Ad

ஞாயிறு, 14 மார்ச், 2021

விளவங்கோட்டில் இருந்து விலக்கப்படும் விஜயதரணி?போராட்டத்தை தாண்டிய பழிவாங்கும் படலம்!

விளவங்கோடு சிட்டிங் எம்.எல்.ஏ விஜயதரணிக்கு மீண்டும் சீட் வழங்கக்கூடாது என சென்னை சத்தியமூர்த்தி பவனிலும், குளச்சல் சிட்டிங் எம்.எல்.ஏ பிரின்சுக்கு சீட் கொடுக்கக்கூடாது என்று நாகர்கோவில் காங்கிரஸ் அலுவலகத்திலும் நிர்வாகிகள் நேற்று இரவு போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்த காங்கிரஸ் தலைமை, சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் உள்ள விளவங்கோடு, குளச்சல் உள்ளிட்ட நான்கு தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது. ஏற்கனவே இரண்டுமுறை எம்.எல்.ஏ-வாக இருந்த விஜயதரணி மற்றும் பிரின்ஸ் ஆகியோருக்கு இந்த முறை சீட்டுக்கு வாய்ப்பு இல்லை எனவும், அதனால்தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிள்ளியூர் சிட்டிங் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாருக்கு சீட் அறிவித்த தலைமை மற்ற இரண்டு தொகுதிகளிலும் வேட்பாளர் அறிவிப்பதில் தாமதபடுத்துகிறது என்கிறார்கள் குமரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர்.

நேற்று ஜூம் மீட்டிங்கில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதிகளில் சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு சீட் வழங்க கூறியதாகவும் போராட்டம் காரணமாக குளச்சல், கிள்ளியூர் தொகுதிகளில் வேட்பாளர் அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் கட்சிநிர்வாகிகள் சொல்கிறார்கள்.

பிரின்ஸ் எம்.எல்.ஏ.

இதுகுறித்து கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், "கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மறைந்த ஹெச்.வசந்தகுமார் போட்டியிட்டார். சுமார் இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். ஹெச். வசந்தகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து அவருக்காக பிரச்சாரத்தில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தார் விஜயதரணி. டெல்லியில் இருந்து முக்கியமான ஒருசில தலைவர்கள் வந்த சமயத்தில் சில மணி நேரம் மட்டுமே தலைகாட்டிச்சென்றார் விஜயதரணி. விஜயதரணிக்கு அப்போது எம்.பி சீட் வழங்கவில்லை என்ற கோபத்தில் இப்படி நடந்துகொண்டார்.

அதுபோல எம்.பி சீட் கேட்ட குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ பிரின்ஸ், வசந்தகுமாருடன் அனைத்து தேர்தல் வேலைகளிலுமே ஈடுபட்டார். ஆனால் வசந்தகுமாருக்கு எதிராக உள்ளடி வேலைகளை செய்துவந்தார். அப்போது குமரி மாவட்டத்தில் முகாமிட்டு தேர்தல் பணிகளை முடுக்கிவிட்ட கே.எஸ்.அழகிரி மற்றும் மேலிடபார்வையாளர் சஞ்சைதத் ஆகியோர் இதை கண்கூடாக கண்டு கோபமடைந்தனர். கட்சிக்கு பயன்படாத விஜயதரணிக்கும், பிரின்சுக்கும் வரும் சட்டசபை தேர்தலில் சீட் கிடையாது என அப்போதே மாநில தலைவரும், மேலிடபார்வையாளரும் முடிவு செய்துவிட்டனர். அதனால்தான் வேட்பாளர் அறிவிக்கும் சமயத்தில் சிலரின் ஆலோசனைப்படி போராட்டம் நடக்கிறது.

நாகர்கோவிலில் காங்கிரஸார் நடத்திய போராட்டம்

ஹெச்.வசந்தகுமார் மறைந்ததால் பழைய விஷயங்களை காங்கிரஸ் தலைமை மறந்திருக்கும் என நினைத்தனர். ஆனால், தக்க சமயத்தில் காங்கிரஸ் தலைமை பழைய செயல்பாடுகளுக்கான பலனை வழங்குகிறது" என்றார்.

விளவங்கோடு தொகுதியில் வேட்பாளர் லிஸ்டில் சாமுவேல் ஜார்ஜ் பெயர் பலமாக அடிபடுகிறது. குளச்சல் தொகுதியில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் ராபர்ட் புரூஸ், மீனவரணி மாநில தலைவர் சபீன் ஆகியோர் பெயர்கள் தீவிர பரிசீலனையில் இருப்பதாக சொல்கிறார். ஆனாலும், தலைமையை சமாதானம் செய்து மீண்டும் சீட் பெறும் முயற்சியில் விஜயதரணியும், பிரின்சும் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து விஜயதரணி கூறுகையில், "போராட்டம் நடத்தினால் சீட் வழங்கமாட்டார்கள் என்றால் ஒவ்வொரு தொகுதியிலும் நூறுபேர் போராட்டம் நடத்துவார்களே. நான் எதிர்கட்சி எம்.எல்.ஏ-வாக இருந்தபோதும் ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் என் தொகுதியில் வளர்ச்சிப்பணி மேற்கொண்டுள்ளேன். போராட்டம் நடத்தியவர்களில் ஒருசிலரை தவிர மற்றவர்கள் கட்சிகாரர்களே அல்ல. அவர்கள் யார் என்றே தெரியவில்லை" என்றார்.

குளச்சல் எம்.எல்.ஏ பிரின்ஸிடம் பேசினோம், "குளச்சலில் இளைஞர் காங்கிரஸை சேர்ந்தவர்கள் சீட்டுகொடுக்க வேண்டும் என கேட்கிறார்கள். எப்படியும் எனக்கு சீட் அறிவித்துவிடுவார்கள்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/vijayadharni

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக