Ad

புதன், 17 மார்ச், 2021

எதிர்க்கட்சியில்லாத சட்டசபை என்கிற ஸ்டாலின் கனவு சாத்தியமா?

இந்திய அரசியலைப்புச் சட்டப்படி நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடந்தாக வேண்டும். தமிழக சட்டசபையைப் பொறுத்தவரை, 234 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதற்கான தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடக்கவிருக்கிறது. ‘ஃபுல் ஸ்வீப்’ செய்து எதிர்க்கட்சியே இல்லாத சட்டசபையை அமைத்திட வேண்டும் என்பதுதான் தி.மு.க தலைவர் ஸ்டாலினின் கனவாம். இதுகுறித்து நம்மிடம் பேசிய ஸ்டாலினுக்கு நெருக்கமான சிலர், ”234 தொகுதிகளில் சரிபாதிக்கும் ஒன்று கூடுதலாக, அதாவது 118 தொகுதிகளைக் கைப்பற்றும் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்கும். மொத்த தொகுதிகளில் 10 சதவிகித இடங்களைப் பிடிக்கும் கட்சி எதிர்க்கட்சியாக அமரும். அதாவது, 234-ல் 10 சதவிகிதம் என்பது 24. அந்த வகையில்தான், 2011 தேர்தலில் அ.தி.மு.க ஜெயிக்க, அதன் கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க 29 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக அமர்ந்தது.

ஜெயலலிதாவுடன் விஜயகாந்த்

2016 தேர்தலில் 89 தொகுதிகளைக் கைப்பற்றி தி.மு.க எதிர்க்கட்சியாக அமர்ந்தது. வரக்கூடியத் தேர்தலில் எதிர்க்கட்சியே இருக்கக் கூடாது என்பதுதான் ஸ்டாலினின் கனவு. எதிர்க்கட்சி என்று இருந்தால், ஒவ்வொரு சட்டம், தீர்மானங்கள் நிறைவேற்றும்போதும், அது அவர்களுடைய கொள்கை விரோதமாக இருந்தால் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். அவையில் கூச்சலிடுவார்கள். அவைக் காவலரைக் கொண்டு வெளியேற்றப்படுவார்கள். இதையெல்லாம் இந்த 5 ஆண்டுகளில் தி.மு.கவே நிறைய முறை செய்திருக்கிறது. இதனால், நிம்மதியாக அவையை நடத்த முடியாது. இறுதியாக நடந்த சட்டசபைக் கூட்டத்தை தி.மு.க மொத்தமாக புறக்கணித்ததால், ஆளுங்கட்சி மட்டும் அமைதியாக நடத்தி முடித்தது.

மேலும், 2011 போல தி.மு.க-வுடன் கூட்டணியிலிருக்கும் காங்கிரஸ் 24 எம்.எல்.ஏ-க்களைப் பெற்றால், அன்று ஜெயலலிதாவுக்கு விஜயகாந்தால் நேர்ந்த மனக்கசப்பு, வரும் காலங்களில் ஸ்டாலினுக்கு ஏற்படும். ஒன்று அ.தி.மு.க எதிர்க்கட்சியாக வந்து அமர்ந்துவிடக் கூடாது. இரண்டு, காங்கிரஸும் அப்படி ஒரு நிலையை எட்டிவிடக்கூடாது என்பதால்தான், வெறும் 25 தொகுதிகளுடன் காங்கிரஸை சுருக்கிவிட்டார்!” என்றார்கள்.

பிளான் ஓகே தான்.. ஆனால் ஸ்டாலினின் இந்த கனவு சாத்தியமா? உங்கள் கருத்துகளை கமெண்டில் பதியுங்கள்...



source https://www.vikatan.com/news/politics/stalin-dream-is-a-assembly-without-opposition-party

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக