமாகவே திமுக கைப்பற்றி உள்ளது . மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து கிரியேட்டிவிட்டி கலந்து, குறும்படங்களாக்கி அவை திமுகவின் தேர்தல் பிரசாரமாக டிஜிட்டல் மேடைகளில் வலம் வருகின்றன.

“அதிமுகவை புறக்கணிப்போம்..” என்ற வாசகத்தை முதன்மைப்படுத்தி உள்ள திமுகவின் அனிமேஷன் பிரசார படத்தில், நீட் தேர்வில் தோல்வி கண்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா உள்பட நாடு முழுவதும் நீட் தேர்வினால் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டு மாணவர்கள் எப்படி இறந்து போயினர் என்பதை மையப்படுத்தி இக்குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவராக மாறுவதற்கான வாய்ப்பை இந்த நீட் தேர்வு எவ்வாறு தடுத்து நிறுத்தியது என்பதையும் திமுகவின் இந்த வீடியோ விவரிக்கிறது. மேலும் “ ஸ்டாலின் தான் வாராரு..விடியல் தரப் போறாரு...” என்ற திமுகவின் தேர்தல் பிரசாரப் பாடலும் டிஜிட்டல் மேடையில் பிரபலமடைந்து வருகிறது.

Edappadi

திமுகவின் இந்த ஆன்லைன் பிரசாரத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக சார்பில் “ வெற்றி நடை போடும் தமிழகமே..” என்ற காட்சிப்படம் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்து வருகிறது. இதில் அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை எல்லாம் பட்டியலிட்டு காட்சிப்படுத்தி அனைவரையும் கவனம் பெற வைத்துள்ளது. அத்துடன் திமுகவின் நீட் தேர்வு குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு கிராமத்து மாணவி, தனது தந்தையான விவசாயிடம் ஓடிப்போய் அப்பா எனக்கு மெடிக்கல் காலேஜிலே சீட் கிடைச்சிடுச்சு..என மகிழ்ச்சிப் பொங்கச் சொல்கிறார். அதாவது கிராமப்ப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி அண்மையில் சட்டத்திருத்தம் கொண்டு வந்ததை இங்கே ஹைலைட் செய்துள்ளது அதிமுக.

இவை தவிர தேசியக் கட்சிகளான பாஜகவும், காங்கிரஸூம் டிஜிட்டல் மேடைகளில் குறிப்பிட்ட அளவில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. பாஜகவின் வேல் யாத்திரை வீடியோ இணையதளங்களிலும், ஆன்லைனிலும் நல்ல வரவேற்பு பெற்றது. அதேபோல் ராகுல் காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சியின் “ஒரு கை பார்ப்போம்..” என்ற தேர்தல் பிரசார பாடலுக்கும்,நெட்டிசன்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Rahul Gandhi

தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தும் முக்கிய அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக தவிர நாம் தமிழர் போன்ற புதிய கட்சிகளும்கூட டிஜிட்டல் மேடைகளைத்தான் முழு மூச்சாகப் பயன்படுத்துகின்றன. நா.த.க.வின் யூ டியூப், வாட்ஸப் தேர்தல் பிரசாரங்கள் மக்களிடையே பெரும் கவனிப்புக்கு உள்ளாகி வருகிறது. சுமார் 1 கோடி எண்ணிக்கை கொண்ட 18 முதல் 30 வயதுவரை உள்ள வாக்காளர்களில் செய்தித்தாள்களோ, தொலைக்காட்சிகளோ பார்க்கும் ஆர்வம் பெரும்பாலும் மிகமிகக் குறைவு. அவர்களிடம் ஒருவித அரசியல் அணுகுமுறைய சோசியல் மீடியாக்களால் கட்டாயம் உருவாக்க முடியும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

தலைவர்களின் அரசியல் பங்களிப்பு விவரங்கள், சாதனைகள், மாற்றுக் கட்சியினருக்கு பதிலடிகள், கேலிகள், கிண்டல்கள், சாதனைகள், விளம்பரங்கள். மீம்ஸ்கள் இவைகளை எல்லாம் டிஜிட்டல் மேடைகளில் ஏற்றி தமிழக அரசியல் கட்சிகள் அரசியல் ஆதாயம் பார்க்கின்றன. இந்த டிஜிட்டல் மேடை பிரசாரங்கள் வாக்காளர்களிடையே பெரும் தாக்கத்தை கட்டாயம் ஏற்படுத்தும் என்று அரசியல் கட்சியினர் நம்புகிறார்கள். வயது, பாலினம், இடம் இவற்றை எல்லாம் கடந்து அனைத்து தரப்பினரையும் சென்றடைவதற்கு சோசியல் மீடியாக்கள்தான் சரியான களம் என்று கணித்துள்ளன தமிழக அரசியல் கட்சிகள்.

Social Media

திண்ணைகளிலும், தெருமுனைகளிலும், தேனீர்க் கடைகளிலும் அரசியல் பேசி , விடிய விடிய தேர்தல் பிரசார உரை கேட்டு ஜனநாயகம் வளர்த்த பரம்பரை இன்று நாம் வேட்பாளர்களின் முகங்களைக்கூட நேரில் பார்க்காமலேயே, சமூக ஊடகங்கள் வழிவரும் உத்தரவாதங்களையும், பிரசாரங்களையும் நம்பி வாக்களிக்கப்பட வேண்டிய நிலையை டிஜிட்டல் யுகம் நமக்கு அளித்திருக்கிறது. அதனை நம்பி அரசியல் கட்சிகளும் டிஜிட்டலில் அணி வகுத்து நிற்கின்றன. ஆனால் இந்த டிஜிட்டல் மேடை பிரசாரங்கள் வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துமா? அல்லது குழப்பங்களை உருவாக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!.


-பழ.அசோக்குமார்.

கட்டுரை, படங்கள், தொகுதி பிரச்னை குறித்த வீடியோக்களை அனுப்ப க்ளிக் செய்க.... https://bit.ly/39BnZAJ

தமிழகத் தேர்தல் களம் அனல் தகிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகமெங்கும் சுழன்று செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கிறது விகடனின் நிருபர் படை. இந்தப் பணியில் நீங்களும் இணையத் தயாரா?

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்;

தேர்தல் தொடர்பான உங்கள் ஏரியா சுவாரஸ்யங்களோ, கள நிலவரங்களோ... அரசியல் கட்சி மீதான விமர்சனங்களோ அல்லது பார்வைகளோ... தொகுதிப் பிரச்னை, தலைவர்கள் பற்றிய நினைவுகள், தேர்தல் குறித்த நாஸ்டால்ஜியா நினைவுகள் ஆகியவையோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டுரை, படங்கள், வீடியோ என எதிலும் கலக்கலாம். அனுப்ப வேண்டிய லிங்க்: https://bit.ly/39BnZAJ

உங்கள் பங்களிப்புகளுக்கு இங்கே களம் அமைத்துத் தருகிறது விகடன்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://ugc.vikatan.com/election/createarticle



source https://www.vikatan.com/news/politics/impact-of-social-media-in-2021-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக