Ad

சனி, 13 மார்ச், 2021

இனி நர்சிங் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம்... பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கண்டனம்!

தேசியத் தேர்வு முகமை (National Testing Agency - NTA) 2021-2022 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு - நீட் (NEET) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட அனைத்து மருத்துவ இளங்கலைப் பட்ட மாணவர் சேர்க்கைக்கான தேர்வு என்பதுடன் இளங்கலை செவிலியர் (B.Sc. Nursing), இளங்கலை உயிரி அறிவியல் (Life Science) ஆகியவற்றிற்கும் இந்தத் தேர்வு எடுத்துக் கொள்ளப்படலாம் என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது. உயிரி அறிவியல் என்பது விலங்கியல், தாவரவியல் உள்ளிட்ட பல்வேறு பட்டப் படிப்புகளுக்கான பிரிவுகளை உள்ளடக்கியது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் தேர்வின் அடிப்படையிலேயே கடந்த ஐந்து ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது.

செவிலியர்
இந்தப் பின்னணியில், 2021-2022 கல்வியாண்டு முதல் இளங்கலை செவிலியர், இளங்கலை உயிரி அறிவியல் உள்ளிட்டப் படிப்புகளுக்கும் நீட் தேர்வின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்ற தேசியத் தேர்வு முகமையின் அறிவிப்பு கடும் விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது.

இது குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கை:

“தேசியக் கல்விக் கொள்கை 2020, பள்ளிகளை வேலைவாய்ப்புத் திறன் அளிக்கும் மையங்களாகச் சுருக்கி, தேசியத் தகுதி காண் தேர்வு தான் அனைத்துப் பட்டப் படிப்பிற்கும் தகுதியாக கொள்ளப்படும் என்று கூறியுள்ளது. மக்கள் பிரதிநிதிகளை கொண்ட நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் இந்தக் கல்விக் கொள்கையின் தாக்கங்கள் குறித்து முழுவதுமாக விவாதிக்கப்படவில்லை. இது குறித்து தங்களுடைய நிலைப்பாடு என்ன என்பதையும் தமிழ்நாடு அரசு இதுவரைத் தெளிவுபடுத்தவில்லை.

எந்த வல்லுநர் குழுவும் நீட் தேர்வைப் பரிந்துரைக்கவில்லை. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்திற்கும், பிரிவுகளுக்கும் எதிரானது நீட். ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைப் பறித்தது போதாதென்று, தற்போது கல்லூரிக் கனவையே பறிக்க முற்பட்டிருக்கிறார்கள். இனி கல்லூரியில் கால் வைக்கவே பல லட்சம் செலவு செய்ய வேண்டும் என்ற நிலையை இந்த அறிவிப்பு ஒவ்வொரு மாணவருக்கும் ஏற்படுத்துகிறது.

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை எதிர்கொள்ள தேவைப்படும் பயிற்சிக்கான ஆசிரியர்களே மாநில அரசிடம் இல்லை என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கூறியுள்ள நிலையில், செவிலியர் படிப்பு தொடங்கி இனி எல்லா பட்டப் படிப்புகளுக்கும் நீட் என்பது சமூகநீதிக்கும், சமகற்றல் வாய்ப்பிற்கும் எதிரானது.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி மாணவர்கள் உட்பட விளிம்புநிலை மக்கள், குறிப்பாகப் பெண்கள், +2 முடித்தால் கல்லூரி செல்லலாம் என்று இருக்கும் வாய்ப்பை தட்டிப் பறிக்கவே இந்த நீட்," என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும், “சமூகத்திலும் கல்வியிலும் பின் தள்ளப்பட்ட சமூகப் பிரிவில் பிறந்தவர்கள் உயர்கல்வி பெற பல நூற்றாண்டுகளாக நடத்தப்பட்ட போராட்டமும், அதில் சிந்தப்பட்ட ரத்தமும் பெற்றுத் தந்த உயர்கல்வி உரிமையைத் தட்டிப் பறிக்கவே, நர்சிங் மற்றும் உயிரி அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு நீட்தான் தகுதி என்ற அறிவிப்பு.

இத்தகைய மக்கள் விரோதக் கொள்கையைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிக்க வேண்டும். இறுதி இறையாண்மை பெற்ற இந்திய மக்கள், தேர்தலில் தங்களின் வாக்கு மூலமாக தேர்ந்தெடுக்கும் அரசிற்கு இறையாண்மை தருகிறார்கள். மக்களாட்சியின் இந்த மகத்துவத்தை உணர்ந்து நீட் நிராகரிப்பிற்கு தங்களின் வாக்குகளை மக்கள் பயன்படுத்த வேண்டும்.

தேசியத் தேர்வு முகமை, 2021-2022 கல்வியாண்டிற்கான நீட் அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டும். 2021-2022 கல்வியாண்டிற்கான அனைத்து பட்டப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை மேல்நிலைப் பள்ளி மதிப்பீட்டின் அடிப்படையில்தான் நிகழ்த்த வேண்டும்.

தமிழ்நாடு மாணவர்களின் கல்வி நலனைக் காத்திட, சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, அமையப் போகும் அடுத்த சட்டப்பேரவை தேசியக் கல்விக் கொள்கை 2020 குறித்து முழுமையான விவாதம் நடத்தும்வரை அதன் நடைமுறைச் செயல்பாடுகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைக்க வேண்டும்.

நோய்த்தொற்று அதன் விளைவான ஊரடங்கு, ஒரு கல்வியாண்டு முழுவதும் முழுமையான கற்றல் செயல்பாடு நிகழ வாய்ப்பு இல்லாத சூழலை உருவாக்கி உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு, மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் இந்தக் காலகட்டத்தில் தேசியத் தேர்வு முகமை வெளியிட்டுள்ள நீட் அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது."

நீட் தேர்வு மையம்

Also Read: `நாங்க இனி டாக்டர் ஆகவே முடியாதா?!' - நீட் சிதைத்திடாத ஒரு தலைமுறையின் கேள்வி

இவ்வாறு தேசியத் தேர்வு முகமையின் அறிவிப்பு குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான நீட் நுழைவுத்தேர்வு தமிழ் உள்ளிட்ட 11 மொழிகளில் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறும் என்று தேசியத் தேர்வு முகைமை அறிவித்துள்ளது.


source https://www.vikatan.com/government-and-politics/education/neet-exam-for-nursing-and-life-sciences-stirs-debate

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக