கொரோனாவின் புது அலை வீசுவதாக உலகம் அலறுகிறது. அந்தத் தாக்கத்தை அச்சமின்றி ஆறுதல்படுத்துகிறது ஒரு நாடு!
இத்தனைக்கும் அந்த நாட்டிலும் கொரோனா பாதிப்பு இல்லாமலில்லை. இதுவரை, 66,758 பேர் பாதிக்கப்பட்டு அதில் 62,860 பேர் பூரண குணம் பெற்றுள்ளனர். 394 பேர் மட்டுமே மரணமடைந்துள்ளனர்.
தங்கள் நாட்டில் கொரோனா தாக்கம் இருந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல், உலகம் முழுவதும் தங்கள் நாட்டு மருத்துவர்களை அனுப்பி அரிய சேவை செய்து சர்வதேச நாடுகளை நெகிழச் செய்திருக்கிறது. அந்த அளவிற்குச் சிறப்பான மருத்துவம், மிகச்சிறந்த சேவை; எண்ணிலடங்கா மருத்துவர்கள்.
அந்த நாடுதான் கியூபா!
கியூபாவில் பத்தாயிரம் பேருக்கு 67 மருத்துவர்கள் உள்ளனர். ஒப்பீட்டளவில் ரஷ்யாவில் பத்தாயிரம் பேருக்கு 44 பேர், அமெரிக்காவில் 26.04, இந்தியாவில் 9.28 பேர் என்ற புள்ளிவிவரங்களைப் பார்த்தால் கியூபாவின் மருத்துவ வல்லமையைப் புரிந்து கொள்ள முடியும். அதற்குக் காரணம் மருத்துவப் படிப்புகளுக்கு அந்நாடு அதிகப்படியான முக்கியத்துவம் தருவதே!
மருத்துவத்தை வணிக நோக்கமாகக் கொள்ளாமல் சேவையாகக் கருதிச் செயல்பட்டால், மருந்துச் சந்தையைப் பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்காமல் நடைமுறைப்படுத்தினால், மக்களுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும் என்பதற்கு கியூபாவே உதாரணம்.
புற்றுநோய் போன்ற ஆட்கொல்லி நோய், எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களுக்கு இலவச மருத்துவமளித்து குணப்படுத்துவதில் உலகிலேயே முன்னணியில் நிற்கும் நாடு இதுதான்.
உயிரித் தொழில்நுட்பத்தில் இந்தியா உள்பட 50 நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து அந்தத் துறையில் கொடிகட்டிப் பறக்கிறது கியூபா.
குறுகிய காலத்தில் பசுமைப்புரட்சியில் வென்று காட்டி உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற கியூபா வேளாண்மைத் துறையிலும் கால்நடை வளர்ப்பிலும் கூட குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது.
இந்த நாட்டின் முதன்மை வணிகப் பயிராகக் கரும்பு பயிரிடப்படுகிறது. அபரிமிதமான சர்க்கரை ஏற்றுமதி கியூபாவை 'உலகின் சர்க்கரை கிண்ணம்' எனப் புகழ் பெற வைத்துள்ளது. புகையிலை உற்பத்தியும் வியக்க வைக்கிறது. இத்தகைய பசுமைப் புரட்சி, மருத்துவ சாதனைக்குக் காரணம் மக்களின் அறிவு வளர்ச்சி, அயராத உழைப்பு.
இந்த அறிவு வளர்ச்சிக்குக் காரணம் அபாரமான கல்வி அறிவு. கியூபாவில் கல்வி அறிவு எத்தனை சதவிகிதம் (Literacy Rate) தெரியுமா?! ஆச்சர்யப்படாதீர்கள்! 99.75 சதவிகிதம்; கல்வி அங்கு முற்றிலும் இலவசம்.
இலவச கல்வி, பசுமைப் புரட்சி இவையெல்லாம் கியூபாவில் எப்படிச் சாத்தியமாயிற்று?
இது சாதாரணமாகக் கேட்கப்பட வேண்டிய கேள்வியல்ல... அறியப்பட வேண்டிய விடயங்கள்!
அமெரிக்காவில் இறங்கிய இத்தாலிய ஆய்வாளரான கிறிஸ்டோபர் கொலம்பஸ், ஸ்பெயின் மன்னனுடன் ஒப்பந்தம் செய்து புதிய கடல் வழிகளை ஆய்வு செய்தார். அக்டோபர் 12, 1492ல் குனாஹனி என்ற தீவில் முதன்முதலில் கால் பதித்த அவர், கரீபியன் கடலில் பல தீவுகளைக் கண்டார். அதன்பின் 1511-களில் கியூபாவில் ஸ்பானிய குடியேற்றங்கள் நிகழ்ந்தன.
1529ல் கியூபாவைத் தாக்கிய கொடிய அம்மை நோய் அங்கு வாழ்ந்த பூர்விக குடிமக்களில் மூன்றில் இரு பங்கு பேரை உயிரிழக்கச் செய்தது.
Also Read: கம்போடியா: சூர்யவர்மன் கட்டிய அங்கோர்வாட் கோயிலும், சோழ மன்னர்களும்! நாடுகளின் கதை - 3
ஸ்பெயின் அமெரிக்கச் சண்டை முடிந்து 1898-ல் பாரிஸ் உடன்படிக்கை ஏற்பட்டதும் ஸ்பெயினின் ஆதிக்கத்திலிருந்து கியூபா விடுவிக்கப்பட்டது. மே 20, 1902 அன்று சுதந்திரம் வழங்கிய அமெரிக்கா, பிறநாடுகளுடன் கியூபா எத்தகைய ஒப்பந்தமும் செய்து கொள்ளக் கூடாது என நிபந்தனை விதித்துத் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தது.
மெக்சிகோ வளைகுடா கரீபியன் கடலில் கலக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் கியூபா அமைந்திருக்கிறது. அமெரிக்காவின் மியாமி கடற்கரையிலிருந்து வெறும் 130 கி.மீட்டர் தொலைவுதான். அமெரிக்கா அதனைச் சும்மா விடுமா? நிக்கல், இரும்பு, செம்பு, மாங்கனீஷ் மட்டுமின்றி எண்ணெய், இயற்கை எரிவாயு என நிறைந்திருக்கும் வளங்கள் அதன் கண்களை உறுத்தாதா?!
கியூபா, கரீபியன் கடலில் 5746 கிலோ மீட்டர் எல்லையையும், 430 கடற்கரைகளையும் கொண்டது. அதில் வராடெரோ (Varadero Beach) உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அழகிய கடற்கரைகள் என இயற்கையின் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். சுற்றுலாப்பயணிகளை இவை பெரிதும் கவர்ந்ததால் அமெரிக்கா அதனை மூலதனமாக்கியது. விளைவு, அமெரிக்கர்களுக்குச் சொந்தமான விடுதிகள், உணவகங்கள், வர்த்தக நிறுவனங்கள் ஏராளமாக முளைக்கத் தொடங்கின. மொத்தத்தில் அமெரிக்க ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது.
அமெரிக்காவின் ஆசிபெற்ற குடியரசாகக் கியூபா இருந்த போதுதான் 1952-ல் நாட்டின் குழப்பமான சூழலைப் பயன்படுத்தி ராணுவப் புரட்சியின் மூலம் பல்கேன்சியோ பாடிஸ்டா (Fulgencio Batista) ஆட்சியைக் கைப்பற்றி சர்வாதிகாரியானார்.
ஆனால், இவரது ஆட்சியில் நாட்டில் எந்த முன்னேற்றமும் இல்லை. சீர்கேடுகள் மலிந்த நாடாகக் கியூபா மாறியது. சூதாட்டம், போதை மருந்து கடத்தல் என குற்றச் செயல்கள் வரம்பு மீறிப் போயின. மக்கள் கடுமையான துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டனர். ஒரு நல்லாட்சி மலராதா என ஏங்கித் தவித்தனர்.
வரலாற்றை மாற்றிய புரட்சியாளர்கள்
அப்படி மக்கள் ஏங்கித் தவித்த ஒரு காலகட்டத்தில் தான் ஒரு மாபெரும் புரட்சி கியூபாவின் வரலாற்றையே தலைகீழாக மாற்றியது.
இந்த புரட்சியை அறியும் முன் அதன் கதாநாயகர்களை தெரிந்து கொள்ள வேண்டாமா?!
ஒருவர், 'பிடல் காஸ்ட்ரோ' (Fidel Castro)
ஸ்பெயினிலிருந்து குடியேறியவர்கள் வம்சாவளியில் 1926 ஆகஸ்ட் 13-ல் பிறந்தவர் பிடல் காஸ்ட்ரோ. 2016 நவம்பர் 25 அன்று மரணமடைந்தார். 90 வயது வரை வாழ்ந்த பிடல் காஸ்ட்ரோ தான் நவீன கியூபாவின் சூத்திரதாரி.
மற்றவர், 'சே குவேரா' (Che Guevara)
அர்ஜென்டினாவில் 1928 ஜூன் 14 அன்று பிறந்த அவர் 1967 அக்டோபர் 9 அன்று தமது 39 வயதில் பொலிவியா நாட்டில் அமெரிக்கப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
எர்னஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Rafael Guevara de la Serna) என்பதன் சுருக்கம் தான் ’சே குவேரா’. வசதியான குடும்பத்தில் பிறந்த சே மருத்துவம் பயின்றவர். ஆனால், கடுமையான ஆஸ்துமா நோயாளி!
தன்னுடைய நோயை விட அவருக்குப் பெரிதாகத் தெரிந்தது அமெரிக்காவின் எதேச்சாதிகார சுரண்டல், மக்களின் ஏழ்மை, வறுமை, துயரங்களை மட்டுமே சுமந்து நிற்கும் நோயாளிகள்தான்.
இவற்றை முடிவுக்குக் கொண்டுவர ஆயுதம் ஏந்த முடிவெடுத்தார். ஃபிடல் காஸ்ட்ரோவின் நாட்டில் அளவு கடந்த நம்பிக்கை கொண்டார். இருபெரும் போராளிகளும் இணைந்து செயல்பட்டனர்.
அதன் விளைவுதான், அமெரிக்கப் பொம்மை அரசின் சர்வாதிகாரியான பல்கேன்சியோ பாடிஸ்டா ஆட்சியைத் தூக்கி எறிந்து நாட்டை விட்டே ஓடச் செய்தது.
கியூபா மக்கள் எல்லை மீறிய மகிழ்ச்சிக்கு ஆளாயினர். ஃபிடல் காஸ்ட்ரோவை கொண்டாடி மகிழ்ந்தனர். காஸ்ட்ரோ அரசில் சே குவேராவுக்கு உயர்பதவியும் அந்நாடு கரன்ஸியில் கையெழுத்திடும் கௌரவமும் அளிக்கப்பட்டது. 1959 முதல் 61 வரை கியூபா மத்திய வங்கி தலைவராகவும் நிதி மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் இருந்தார்.
தொழில்துறையைத் தேசிய மயமாக்க முழு கவனம் செலுத்தினர்.
இந்தப் பதவியைத் துறந்து, பிற நாடுகளின் விடுதலைக்காகவும் போராடக் கிளம்பினார் அவர். காங்கோ, பொலிவியா எனப் பயணித்து ஆயுதக்குழுக்களுடன் இணைந்து செயல்பட்டதால் தான் அவர் 39 வயதிலேயே உயிரிழக்க நேர்ந்தது.
அமெரிக்காவுக்கு எதிராகக் கியூபாவின் புரட்சி என்பது ஒரு சர்வாதிகாரிக்கு எதிரானதல்ல. ஒரு வல்லரசுக்கு எதிரானது.
பாடிஸ்டாவின் ஆட்சிக்கு எதிராக அமைக்கப்பட்ட ஆயுதம் தாங்கிய போராளிப்படையின் தளபதியாக உருவான ஃபிடல் காஸ்ட்ரோ. கியூபா முழுவதும் பயணம் மேற்கொண்டு இளைஞர்களைத் திரட்டினார்.
ஜூலை 26, 1953 அன்று மான்கடா படைத்தளம் மீது நடத்திய தாக்குதல் திட்டம் தோல்வியில் முடிந்தது. ஃபிடல் காஸ்ட்ரோ உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நீதிமன்ற விசாரணையை தன் புரட்சிக்கு அச்சாரமாகப் பயன்படுத்தினார் காஸ்ட்ரோ, "நீங்கள் என்னைத் தண்டியுங்கள்; வரலாறு என்னை விடுதலை செய்யும்” (Condemn me. It does not matter. History will absolve me) என முழங்கினார். நீதிமன்ற நடவடிக்கைகளைக் காண வந்த வெளிநாடுகளின் பத்திரிகையாளர்கள் இதை உலக செய்தியாக்கினர்.
இந்த வழக்கில் 15 வருடச் சிறைத் தண்டனை பெற்ற ஃபிடல் காஸ்ட்ரோ 19 மாதங்களில் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
சிறையில் இருந்த போதுதான் மார்க்சிய சித்தாந்தங்களில் மூழ்கினார். மனைவியை விவகாரத்து செய்துவிட்டு தனது புரட்சியைத் தீவிரப்படுத்தத் திட்டமிட்டார்.
புரட்சியாளர்களை ஒழிப்பதில் கியூபாவின் சர்வாதிகார அரசு கடுமையாக இருந்ததால் கைதாவதிலிருந்து தவிர்க்க மெக்ஸிகோ தப்பிச் சென்றார். அங்குதான் சே குவேராவை சந்தித்தார்.
1956 நவம்பரில் கியூபா திரும்பிய ஃபிடல் காஸ்ட்ரோ கொரில்லா முறையில் தாக்குதல்களை நடத்தினார். 1959 ஜனவரி 2 அன்று தலைநகர் ஹவானாவில் புரட்சிப்படை நுழைந்தது. சர்வாதிகாரி பாடிஸ்டா பதவி துறந்து ஓடினார்.
கியூபாவின் அதிபராகப் பிப்ரவரி 16, 1969 அன்று ஃபிடல் காஸ்ட்ரோ பதவியேற்றதும் அமெரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளும் அதிர்ச்சியடைந்தன. 1960ம் ஆண்டு முதல் கியூபாவில் அமெரிக்கா நடத்தி வந்த வர்த்தகங்கள் அனைத்தையும் தேசிய மயமாக்கப்படுவதாக ஃபிடல் காஸ்ட்ரோ அறிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, கியூபாவிலிருந்து வெளியேறியோரை வைத்து தனிப்படை உருவாக்கி ஃபிடல் காஸ்ட்ரோ ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்தது.
அதனால், எண்ணற்றோரைக் கொன்றும், கைது செய்தும் இந்த முயற்சியை முறியடித்தது காஸ்ட்ரோ அரசு. ஆனால், அவரை கொலை செய்ய அமெரிக்க உளவுத்துறை பலமுறை முயற்சி செய்தது.
அமெரிக்காவுக்குப் பாடம் கற்றுக் கொடுக்க விரும்பிய கியூபா, ரஷ்ய அணுசக்தி ஏவுகணைகளைத் தனது நாட்டில் நிறுவ முடிவெடுத்தது. இது, அமெரிக்கா, ரஷ்யா இடையே போராக வெடிக்கும் என்ற அச்சமேற்பட்டது.
இதனால் கியூபாவுடனான உறவுகளை அமெரிக்கா துண்டிப்பதாக ஜான் எஃப் கென்னடி (John F. Kennedy) அரசு அறிவித்தது. பின்னர், கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது.
ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஃபிடல் காஸ்ட்ரோ நியூயார்க் சென்றபோது அவர் தங்கியிருந்த விடுதியில் பல தொல்லைகளைக் கொடுத்தது அமெரிக்கா. அதை விட்டு அவர் வெளியேற முயன்ற போது, எந்த விடுதிகளிலும் அவருக்குத் தங்க அனுமதி மறுக்கப்பட்டன. அச்சமயம், கறுப்பின மக்களுக்காகப் போராடிய மால்கம் எக்ஸ் (Malcom X) உள்ளிட்ட சிலரின் உதவியுடன் கறுப்பின மக்கள் அதிகம் வசித்த இடத்தில் உள்ள விடுதியில் தங்கினார். அமெரிக்காவிற்குப் பயந்து அவரை எந்தத் தலைவர்களும் சந்திக்கவில்லை.
Also Read: ஸ்பை த்ரில்லர்தான்... ஆனால் ஆக்ஷன் இல்லை, ரியாக்ஷன் மட்டுமே! #TheCourier படம் எப்படி?
அவரைச் சந்தித்த ஒரே ஒரு தலைவர் நமது நாட்டின் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு (Jawaharlal Nehru) தான். அந்தச் சந்திப்பைப் பற்றி நீண்ட நெடுங்காலமாகப் பெருமையுடன் பேசிவந்தார் ஃபிடல் காஸ்ட்ரோ.
மார்க்ஸீய சித்தாந்தத்தில் கம்யூனிஸ ஆட்சி நடத்திய ஃபிடல் காஸ்ட்ரோ பிப்ரவரி 24, 2008-ல் பதவி விலகினார். அவரது அரை நூற்றாண்டு கால ஆட்சி முழுவதும் அமெரிக்காவுக்குச் சிம்ம சொப்பனமாகவே திகழ்ந்தது.
ஃபிடல் காஸ்ட்ரோ பதவி விலகலுக்குப் பின் அவர் தம்பி ரவுல் காஸ்ட்ரோ ஆட்சிப் பொறுப்பேற்றார். அப்போது அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா (Barack Obama) பதவியிலிருந்தார்.
அமெரிக்கா - கியூபா தூதரக உறவு மீண்டும் தொடங்கப்பட்டது. தீவிரவாத நாடு பட்டியலிலிருந்து கியூபாவை ஒபாமா அரசு நீக்கியது...
ஜூலை 20, 2015 அன்று இரு நாடுகளிடையே நல்லுறவு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒபாமா கியூபா பயணம் கொண்டார்.
54 ஆண்டுக் கால பொருளாதாரத் தடை விலகிவிட்டது எனக் கியூபா மக்கள் மகிழ்ச்சியடைய அதை நீடிக்கவிடாமல் செய்தார் அமெரிக்காவின் அப்போதைய புதிய அதிபர் ட்ரம்ப். ஜனவரி 20, 2017 அன்று மீண்டும் பொருளாதார தடைவிதித்து கியூபாவைத் தீவிரவாத நாடாக அறிவித்தார்.
இப்போது, ட்ரம்ப் வீழ்ந்து ஜோ பைடன் ஆட்சி. கியூபாவிலும் பிப்ரவரி, 2019-ல் புதிய அரசியல் சட்டம். புதிய அதிபர் மிக்கேல் டயஸ் கேனல் (Miguel Díaz-Canel), புதிய பிரதமர் மானுவல் மரேரோ (Manuel Marrero Cruz).
இருநாடுகளிடையே புதிய அத்தியாயம் மலரும் என மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
அப்படி மலரவில்லை எனில் அம்மக்கள் அழக்கூட முடியாது. ஏனெனில் அழுதால் மூக்குச் சிந்தவேண்டி வரும். மூக்குச் சிந்துவது அந்நாட்டில் மிகப்பெரிய குற்றமாக பார்க்கப்படுகிறது.
எனவே நல்லது நடக்கட்டும்; நாமும் நம்புவோம்!
(பயணிப்போம்)
source https://www.vikatan.com/social-affairs/international/tales-of-countries-4-comrade-cubas-story
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக