Ad

வியாழன், 25 மார்ச், 2021

`ஸ்டாலின் சுயமாக இல்லை; வீட்டுக்குள் இருக்கும் ஒரு சக்தி அவரை இயக்குகிறது’ - சின்னசாமி குற்றச்சாட்டு

``தி.மு.க தலைவரால் சுயமாக முடிவு எடுக்க முடியவில்லை. அவரை வீட்டுக்குள் இருக்கும் ஒரு சக்தி இயக்குகிறது. தி.மு.க கரூர் மாவட்டத்தில் நிறுத்தியுள்ள நான்கு வேட்பாளர்களைவிட, எனக்கு என்ன தகுதி இல்லை என்று தெரிவித்தால், நான் விலகிக்கொள்கிறேன்" என்று முன்னாள் அமைச்சர் கரூர் சின்னசாமி அதிரடியாகப் பேசியிருக்கிறார்.

கரூர் சின்னசாமி

தி.மு.க மாநில விவசாய அணிச் செயலாளராகப் பதவிவகித்தவர் முன்னாள் அமைச்சர் கரூர் சின்னசாமி. இந்தத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் சீட் கேட்டு, தீவிரமாக முயன்றார். ஆனால், அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. மொஞ்சனூர் இளங்கோ என்ற புதுமுகத்துக்கு சீட் கிடைத்தது. `சின்னசாமிக்கு சீட் கிடைக்காததற்குக் காரணம் செந்தில் பாலாஜிதான். அரவக்குறிச்சியில் சீட் கிடைத்து, சின்னசாமி வென்றுவிட்டால், அமைச்சர் ரேஸிலும், கட்சி முக்கியத்துவத்திலும் தனக்குப் போட்டியாக சின்னசாமி வந்துவிடுவார் என்பதற்காகத்தான், செந்தில் பாலாஜி, சின்னசாமிக்கு சீட் கிடைக்கவிடாமல் முட்டுக்கட்டையாக இருந்திருக்கிறார்' என்று தி.மு.க-வினர் மத்தியில் பேச்சு நிலவுகிறது.

Also Read: `கரூரில் திமுக-வை செந்தில் பாலாஜி ஒழித்துக்கட்டிவிட்டார்!' - தம்பிதுரை

கரூர் சின்னசாமி

அதிருப்தியில் இருந்த சின்னசாமி அ.தி.மு.க-வுக்கு தாவப்போகிறார் என்று சொல்லப்பட்டது. அதை அவர் ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. இந்தநிலையில், மார்ச் 24 - ம் தேதி கரூர் வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், அ.தி.மு.க-வில் தன்னை ஐக்கியமாக்கிக்கொள்ள சின்னசாமி முடிவெடுத்துவிட்டார் என்ற பரபர பேச்சு எழுந்தது. அதை நிரூபிக்கும் வகையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு எதிராகப் பேசி, அதிரவைத்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய சின்னசாமி,

``திராவிட முன்னேற்றக் கழக தலைமையை ஏற்று, கடந்த 10 ஆண்டுகளாகப் பணியாற்றினேன். பத்தாண்டுகளாக சகோதரனாக என்னிடம் தி.மு.க தலைவர் பழகிவந்தார். ஆனால், சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு எனக்கு வாய்ப்பு வழங்காமல் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி தட்டிக் கழித்துவந்தார். மக்களிடம் அன்பான ஆதரவைப் பெற்ற என்னைப் போன்ற எளிய தொண்டனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது, மிகவும் வருத்தமளிக்கிறது. அதற்கு தி.மு.க தலைவரான ஸ்டாலின் காரணமல்ல. அவருக்குப் பின்னாலிருந்து ஏதோ ஒரு சக்தி இயக்குகிறது என்பதைப் பின்னாளில் தெரிந்துகொண்டேன். நான் அவருக்குத் தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை. அதனால், தி.மு.க-விலிருந்து என்னை விடுவித்துக்கொள்கிறேன். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினால், சுயமாகவும் சுதந்திரமாகவும் முடிவெடுக்க முடியவில்லை.

பேட்டியளிக்கும் கரூர் சின்னசாமி

அவரை வீட்டுக்குள்ளிருந்து ஏதோ ஒரு சக்தி இயக்குகிறது. கரூர் மாவட்டத்திலுள்ள தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி எனக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது என தலைமையிடம் வலியுறுத்தினாரா என்று கேட்கிறீர்கள். ஆனால், கரூர் மாவட்டத்திலிருந்து யாரும் எனக்கு எவ்விதத் தொந்தரவும் கொடுக்கவில்லை. தி.மு.க தலைவரின் வீட்டிலிருந்துதான் ஒரு சக்தி அவரை இயக்குகிறது. நான் தி.மு.க தலைவரின் வீட்டின் பின்வழியாக வீட்டுக்குள் சென்று, அவரிடம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்க விரும்பவில்லை. எனக்குத் தகுதி இருந்தும் வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து எனக்கு பதில் கிடைக்கவில்லை.

Also Read: `கரூரில் திமுக-வை செந்தில் பாலாஜி ஒழித்துக்கட்டிவிட்டார்!' - தம்பிதுரை

கரூர் மாவட்டத்தில் தி.மு.க நிறுத்தியுள்ள நான்கு வேட்பாளர்களைவிட, எனக்கு என்ன தகுதி இல்லை என்று தெரிவித்தால், நான் விலகிக்கொள்கிறேன். அதேபோல், அ.தி.மு.க-விலிருந்து விலகி, தி.மு.க-வில் சேர்ந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டதன. தற்போது ஏன் மறுபடியும் அ.தி.மு.க-வுக்குப் போகிறீர்கள் என்று கேட்கிறீர்கள். அ.தி.மு.க-வை மன்னார்குடி கும்பல் முன்னர் இயக்கியது. அதுபோல, தற்போது தி.மு.க-வில் ஒரு சக்தி உருவாகியுள்ளது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஒரு கடுமையான உழைப்பாளி. அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இன்னொரு சக்திக்குக் கட்டுப்படுபவர் எப்படி ஒரு நல்ல ஆளுமையாக இருக்க முடியும்? அதேபோல், '`.தி.மு.க-வில் தற்போது உங்களைவிட வயது குறைவாக இருக்கும், அனுபவம் குறைவாக இருக்கும் தலைவர் வழிநடத்துகிறார். அதில் நீங்கள் இணைந்து பணியாற்ற உங்களுக்குச் சுணக்கமாக இருக்காதா?'னு பலரும் கேட்கிறாங்க.

சஸ்பெண்ட் கடிதம்

அ.தி.மு.க கட்சி என்பது தொண்டர்கள் தலைவராகக்கூடிய கட்சி. தற்போது, தொண்டர்கள் கையில் கட்சி உள்ளது. எனவே, அதில் இணைந்து பணியாற்ற எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. எனவே, அ.தி.மு.கவில் நாளை முதல்வர் பழனிசாமி தலைமையில் இணைந்து, தேர்தலில் தி.மு.க-வுக்கு எதிராகப் பிரசாரம் செய்யவிருக்கிறேன். எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்பது, மக்கள் கையில்தான் உள்ளது" என்றார்.

இந்தநிலையில் தி.மு.க தலைமை, கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்விதமாகவும் சின்னசாமி நடந்துகொண்டதாகக் கூறி, சின்னசாமியை கட்சியிலிருந்து தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/karur-chinnasami-speech-against-mkstalin

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக