Ad

ஞாயிறு, 14 மார்ச், 2021

சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனம் - புதிதாக 4 வாக்குறுதிகளைச் சேர்த்த திமுக

சட்டமன்றத் தேர்தலுக்கான தி.மு.க-வின் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை நேற்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். நீட் தேர்வு ரத்து, பால் விலை குறைப்பு, தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு, கல்வி மற்றும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி என பெரிய பட்டியல் அதில் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் இன்று மேலும் புதிய வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

M.K. Stalin

புதிய வாக்குறுதிகள்

1. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் எண்ணூர் அருகே அமைய திட்டமிடப்பட்டுள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு அனுமதி மறுக்கப்படும்.

2. சென்னை - சேலம் 8 வழிச் சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாது.

3. EIA எனப்படும் மத்திய சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு 2020 நிராகரிக்கப்படும்.

திருத்தம் செய்யப்பட்ட வாக்குறுதி:

4. முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம். குடியுரிமைச் சட்டம் 2019-ஐ திரும்பப் பெற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

முன்னதாக மேற்கண்ட வாக்குறுதிகள், தி.மு.க நேற்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம் பெறவில்லை. சென்னை சேலம் 8 வழிச் சாலைத் திட்டம், சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு 2020, காட்டுப்பள்ளி துறைமுகம் போன்ற சட்ட திட்டங்களை எதிர்த்து குரல் கொடுத்து வந்த தி.மு.க, அவற்றை தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியத்துவம் கொடுக்காதது ஏன் என்ற விமர்சனம் சமூக வலைதளங்களில் எழுந்தது.

இந்த நிலையில் தான், இந்த புதிய வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான வாக்குறுதிக் குறிப்பில் எழுத்துப் பிழை இருந்ததாகவும், அதை திருத்தி வெளியிட்டிருப்பதாகவும் தி.மு.க தெரிவித்திருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-adds-new-poll-promise-in-manifesto-after-criticism-raised

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக