Ad

செவ்வாய், 2 மார்ச், 2021

கரூர்: தொடரும் கந்துவட்டிக் கொடுமை?! - கொடூரமாகத் தாக்கப்பட்ட கூலித் தொழிலாளி

கரூரில் கந்துவட்டிக் கொடுமைக்கு ஆளான பெண் ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி அடங்குவதற்குள், அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர், கந்துவட்டிக்காரர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கும் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சிகிச்சையில் பழனிசாமி

கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கந்துவட்டி பிரச்னை ஏற்பட்டு வருகிறது. கந்துவட்டி கும்பலால், அப்பாவிகள் பாதிக்கப்படுவதும், தாக்கப்படுவதும் அதிகரித்துவருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, வாங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆத்தூர் பகுதியில் கந்துவட்டிக் கொடுமையால் பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவருக்குக் கந்துவட்டி கொடுத்தவர், அந்தப் பெண்ணின் வீட்டை மிரட்டி எழுதி வாங்கியதால், மனம் உடைந்த அந்தப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்பட்டது. இந்தநிலையில், மீண்டும் அதே பகுதியில் கந்துவட்டிக் கொடுமையால் கூலித்தொழிலாளி ஒருவர் கொடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

சிகிச்சையில் பழனிசாமி

கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகே இருக்கிறது ஆத்தூர் சமுத்திரம். இந்தப் பகுதியிலுள்ள காந்திநகர் பகுதியில் வசிப்பவர் பழனிசாமி (வயது 60). கூலித்தொழிலாளியாக இருக்கிறார். இவருக்கு லோகேஷ் என்ற மகனும், பேபி என்ற மகளும் இருக்கிறார்கள். பழனிசாமியின் மகனும் மகளும் திருமணமானவர்கள். இருவரும் தனித்தனியே வசித்துவருகின்றனர். கொரோனா ஊரடங்கு காலத்தில், பணத்துக்குச் சிரமப்பட்ட லோகேஷ், அதே பகுதியைச் சேர்ந்த விக்கியிடம் ரூ. 3,000 கடனாக வாங்கியிருக்கிறார். அதற்கு, நூற்றுக்கு பத்து ரூபாய் வீதம் வட்டி வாங்கிவந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தநிலையில், சம்பவத்தன்று ஆத்தூர் பாரத் பெட்ரோலியம் டெர்மினல் பாயின்ட் அருகே, தனது மகனுடன் பழனிசாமி இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். அப்போது, அங்கே வந்த விக்கி, லோகேஷ் வாகனத்தை மறித்திருக்கிறார். லோகேஷிடம் பெற்ற கடனைத் திருப்பிக் கேட்டு, சட்டையைப் பிடித்து விக்கி அடிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதைத் தட்டிக்கேட்ட பழனிசாமியையும் அவர் மகன் லோகேஷையும் சம்பவ இடத்திலேயே விக்கி தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. அங்கிருந்து தப்பித்து, தனது வீட்டுக்குச் சென்ற பழனிசாமி, தன் மைத்துனர் முனியப்பனுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். இதனால், சம்பவ இடத்துக்கு வந்த முனியப்பன் கண்முன்னேயே, விக்கி பத்து அடியாட்களுடன் வந்து, பழனிசாமியையும், அவரது வீட்டிலிருந்த பொருள்களையும் அடித்து நொறுக்கியதாகச் சொல்கிறார்கள். மேலும், பழனிசாமி, லோகேஷுக்கு ஆதரவாகப் பேசவந்த, முனியப்பனைக் கத்தியைக் காட்டி மிரட்டியதால், முனியப்பன் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார்.

Also Read: கரூர்: `கடனைக் கட்டலைன்னா, கொன்னுருவேன்!'- தற்கொலை செய்துகொண்ட பெண்; சர்ச்சையில் தி.மு.க பிரமுகர்

தொடர்ந்து, பழனிசாமியை வலுக்கட்டாயமாக இருசக்கர வாகனத்தில் தூக்கிவைத்து கடத்திச் சென்ற விக்கி, இரவு முழுவதும் அடித்து துன்புறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து, கரூர் - ஈரோடு சாலையிலுள்ள பாலிடெக்னிக் பகுதியில் சாலையோரமாக பழனிசாமியைத் தூக்கி எறிந்துவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. படுகாயங்களுடன் கிடந்த பழனிசாமியை அப்பகுதியிலுள்ள சிலர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன், கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பழனிசாமியின் மனைவியும்ம் குடும்பத்தாரும் பழனிசாமியைத் தேடிவந்த நிலையில், சாலையோரமாகப் படுகாயங்களுடன் பழனிசாமி மீட்கப்பட்டு மருத்துவமனையிலிருக்கும் தகவல் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. பழனிசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று நாள்கள் கடந்தும், இன்னமும் முதல் தகவல் அறிக்கையைக்கூட பதிவு செய்யாமல் போலீஸார் புகாரைப் பெற்றுக்கொள்ள மறுப்பதாக அவர் மனைவி ராமாயி குற்றம்சாட்டுகிறார்.

இது குறித்து, பழனிசாமியின் மனைவி ராமாயிடம் பேசினோம்.

ராமாயி

``நாங்க ஏழ்மைப்பட்டவங்க. கொரோனா வந்ததுலருந்து என் கணவருக்கோ, மகனுக்கோ சரிவர வேலை கிடைக்கலை. இதனால, வருமானமில்லாம தவிக்கிறோம். இந்தநிலையில், கொரோனோ ஊரடங்கு காலத்தில் ரூ.3,000-த்தை என் மகன் லோகேஷ், ஆத்தூர் பகுதியில இருக்குற விக்கி என்ற நபரிடம் நூத்துக்கு பத்து ரூபாய் வட்டியில கந்து வட்டிக்கு வாங்கினான். விக்கி பத்தி தெரிஞ்சதால, நான் வாங்க வேண்டாம்னு சொன்னேன். ஆனா, குடும்பக் கஷ்டத்துக்காக வாங்கினான். வேலையில்லாத சூழ்நிலையில், ஆறு மாசம் என் மகனால வட்டியும் அசலும் கட்ட முடியலை. இதனால, விக்கி என் மகனுக்குக் கொலை மிரட்டல் விடுத்துட்டிருந்தான். அன்னிக்கு என் மகன் லோகேஷ் சட்டையைப் பிடிச்சு பொது இடத்துல விக்கி தாக்கியிருக்கான். அதைத் தட்டிக்கேட்ட என் கணவரைத் தாக்கினதோட, மீண்டும் பின்தொடர்ந்து வீட்டுக்கு வந்து வீட்டுல இருக்குற பொருள்களை அடிச்சு நொறுக்கிட்டாங்க.

என் கணவரையும் வலுக்கட்டாயமா வாகனத்துல தூக்கிட்டுப் போயி இரவு முழுவதும்வெச்சு தாக்கிட்டு ரோட்டில் வீசிட்டுப் போயிருக்காங்க. என் கணவரோட கால் கட்டைவிரல் பகுதியை கத்தியால காயப்படுத்தி துன்புறுத்தியிருக்காங்க. இரும்புக்கம்பியைக் கொண்டு தலை, உடம்பின் மார்பு, வயிற்றுப் பகுதிகள்ல தாக்கியிருக்காங்க. இதனால, என் கணவர் உயிருக்காகப் போராடிக்கிட்டு இருக்கிறார். உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என் மகனையும் கணவரையும் கொடூரமாகத் தாக்கிய விக்கி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கண்ணீரோடு தெரிவித்தார்.

கரூர் மருத்துவக் கல்லூரி

இது குறித்து, விக்கியிடம் பேச முயன்றோம். முடியவில்லை. வாங்கல் காவல் நிலையத்தில் பேசினோம்.

``விசாரணை போய்க்கிட்டு இருக்கு. விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மட்டும் சொன்னார்கள். 'கரூர் மாவட்ட காவல்துறை, கந்துவட்டிக்காரர்களால் அப்பாவிகளுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்க, கந்துவட்டி கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்' என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/crime/karur-daily-labor-attacked-in-financial-issue-police-investigation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக