உலகின் மிக முக்கிய கடல் வர்த்தகப் பாதையான சூயஸ் கால்வாயில், எவர்கிவன் (Ever Given) என்ற வணிகக் கப்பல் சிக்குண்டது. கால்வாயின் இரண்டு பக்க கரைகளின் சுவர்களிலும் மோதியபடி, பக்கவாட்டில் சிக்கிக் கொண்ட இந்த கப்பலால், அந்த பாதையில் ஒட்டுமொத்த கப்பல் போக்குவரத்தும் தடைபட்டிருக்கிறது.
சீனாவிலிருந்து நூற்றுக்கணக்கான கன்டெய்னர்களுடன் புறப்பட்ட எவர்கிவன் கப்பல், மலேசியா வழியாக பயணித்து மார்ச் 22, திங்கட்கிழமை இரவு எகிப்திலுள்ள சூயஸ்கால்வாயை வந்தடைந்தது. மார்ச் 23, செவ்வாய் அதிகாலை 7:40 மணியளவில் அங்கிருந்து கிளம்யிய எவர்கிவன், கால்வாய் வழியாக நெதர்லாந்தின் ரோட்டர்டாமுக்கு(Rotterdam) சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென்று வீசிய பலத்த காற்றால் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து, முன்பக்கம் (Bow) கால்வாயின் வடக்குபக்க சுவற்றின் மீது மோதியது. அடுத்தகணமே கப்பலின் பின்பக்கம் மேற்கு திசையில் இழுத்து தள்ளப்பட்டு மற்றொருபக்க சுவரில் மோதி நின்றது.
இந்த நிகழ்வை, மற்றொரு கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்த ஜூலியன் கோனா (Julianne cona) என்ற பெண் ஒருவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவேற்றி "ship is super stuck” என பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த சம்பவம் குறித்து சூயஸ் நிர்வாகம் தெரிவித்திருப்பதாவது, “கப்பலை மீட்டெடுத்து நிலைமையை சரிசெய்ய தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். கப்பல் மோதியிருக்கும் கால்வாயின் இரண்டு பகுதிகளிலும் தோண்டி மணலை அப்புறப்படுத்தி மீட்டெடுக்க திட்டமிட்டிருக்கிறோம். இரண்டு நாட்களில் நிலைமை சீராகும்!” என கெய்ரோ24 (Cairo24) என்ற லோக்கல் சேனலுக்கு பதிலளித்திருக்கிறார்.
சுமார் 400மீட்டர் (1313 அடி) நீளமும், 59 மீ அகலமும் உடைய இந்தக்கப்பல் தைவானைச் சேர்ந்த எவர்கீரின் என்ற கடல்சார் (Evergreen Marine corp) நிறுவனத்திற்குச் சொந்தமானது. 2018-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ராட்சத கப்பல் அல்ட்ரா லார்ஜ் கண்டெய்னர் ஷிப் (Ultra large container ship-ULCS) வகையைச் சேர்ந்தது.
இந்த கப்பல் ஏற்படுத்திய விபத்தினால், ஆசியாவின் மத்திய தரைக்கடல் பகுதியையும், ஐரோப்பாவின் செங்கடல் பகுதியையும் இணைக்கும் சூயஸ் கால்வாயின் நீர் வழித்தடம் முற்றிலுமாக முடக்கப்பட்டு, ஏராளமான சரக்கு கப்பல்கள் கால்வாயின் தென்பகுதியில் குவிந்துவருகின்றன. வணிகக் கப்பல்களின் இந்த அணிவகுப்பால் அந்தக் கடல் பகுதியில் "மெரைன் டிராஃபிக் ஜாம்" ஏற்பட்டுள்ளது. இதனை vesselFinder.com என்ற இணையதளம் செயற்கைகோள் படமாக வெளியிட்டிருக்கிறது.
1869-ம் ஆண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த சூயஸ் கால்வாய், 193 கி.மீ. நீளமும், 24மீ ஆழமும், 205 மீ அகலத்தையும் கொண்டது. எகிப்தின் வருவாயில் மிகப்பெரிய பங்களிப்பை செய்துவரும் இந்த கால்வாயிலிருந்து, வருவாயை பெருக்கும் நோக்கில், எகிப்து அரசு 2015-ம் ஆண்டு பெரிய கப்பல்கள் பயணிக்கும் வகையில் விரிவாக்கம் செய்தது.
ஆசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு பெட்ரோலிய பொருட்கள், இயற்கை எரிவாயு போன்ற வணிகப் பொருட்களை கொண்டு செல்ல ஆப்ரிக்காவை சுற்றி நெடும்பயணமாக சென்றுகொன்டிருந்த நிலையை மாற்றி செலவையும், பயணநேரத்தையும், தூரத்தையும் குறைக்கும் வகையில் செயற்கையாக வெட்டப்பட்ட இந்த சூயஸ் கால்வாயில் ஆண்டுக்கு 19,000-க்கும் மேற்பட்ட கப்பல்களில், 1.17 பில்லியன் டன் கணக்கிலான வர்த்தகம் நடைபெறுவதாகவும் 2020-ம் ஆண்டில் சூயஸ் கால்வாய் நிர்வாகம் (Suez Canal Authority) தெரிவித்திருந்தது.
உலக வர்த்தகத்தில் 10% கடல் நீர்வழித்தடங்கள் மூலமே நடக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/news/world/container-ship-evergiven-stuck-in-suez-canal
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக