Ad

புதன், 24 மார்ச், 2021

``8 வயசுல அவன் அதைப் பண்ணதே அற்புதம்தான்!" - நாகவிஷால் பற்றி இயக்குநர் மதுமிதா

2019-ம் ஆண்டுக்கான 67-வது தேசிய விருதுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. இதில் இயக்குநர் மதுமிதா இயக்கிய கே.டி (எ) கருப்புதுரை படத்தில் நடித்த சிறுவன் நாகவிஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மதுமிதாவிடம் பேசினோம்.

கார்த்திகேயா மூர்த்தி, மதுமிதா, நாகவிஷால், மெய்யேந்திரன் கெம்புராஜ், மு.ராமசாமி, சபரிவாசன் சண்முகம்

``ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதை எங்க ஒட்டுமொத்த டீமின் வெற்றியாகத்தான் பார்க்கிறோம். ஆறு முதல் அறுபது வரைன்னு சொல்லுவாங்க. ஆனா, எட்டு முதல் எண்பது வரைங்கிறதுதான் கே.டி (எ) கருப்புதுரை படத்தின் கதைக்களம். பொதுவா, பெற்றோர்களின் அரவணைப்பில் வாழும் குழந்தைகள் எப்போதுமே பாதுகாப்பாக இருப்பாங்க. அவங்களுக்கு எல்லா இடத்திலேயும் பெற்றோரின் வழிகாட்டுதல் கிடைக்கும். ஆனா, யாருமே இல்லாம ஆதரவற்ற நிலையில் வாழும் குழந்தைகள் ரொம்பவே தைரியமாக இருப்பாங்க. எந்தச் சூழலிலும் அவங்களை அவங்களா காப்பாத்திக்க முடியும்னு ஒரு நம்பிக்கை அவங்ககிட்ட இருக்கும். அப்படியான ரோலில்தான் நாகவிஷால் நடிச்சான்.

நான் கதையை எழுதிட்டு யோசிச்சப்போ, அந்தப் படத்தில் குட்டி கேரக்டரில் நடிக்கப்போகும் சிறுவனுக்கு நானே ஓர் உருவம் கொடுத்து வெச்சிருந்தேன். சென்னையில் நிறைய ஆடிஷன்கள் நடந்துச்சு. நிறைய குழந்தை நட்சத்திரங்கள் ஆடிஷனில் கலந்துகிட்டாங்க. பார்த்த எல்லாக் குழந்தைகளும் கதையிலிருந்து அந்நியப்பட்டு இருக்குற மாதிரி தோணுச்சு. அப்புறம் மதுரை, தென்காசி, குற்றாலத்தில் ஆடிஷனைத் தொடங்கினோம்.

கே.டி (எ) கருப்புதுரை

ரொம்ப குட்டிப் பையனா, ட்ரவுஸர் போட்டுக்கிட்டு அமைதியா ஆடிஷனுக்கு வந்து நின்ன நாகவிஷாலைப் பார்த்ததும் படத்தில் நான் உருவாக்கி வெச்சிருந்த `குட்டி' கேரக்டர் என் கண் முன்னாடி வந்துபோச்சு. உடல்மொழி, தோற்றம், கண்ணில் ஒரு குறும்புத்தனம்னு நான் நினைச்ச எல்லாமே நாகவிஷால்கிட்ட இருந்துச்சு. ஆடிஷனில் நாகவிஷால் செலக்ட் ஆயிட்டான். கருப்பு துரையாக நடிச்ச பேராசிரியர் மு.ராமசாமி சாருக்கும் நாகவிஷாலுக்கும் படத்தில் கெமிஸ்ட்ரி ஒத்துப்போக நாகவிஷாலுக்கு ஒரு மாசம் பயிற்சிகள் கொடுத்தோம்.

ரொம்ப ஷார்ப்பான பையன். கொஞ்சம் விளையாட்டுத்தனம் அதிகம். கேமரா ஆஃப்ல இருக்கும்போது பயங்கரமா, பர்ஃபாமன்ஸ் பண்ணுவான். ஆனா, கேமரா ஆன் பண்ணா கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும். ஃபன் சீன் எல்லாம் ரொம்ப ஈஸியா பண்ணிருவான். அது அவனோட இயல்பு. சீரியஸ் சீனுக்குதான் மொத்த டீமும் நிறைய மெனக்கெடுவோம்.

கே.டி (எ) கருப்புதுரை

அப்போ அவனுக்கு 8 வயசுதான். நாம சொல்றத உள்வாங்கி உடனே எல்லாம் ரியாக்ட் பண்ண முடியாது. பொறுமையா ஒவ்வொரு சீனும் சொல்லிக்கொடுக்கணும். இந்தப் படத்தை நாங்க லைவ் சவுண்டு ரெக்கார்டிங்கில்தான் பண்ணோம். லைட்டிங் நல்லா இருக்கும், நடிகர்களும் நல்லா நடிச்சுருப்பாங்க. சவுண்டு ரெக்கார்ட் ஆகியிருக்காது. இல்லைனா போன் சத்தம், வேறு ஏதாவது சத்தம் கேட்டுரும். அதனால் இன்னொரு டேக் போக வேண்டியிருக்கும். ஆனால், முதல் முறை கொடுத்த அதே எக்ஸ்பிரஷன்களை அடுத்த முறையும் குழந்தைகள்கிட்ட வாங்குறது கொஞ்சம் கஷ்டம். அது குழந்தைகளுக்கே உரிய இயல்பு. பெரியவங்க மாதிரி குழந்தைகளை வற்புறுத்தியோ கட்டாயப்படுத்தியோ நடிக்க வைக்க முடியாது. அப்படி நடிக்க வெச்சாலும், நூறு சதவிகிதம் பர்ஃபெக்ட்டா வராது. குழந்தைகளை வச்சுப் படம் எடுக்க பொறுமை ரொம்ப முக்கியம்" என்றவர் தனக்கும் நாகவிஷாலுக்கும் உள்ள பிணைப்பு பற்றிப் பேச ஆரம்பித்தார்.

``நாகவிஷாலுக்கு எல்லாமே அவங்க அம்மாதான். கஷ்டப்பட்டு நாலு குழந்தைகளைப் படிக்க வைக்குறாங்க. அவன் செலக்ட் ஆனதும், `அவன் வாழ்க்கையை உங்ககிட்ட கொடுக்கிறேன் மேடம். நீங்கதான் பார்த்துக்கணும்'னு அவங்க அம்மா என்கிட்ட சொன்னாங்க. யதார்த்தமான செயல்களால் ஒட்டு மொத்த டீமையும் சில நேரம் வியக்க வெச்சிருக்கான் நாக விஷால். ரொம்ப பொறுப்பான பையன். வளர்ந்து அம்மாவை ரொம்ப சந்தோஷமா பார்த்துக்கணும்னு என்பதுதான் அவனோட ஆசை. ஷூட்டிங் ஸ்பாட்ல நான் பெருசா யார்கிட்டயும் கோபப்பட மாட்டேன். நாகவிஷால் குழந்தை என்பதால் கூடுதல் ஸ்பெஷல். அவனுக்கும் எனக்குமான உறவு கிட்டத்தட்ட குரு சிஷ்யன் மாதிரிதான்.

கே.டி (எ) கருப்புதுரை

செட்ல யார் திட்டினாலும் பேசாம இருப்பான். நான் கொஞ்சம் குரல் உயர்த்திச் சொல்லிட்டா போதும், சார் ரொம்ப சீரியஸாக மாறிருவாரு. படத்தில், கருப்பு துரை குட்டிகிட்ட, `நீ பள்ளிக்கூடத்துக்கு போ'னு சீரியஸாக பேசும் சீன் வெச்சிருந்தோம். ஆனால், அந்த சீனிலும் நாகவிஷால் விளையாட்டுத்தனமா இருந்தான். நிறைய டேக்குகள் வாங்குனான். உதவி இயக்குநர் உட்பட எல்லாரையும் வெளியே அனுப்பிட்டு அந்த சீனை நான் அவனுக்குப் புரிய வெச்சேன். அடுத்த டேக்கில் அவன் கேமராவைப் பார்த்து பேசின பேச்சில் நானே கண்கலங்கிட்டேன்.

அதே மாதிரிதான், கருப்புதுரையும், குட்டியும் சோளம் சாப்பிடும் ஒரு சீன் வெச்சிருந்தோம். நாகவிஷால் அதில் 18 டேக் எடுத்தான். செட்ல இருந்த எல்லாரும் அவன்கிட்ட கோபப்பட்டாங்க. 18 டேக் வரை அமைதியா இருந்த நான், 19-வது டேக் போனபோது, இதை நீ சரியா பண்ணலைனா, எந்த எடிட்டும் பண்ணாம அப்படியே படத்தில் வெச்சுருவேன்னு கொஞ்சம் கோபமா பேசிட்டேன். மேஜிக் நடந்த மாதிரி அடுத்த ஒரே டேக்கில் அந்த சீன் ஓ.கே ஆகிருச்சு.

Also Read: இன்று 'அசுரன்' தேசிய விருது... நாளை 'The Gray Man' ஷூட்டிங் ஆரம்பம்... செம சந்தோஷத்தில் தனுஷ்!

நிறைய கஷ்டப்பட்டு நடிச்சான். எட்டு வயசுக்கு அவன் நடிச்ச எல்லாமே அற்புதமான விஷயம். பொதுவா எட்டு வயசு பசங்க வயசுக்கு மீறிப் பேசும்போது, அது எரிச்சல் உணர்வைத் தரும். அப்படி இல்லாம இயல்பாக அந்த கேரக்டரை மக்கள் கொண்டாடுறது போல ஒவ்வொரு சீனையும் பார்த்துப் பார்த்து வடிவமைச்சோம். முதல் முறை படத்தை லண்டன்ல நடந்த திரைப்பட விழாவில்தான் திரையிட்டோம். 11 திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினோம். அதில ஆறு விழாக்கள்ல படத்துக்கு விருது கிடைச்சது. மும்பையில் நடந்த ஜாக்ரான் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான பிரிவில் ரன்வீர் சிங், ஆயூஷ்மான் குரானா, விக்கி கெளஷல் இவர்களுடன் எட்டு வயசு சிறுவன் நாகவிஷாலும் தேர்வாகியிருந்தான். அதில் பெஸ்ட் ஆக்டர் விருதும் வாங்கி எல்லாரையும் ஆச்சர்யப்படுத்தினான்.

இப்போ தேசிய விருது. ரொம்ப பெருமையா இருக்கு. அவனுடைய கடின உழைப்பு அவனை இன்னும் இன்னும் உயரத்துக்கு கூட்டிட்டுப் போகும்" என்று விடைபெறுகிறார் மதுமிதா.



source https://cinema.vikatan.com/tamil-cinema/kd-karuppudurai-movie-director-madhumita-speaks-about-nagavishal-and-national-award

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக