Ad

செவ்வாய், 2 மார்ச், 2021

திருவள்ளூர்: தேர்தல் பணிகள் விறு விறு... மாவட்ட எல்லைகளில் தீவிர சோதனை!

சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானதிலிருந்து தற்போது வரை திருவள்ளூர் மாவட்ட போலீஸார், பொது இடங்களில் தேர்தல் விதிமுறைகளை மீறி விளம்பரப் பதாகைகள்  வைத்ததாக  திருவள்ளூர், திருத்தணி, ஊற்றுக்கோட்டை, பொன்னரி, கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளில் அரசியல் கட்சியினர் மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது 55 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அந்த வகையில், 10 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகள்  சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. சட்டப்பேரவைத்  தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றைய தினம் ஆட்சியர் பொன்னையா  தலைமையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், வங்கி மேலாளர்கள், மண்டப  உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள் உள்ளிட்டோருடன்  ஆட்சித் தலைவரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான பொன்னையா தேர்தல் நடத்தை விதிகளை விளக்கிக் கூறி ஆலோசனை நடத்தினார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் பொன்னையா, ``திருவள்ளூர் மாவட்டத்தின் 10 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்காளர்கள் எண்ணிக்கை 34,98,829. வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக 1,334 இடங்களில் 3,622 வாக்குச்சாவடிகள் மற்றும் 1,280 துணை வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் இருக்கின்றன. மாவட்டத்தில் 80 வயதைக் கடந்தோர் 57,500 பேரும், மாற்றுத்திறனாளிகள் 18,738 பேரும்  உள்ளனர். அவர்கள் அனைவரும் தபால் மூலமாக வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

மாவட்டத் தேர்தல் அலுவலர் தலைமையில் 30 பறக்கும் படைகள், 30 நிலைக்குழுக்கள் மற்றும் 10 ஒளிப்பதிவுக் குழுக்கள் களத்தில் பணியாற்றிவருகின்றன. தேர்தல் நடத்தை விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படுவோரை மிக உன்னிப்பாக கண்காணித்துவருகிறோம். வாகனங்களில் சட்டவிரோதமாகப் பணம், பொருள்கள் போன்றவை கொண்டு செல்லப்படுகின்றனவா என்பதைத் தீவிரமாகக் கண்காணித்துவருகிறோம். தேர்தல் அலுவலர் தலைமையில் தேர்தல் தொடர்பான புகார்களைப் பெற்று உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளக் குழு தயாராக இருக்கிறது. புகார்களைப் பெறுவதற்காக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறையை உருவாக்கியிருக்கிறோம். மக்கள் 044-27661950, 044-27661951 ஆகிய இரு தொலைபேசி எண்கள் மற்றும்  9445911161, 9445911162 ஆகிய இரு வாட்ஸ்அப் எண்கள் மூலம் புகார்களை அளிக்கலாம்" என்றார்.

சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானதிலிருந்து தற்போது வரை திருவள்ளூர் மாவட்ட போலீஸார் பொது இடங்களில் தேர்தல் விதிமுறைகளை மீறி விளம்பரப்  பதாகைகள்  வைத்ததாக, திருவள்ளூர், திருத்தணி, ஊற்றுக்கோட்டை, பொன்னரி மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளில் அரசியல் கட்சியினர் மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது 55 வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

Also Read: ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு! #VisualStory

அதேபோல், தமிழக - ஆந்திரா எல்லைப் பகுதியில்  அமைந்திருக்கும் மாவட்டம் என்பதால், மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் போலீஸார் சோதனையைத் தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.

இது குறித்து மாவட்ட எஸ்.பி அரவிந்தன் கூறுகையில், ``ஆந்திர எல்லையான திருத்தணி, பொன்பாடி சோதனைச்சாவடி, மாவட்ட எல்லைகளான திருமழிசை, நரசிங்கபுரம் உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும், ஓர் உதவி ஆய்வாளர்  தலைமையில், நான்கு போலீஸார், வருவாய்த்துறையினர் அடங்கிய கண்காணிப்புக்குழுவினர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்களைத் தீவிர சோதனை செய்யவும், அவற்றை வீடியோ மூலம் பதிவு செய்யவும் அறிவுறுத்தியிருக்கிறோம்" என்றார்.



source https://www.vikatan.com/news/election/election-work-is-in-full-swing-in-tiruvallur-district

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக