Ad

சனி, 20 மார்ச், 2021

ஓமலூர்:`இது எங்கள் தொகுதியின் தேவை’ - வாக்காளர் தேர்தல் அறிக்கை வெளியிட்ட இளைஞர்கள்

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள இளம் வாக்காளர்கள் இணைந்து ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில் மிக நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள முக்கிய கோரிக்கைகளை தயார் செய்துள்ளனர். வேட்பாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக கலெக்டர் அலுவலகத்தில் அந்த கோரிக்கைகளை அறிவித்ததோடு அதை நிறைவேற்றும் வேட்பாளருக்கே வாக்களிப்போம் என்றும், வாக்குக்கு பணம் வாங்க மாட்டோம். என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தமிழ் மனோஜ்

இதுபற்றி ஓமலூரைச் சேர்ந்த இளைஞர் தமிழ் மனோஜ் பிரசாந்த், கூறுகையில் ``வாக்காளர்களாகிய நாங்கள், தொகுதி முழுவதும் உள்ள மக்கள் கோரிக்கைகளைச் சேகரித்து வாக்காளர் அறிக்கை வெளியிட்டு இருக்கிறோம். இதற்காக நாங்கள் ஒரு மாத காலம் தொகுதி முழுவதும் சென்று அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களின் முக்கிய கோரிக்கைகளை பட்டியலிட்டு வாக்காளர் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறோம்.

வாக்காளர் அறிக்கை:

- சரபங்கா ஆற்றை தூர் வாரி தடுப்பணை கட்டுவதோடு நீரேற்று முறையில் காவிரி நீரை சரபங்கா ஆற்றில் இணைக்க வேண்டும்.

- சரபங்கா ஆற்றில் வரும் நீரை ஓமலூர் தொகுதி முழுவதும் உள்ள ஏரிகளில் நிரப்ப வேண்டுமென்பது தொகுதி முழுவதும் பெரும்பான்மை மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

- ஓமலூர் தொகுதிக்குட்பட்ட கருப்பூரில் உள்ள டோல்கேட்டில் உள்ளூர் வாகனங்கள் செல்ல இலவச அட்டை வழங்க வேண்டும். என்பது ஓமலூர் தொகுதியில் உள்ள அனைத்து இளைஞர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

- ஓமலூர் தொகுதியில் உள்ள காமாலாபுரம், பூசாரிப்பட்டி, காடையாம்பட்டி, புளியம்பட்டி பகுதிகளில் சாமந்தி, மல்லிகை பூங்கள் விளைச்சல் அதிகமாக இருக்கிறது. அதை சந்தைப்படுத்த ஓமலூரில் செவ்வாய் கிழமை மட்டும் சந்தை கூடுகிறது. அதை தினசரி மார்க்கெட்டாக மாற்ற வேண்டும்.

- மலர்கள் விற்கப்படாமல் வீணாவதைத் தடுப்பதற்கு வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

- ஓமலூர் தொகுதியில் காடையாம்பட்டியில் தயாரிக்கப்படும் குண்டு வெல்லத்திற்கும், பஞ்சுகாளிப்பட்டியில் நெய், பட்டுப் புடவைகளுக்கும், கே.ஆர். தோப்பூர், எல்லாயூர், செம்மண்கூடல் பகுதியில் திரிக்கப்படும் கயிறுகளுக்கும் புவிசார் குறியீடு வழங்க வேண்டும்.

- கயிறுகளுக்கு விலை நிர்ணயம் செய்ய சங்கம் ஏற்படுத்தி தரவேண்டும். தாராபுரம், சின்னதிருப்பதியில் நெய்யும் கோரைப்பாய்களுக்கு இலவச மின்சாரமும் வழங்க வேண்டும். இப்படி பல கோரிக்கைகளை அறிவித்து இருக்கிறோம்'' என்றார்.

பிரவின்

இதுபற்றி பிரவின் கூறுகையில், ``மனோஜ் மிகுந்த சமுதாய சிந்தனை உடையவர். கொரோனா காலத்தில் எங்களையெல்லாம் ஒருங்கிணைத்து பொதுமக்களுக்கு உணவு மற்றும் மளிகை பொருட்கள் கொடுக்க ஏற்பாடு செய்தார். `தேர்தலில் பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்க கூடாது. அதே வேளையில் நம் தொகுதியில் உள்ள வாக்காளர்களின் தேவைகளை அறிந்து வேட்பாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்’ என முடிவெடுத்து அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறோம். எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றி தருபவர்களுக்கே வாக்களிப்போம். தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட திட்டமிட்டிருக்கிறோம்'' என்றார்.



source https://www.vikatan.com/news/politics/omalur-constituency-youth-have-released-the-voter-statement

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக