Ad

வியாழன், 25 மார்ச், 2021

மக்கள் நீதி மய்ய வேட்பாளரின் நண்பர் வீட்டில் ஐடி ரெய்டு - ரூ.8 கோடி சிக்கியது!

திருச்சி மக்கள் நீதி மய்ய வேட்பாளரின் நண்பர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையில், 8 கோடி ரூபாய் பணம் மற்றும் ஆவணங்கள் கையும் களவுமாக கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

கடந்த வாரம் மக்கள் நீதி மய்ய பொருளாளர் சந்திரசேகர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை ரெய்டில் 80 கோடி ரூபாய் வருமான வரி ஏய்ப்பு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தநிலையில், மீண்டும் ஒரு வருமான வரி சோதனை நடந்திருப்பது திட்டமிட்ட சதி என மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் கொந்தளிக்கின்றனர்.

மொராய்ஸ் சிட்டி

திருச்சி கிழக்குத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக வெல்லமண்டி நடராஜன், தி.மு.க வேட்பாளராக இனிகோ இருதயராஜ், மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக வீரசக்தி ஆகியோர் போட்டியிடுகிறார்கள். திருச்சி பகுதியில் வி.ஐ.பி-க்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதி மொராய்ஸ் சிட்டி. அடுக்குமாடிக் குடியிருப்புகள்கொண்ட இந்தக் கட்டுமானத்தை மேற்கொண்டவர் லேரோன் மொராய்ஸ். இவர் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வீரசக்தியின் நெருங்கிய நண்பர் என்று சொல்லப்படுகிறது.

அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து மொராய்ஸ் வீட்டில் சோதனை நடந்தது. அதில், 8 கோடி ரூபாய் பணமும், ஆவணங்களும் சிக்கியிருக்கின்றன. இரண்டு நாள்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகிறார்கள்.

அலுவலகத்தில் ஆய்வு செய்யும் அதிகாரிகள்

மேலும், மொராய்ஸ் சிட்டி நிறுவனம், செப்கோ பிராபர்ட்டி என்ற நிறுவனத்தின் மூலம் பல்வேறு கட்டுமானப் பணிகளைச் செய்துவருகிறது. அந்த நிறுவனத்தின் அலுவலகங்களிலும் சோதனை நடந்தது.

அடுத்தடுத்து மக்கள் நீதி மய்யம் பிரமுகர்கள், வருமான வரி சோதனையில் சிக்குவதால் கமல்ஹாசன் அதிர்ச்சியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. `ஏன் அ.தி.மு.க-வினர் வீடுகளில் பணம் எதுவுமே இல்லையா? எங்களை மட்டும் குறிவைக்க என்ன காரணம் என்று நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள்’ என்று ஆவேசப்படுகின்றனர் கமலின் ஆதரவாளர்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/8-crore-ceased-from-mnm-candidate-friend-morais

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக