நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளி மண்டல பகுதியான மசினகுடியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தனியார் தங்கும் விடுதி வளாகத்துக்குள் இரவு நேரத்தில் உணவு தேடி வந்த ஆண் காட்டுயானையின் மீது எரியும் தீப்பந்தத்தை தூக்கியெறிந்து கொளுத்திய வீடியோ வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
யானையின் இடது காது மற்றும் உடலில் ஏற்பட்ட கடுமையான தீ காயம் காரணமாக கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தது.
காட்டுயானை மீது தீ பந்தத்தை வீசி, பலத்த காயத்தை ஏற்படுத்தி, அதன் இறப்பிற்கு காரணமான மசினகுடியைச் சேர்ந்த பிரசாத்(36), மாவனல்லா, குரூப் அவுஸ் பகுதியை சேர்ந்த மல்லன் என்பவரின் மகன் ரேமண்ட் டீன்(28) ஆகியோரை வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் கடந்த ஜனவரி 22ம் தேதியன்று கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபரான ரேமண்டின் சசோதரர் ரிக்கி ராயன்(31) கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக உள்ளார். தலைமறைவாக உள்ள ரிக்கி ராயனின் முன் ஜாமீன் மனுவையும் ஊட்டி நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்தது.
இதனிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு குன்னூர் கிளை சிறையில் உள்ள பிரசாந்த் மற்றும் ரேமண்ட் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார்.
இந்த அதிரடி குறித்து முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல துணை இயக்குநர் ஸ்ரீகாந்த், "காட்டுயானை மீது தீப்பந்தம் வீசி கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு குன்னூர் கிளை சிறையில் உள்ள பிரசாந்த் மற்றும் ரேமண்ட் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இன்று சிங்கார வன சரகர் தலைமையில் வனத்துறையினர் சம்பந்தப்பட்ட இருவரிடமும் உத்தரவை வழங்கி கோவை மத்திய சிறையில் அவர்களை ஒப்படைக்க உள்ளனர். தலைமறைவாக உள்ள ஒருவரை கைது செய்ய காவல்துறை உதவியை நாடியுள்ளோம்" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/environment/goondas-act-on-the-persons-who-thrown-fire-on-elephant
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக