தனக்கு சீட் கிடைக்கவில்லை என்றபோதும்கூட சோர்ந்துவிடாமல், பரபரவென பிரசாரத்துக்குக் கிளம்பிவிட்டார் பா.ஜ.க மாநில கலைப்பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம். அ.தி.மு.க-வுடனான கூட்டணிப் பஞ்சாயத்து, பா.ஜ.க மீதிருக்கும் விமர்சனங்கள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அவரிடம் பேசினோம்...
‘‘எதிர்பார்த்திருந்த உங்களுக்கு சீட் இல்லை என பா.ஜ.க மறுத்துள்ளதே?’’
‘‘அதில் எனக்கு வருத்தம் கிடையாது. தி.மு.க-வின் அராஜகத்துக்கு முடிவுரை எழுதுவதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டிய நேரம் இது. ரெட் ஜெயன்ட் மூவீஸ், சன் டி.வி., கலைஞர் டி.வியைப் போல ஒரு கார்ப்பரேட் கம்பெனி மாதிரிதான் கட்சியையும் நடத்துகிறார்கள். பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். இவர்களின் முகத்திரையைக் கிழிப்பதுதான் இப்போதைக்கு எனக்கு இருக்கும் வேலை.’’
‘‘பா.ஜ.க-தான் கார்ப்பரேட் அரசியல் செய்கிறது என்று தி.மு.க குற்றம்சாட்டுகிறதே?’’
‘‘இதை அவர்களால் நிரூபிக்க முடியுமா? எல்லா ஒப்பந்தங்களையும் வெளிப்படைத்தன்மையுடன் செய்திருக்கிறோம். பா.ஜ.க ஆட்சியில் கட்சியின் எந்தக் குடும்ப உறுப்பினராவது பலனடைந்தார் எனக் காட்ட முடியுமா?’’
‘‘சமூகநீதிக்கு எதிரான கட்சி பா.ஜ.க என்று கடுமையான விமர்சனம் இருக்கிறதே?”
‘‘கடந்த 1951-ல் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு என்பதை காமராஜர் கொண்டுவந்தார். அந்த இடஒதுக்கீட்டுக்கு 2017-ம் ஆண்டு அரசியல் சாசன உரிமையை அளித்தவர் பிரதமர் மோடி. இதன்படி தேசியப் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் அதிக அதிகாரங்களைப் பெற்றிருக்கிறது. இப்போது சொல்லுங்கள்... நாங்கள் சமூகநீதிக்கு எதிரான கட்சியா?’’
‘‘பா.ஜ.க தேசியத் தலைவர்களின் படங்களைக்கூட போடாமல் அ.தி.மு.க-வினர் போஸ்டர் ஒட்டுகிறார்கள் என்று சர்ச்சையானதே?’’
‘‘அ.தி.மு.க-வுக்கு என்று எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்கிற மாபெரும் தலைவர்கள் இருக்கிறார்கள்.அவர்களே போதுமென அ.தி.மு.க-வினரில் சிலர் கருதியிருக்கலாம். ஆனால், மோடியால்தான் தமிழகத்துக்குப் பல்வேறு சாதனைத் திட்டங்கள் கிடைத்தன என்பதை அந்தச் சகோதரர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.’’
‘‘தமிழகம், திராவிடக் கட்சிகளின் மண் என்ற கருத்து வலுவாக நிலவுகிறது. இதில் ஒரு தேசியக் கட்சி வளரும் என்று நினைக்கிறீர்களா?’’
‘‘இது ஆன்மீக மண். வள்ளலார், வைகுண்டர், ராமானுஜர் ஆகியோர் வளர்த்த மண். பா.ஜ.க கலைப்பிரிவு மூலமாக நமது புராணங்களை தெருக்கூத்து, கும்மி போன்ற கலைகள் மூலமாக மக்களிடம் கொண்டுசேர்க்கிறேன். பா.ஜ.க-வின் கட்டமைப்பு, கிராமப்புறங்களில் வலுவாக வேரூன்றியிருக்கிறது. திராவிடக் கட்சிகளை நம்பி நாங்கள் இல்லை. இன்னும் பத்து வருடங்களில் பாருங்கள்... பா.ஜ.க-வின் வளர்ச்சி விண்ணதிர நிற்கப்போகிறது!’’
source https://www.vikatan.com/government-and-politics/politics/actress-gayathri-raguram-interview
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக