Ad

வியாழன், 18 மார்ச், 2021

``ஒரு தெருநாய்க்கு உள்ள மரியாதைகூட போராடும் விவசாயிகளுக்கு இல்லை!" - கொதித்த மேகாலயா ஆளுநர்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் பேட்டி அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "டெல்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்தை மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு அசட்டை செய்து வருகிறது. ஒரு தெருநாயின் உயிரிழப்புக்குக்கூட துக்கம் அனுசரிக்கப்படுகிற காலத்தில் வாழ்கிறோம். ஆனால், டெல்லியில் 100 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம்

அவர்களுக்கு ஆதரவான விஷயங்கள் எதையும் மத்திய அரசு முன்னெடுக்கவில்லை. இந்த விஷயம் சம்பந்தமாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பேசி வருகிறேன். விவசாயிகளை வெறுங்கைகளுடன் போராட்டக் களத்திலிருந்து திருப்பி அனுப்பக் கூடாது. அவர்களுடன் மீண்டும் பேச்சு வார்த்தையைத் தொடங்கி நல்ல தீர்வு கிடைக்க செய்ய வேண்டும்.

டெல்லியில் போராடும் விவசாயிகள் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருந்தால் எதிர்காலத்தில் உத்தரப் பிரதேசம், ஹரியானா, மேற்கு ராஜஸ்தானில் பி.ஜே.பி வலுவிலக்கும். இதை மத்திய அரசு உணர வேண்டும். போராடும் விவசாயிகளுக்கு எதிராக போலீசாரைப் பிரயோகப்படுத்தக் கூடாது என பிரதமரை நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லை.

எந்த ஒரு நாட்டில் விவசாயிகளும், ராணுவ வீரர்களும் திருப்தியாக இல்லையோ அந்த நாடு முன்னேற்றப் பாதையில் செல்லாது. எனது இந்தப் பேச்சு பி.ஜே.பியைப் பலவீனப்படுத்தும் என நான் நினைக்கவில்லை. ஆனால், போராடும் விவசாயிகள் மத்தியில் நமக்காக குரல் கொடுக்க ஒருத்தர் இருக்கிறாரே என்ற நம்பிக்கை ஏற்படும்" என்று தெரிவித்துள்ளார்.

சத்யபால் மாலிக்

பெரும்பான்மையான மாநில ஆளுநர்கள், ஆளும் பி.ஜே.பி அரசுக்கு எதிராக எந்தக் கருத்தும் தெரிவிப்பதில்லை. சொல்லப்போனால் மத்திய அரசுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மேகாலயா ஆளுநர் அளித்துள்ள பேட்டி பி.ஜே.பிக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து போராடி விவசாயிகளுக்கு ஆதரவாக ஆளும் தரப்பிலிருந்து எந்தவொரு ஆதரவு குரலும் வராத நிலையில் இந்தப் பேட்டியை அளித்துள்ளார். இவர் முன்னாள் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/meghalaya-governor-satya-pal-malik-commented-on-delhi-farmers-protest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக