Ad

புதன், 10 மார்ச், 2021

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா! மீண்டும் ஊரடங்கா? உண்மை நிலை என்ன!

கடந்த ஒருவருடத்தில் கொரோனா என்னும் ஒற்றைப் பெயர் ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டிப்படைத்து விட்டது. இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலகம் முழுவதும் 11.82 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.63 மக்கள் உயிரிழந்துள்ளனர். 9.38 கோடி நபர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை 1.12 கோடி நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 1.58 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 1.09 கோடி நபர்கள் தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

கொரோனா

தமிழகத்தில் முதல் கொரோனா தொற்று கடந்தாண்டு மார்ச் மாதம் 07-ம் தேதி கண்டறியப்பட்டதாகக் கூறப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவல் ஆரம்பித்து ஒரு வருடம் முடிந்துவிட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரைக் கடந்த வருடத்தில் தினசரி புதிய தொற்றுக்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை 8,000 என்ற எண்ணிக்கையை கடந்த நிலையெல்லாம் இருந்தது. அந்த தொற்றின் பாதிப்பு படிப்படியாகக் குறைக்கப்பட்டு தினசரி பாதிப்பின் எண்ணிக்கை 400 என்ற எண்ணிக்கையில் நீண்ட நாட்களாக இருந்து வந்தது.

கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த காலம்ப் முதல் இன்றுவரை வைரஸ் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 8,56,246. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,525. மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 8,39,648.

4,073 பேர் தற்போது வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,79,55,850 மாதிரிகள் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா பரிசோதனை

நேற்றைய நிலவரப்படி, புதிதாகத் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 569. தினசரி பாதிப்புகள் 400 என்ற எண்ணிக்கையிலிருந்த நிலையில், மீண்டும் உயர்ந்து வருகிறது. இந்த நிலை தமிழகத்தில் மட்டுமில்லை, மகாராஷ்டிரா (9,927) , கேரளா (2,316) ஆகிய மாநிலங்களிலும் பாதிப்பின் விகிதம் கடந்த ஆண்டைப் போலவே தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தமிழகத்திலும் கடந்த வார நிலையை விட புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. மக்கள் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளாததே இந்த எண்ணிக்கை அதிகரிப்புக்குக் காரணம் என்றும் சுகாதாரத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

கொரோனா பரிசோதனை

தமிழகத்தின் நிலை என்ன?

கொரோனா பாதிப்பு அதிகரித்த காலத்தில் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டதின் காரணமாக பாதிப்பின் கட்டுக்குள் வந்தது. அதுமட்டுமல்லாது, சென்னையில் மேற்கொள்ளப்பட்ட காய்ச்சல் முகாம், வீடுதோறும் சென்று மக்களின் உடல்நிலையைப் பரிசோதனை செய்யும் திட்டங்கள் மகாராஷ்டிரா போன்ற மற்ற மாநிலங்களிலும் பின்பற்றப்பட்டது.

தமிழகத்தில் அன்று தொட்டு இன்றுவரை, கொரோனா தொற்றைக் கண்டறிய ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களில் கொரோனா தொற்று குறைய ஆரம்பித்ததுமே பரிசோதனைகளைக் குறைத்துவிட்டனர். தமிழகத்தில் அன்று தொட்டு இன்று வரை மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகள் குறைக்கப்படவே இல்லை. இன்று நாளொன்றுக்குத் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பரிசோதனை எண்ணிக்கை 55,000.

தமிழகத்தில் இதுவரை 10,38,803 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

தமிழகத்தில் கொரோனா கண்காணிப்பு முகாம்கள் பலவும் பள்ளி, கல்லூரி வளாகங்களில் ஏற்படுத்தப்பட்டிருந்தது. தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறையவும் அந்த முகாம்களில் பல முகாம்கள் காலி செய்யப்பட்டுவிட்டது. இருந்த போதும், பெரும்பாலான மருத்துவமனைகளில் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு ஏற்பாடுகள் அனைத்துமே இன்றுவரை அப்படியே தான் இருக்கிறது.

மீண்டும் ஊரடங்கு வருமா?

``பொதுமக்கள் முன்பு இருந்தது போலவே முகக்கவசம் அணிந்து, சரியான சமூக இடைவெளிகளை பின்பற்றுதல் போன்ற கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இல்லையென்றால், தற்போது மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள நிலை தான் தமிழகத்திற்கும் ஏற்படும். முன்புபோல மக்கள் இப்போது முகக்கவசம் அணிவது இல்லை. கொரோனா தொற்று முழுமையாக நீங்கும்வரை மக்கள் பாதுகாப்போடு இருக்க வேண்டும். சிறிய அலட்சியமும் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும்" என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழக சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், ``தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும். மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதையும் உறுதிசெய்யவேண்டும். கொரோனா தொற்று உறுதியானவருடன் தொடர்பிலிருந்தவர்களையும், அவருக்குத் தொற்று ஏற்பட்டதன் காரணத்தையும் கண்டறியவேண்டும்."

``ஒரு தெருவில் மூன்றுக்கும் அதிகமான நபர்களுக்குத் தொற்று உறுதியானால், அந்த பகுதியை நோய் கட்டுப்பட்டு பகுதியாக அறிவித்துத் தடுப்புப் பணியை மேற்கொள்ளவேண்டும். அலுவலகங்களிலும், மற்ற இடங்களிலும் முறையான வழிகாட்டுதல் நெறிமுறை கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை உறுதிசெய்யவேண்டும். ஒருவருக்குக் காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தொற்று இல்லை என்ற சான்று அளித்தால் மட்டுமே மீண்டும் அலுவலகத்தில் அனுமதிக்க வேண்டும்".

கொரோனா பரிசோதனை

``சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அந்த மாவட்டங்களில் மீண்டும் கொரோனா கேர் சென்டர்களை அதிகரிக்க வேண்டும். மகாராஷ்டிரா, கேரளா, போன்ற மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. எனவே வரும் மார்ச் மாதம் நமக்கு மிகவும் சவாலாக இருக்கும். வரும் நாட்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறைக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தனர்.

அரசு என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டாலும், கொரோனா கட்டுப்பாட்டில் இருப்பதும் கட்டவிழ்த்து விடுவதும் மக்களாகிய நமது கையில் தான் இருக்கிறது.

``கொரோனா ஜாக்கிரதை"



source https://www.vikatan.com/government-and-politics/healthy/corona-on-the-rise-again-in-tamil-nadu-what-is-happening-in-tamil-nadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக