Ad

செவ்வாய், 2 மார்ச், 2021

பாடம் கற்ற ஜெயலலிதா.. பரிதாப வைகோ.. பலே ராமதாஸ்! - அரசியல் அப்போ அப்படி - 4

தமிழக அரசியலைப் பொறுத்தமட்டில், ஒவ்வொரு தேர்தலுமே வித விதமான திருப்பங்களைக் கொண்டதுதான். என்றாலும், 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் அதில் கொஞ்சம் ஸ்பெஷல். வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தி.மு.க கூட்டணி வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக இப்போது எப்படி ஆருடம் சொல்லப்படுகிறதோ, அப்போது இதை விட பல மடங்கு வாய்ப்பு இருப்பதாக ஆருடம் சொல்லப்பட்டது.

ஆனால், அந்த தேர்தல் தி.மு.க கூட்டணிக்கான அமோக வெற்றியை மட்டும் பதிவு செய்யாமல், வேறு பல அத்தியாயங்களையும் எழுதிவிட்டுச் சென்றது.

தலை தூக்கிய சர்வாதிகாரம்... தாண்டவமாடிய ஊழல்கள்!

1991 - 1996 வரையிலான ஜெயலலிதாவின் அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், தலைதூக்கிய சர்வாதிகாரம், ஆட்சி அதிகாரத்தில் சசிகலா குடும்பத்தினரின் தலையீடுகள், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு நடைபெற்ற ஆடம்பரமான திருமணம் போன்றவை, மக்களிடையே அ.தி.மு.க ஆட்சிக்கு எதிராக கடுமையான எதிர்ப்பலையை ஏற்படுத்தி இருந்தது.

ஆட்சி, அதிகாரத்தை பயன்படுத்தி முதல்வர், அமைச்சர்கள் என சகல தரப்பினரும் வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்தது தொடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. சசிகலா குடும்பத்தினர் தமிழகத்தின் பல இடங்களிலும் முக்கியமான இடங்களை, உரிமையாளர்களை மிரட்டி அடிமாட்டு விலைக்கு வாங்கிக் குவித்ததாக புகார்கள் எழுந்தன.

இசையமைப்பாளர் கங்கை அமரனுக்குச் சொந்தமான பையனூர் பங்களாவை எழுதி வாங்கியது, டான்சி இடத்தை அபகரித்தது, கொடைக்கானலில் அனுமதியின்றி ஏழு மாடி கட்டுவதற்குப் பிளசன்ட் ஸ்டே ஹோட்டலுக்கு அனுமதி கொடுத்தது, ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீசியது, சென்னை மயிலாப்பூரில் இருந்த “அமிர்தாஞ்சன் நிறுவன” இல்லத்தை ஆட்டையைப் போட முயன்றது, பாலு ஜூவல்லர்ஸ் உரிமையாளர் தற்கொலை விவகாரம் என அ.தி.மு.க ஆட்சிக்கு எதிராக அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. மக்களிடையே எங்கு பார்த்தாலும் இதுவே பேசு பொருளாக இருந்தது.

ரஜினிகாந்த்

இதுதவிர கொடியங்குளம் கலவரம், பல இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் போன்றவையும் அ.தி.மு.க ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி இருந்தன. இயக்குநர் மணிரத்னம் வீட்டு முன்னர் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை மனதில் கொண்டு, பாட்ஷா வெற்றி விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் தலைதூக்கி விட்டதாக குற்றம் சாட்டினார். அதுவும் ஜெயலலிதாவை மேடையில் வைத்துக்கொண்டே. இது ஜெயலலிதாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

வைகோவின் மூன்றாவது அணி முயற்சி!

இந்தச் சூழலில்தான் வைகோ, தி.மு.க-விலிருந்து பிரிந்து ம.தி.மு.க-வைத் தொடங்கி இருந்தார். ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களின் ஊழல்களுக்கு எதிராக, தமிழகம் முழுவதும் அவர் மேற்கொண்ட நடை பயண பிரசாரத்துக்கு, மக்களிடையே நல்ல வரவேற்பு. மேலும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வுக்கு மாற்றாக ஒரு மூன்றாவது அணி வைகோ தலைமையில் உருவாகலாம் என்ற அளவுக்கு ஒரு எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருந்தது. ஆனால், 1996 ல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் நிலைமை ரொம்பவே மாறிவிட்டது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மரணத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும், தனது தேர்தல் வெற்றிக்கு ராஜிவ் மரணம் காரணமல்ல என்றும் ஜெயலலிதா பேசியது தமிழக காங்கிரஸாரை ரொம்பவே கொந்தளிக்க வைத்தது. இதனால், அ.தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி முறியும் நிலை உருவானது. அத்துடன் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி உருவாகலாம் என்ற பேச்சும் பரவலாக எழுந்தது. ஆனால் தமிழகத்தில் நடப்பது எதுவும் தெரியாமல், நாடாளுமன்றத்துக்கும் சேர்த்து தேர்தல் நடைபெறுவதால், மீண்டும் அ.தி.மு.க உடன் கூட்டணி என்ற அறிவிப்பை வெளியிட்டார் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ்.

ரஜினி கொடுத்த வாய்ஸ்!

இந்த அறிவிப்பு தமிழக காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சி உடைந்து ஜி.கே. மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சி (தமாகா) உதயமானது. கூடவே மறைந்த பத்திரிகையாளர் சோ மற்றும் நடிகர் ரஜினி ஆகியோரின் முயற்சியில் தி.மு.க - தமாகா கூட்டணி உருவானது. அத்துடன், "ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அந்த ஆண்டவனால் கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது" என ரஜினியும் இந்த கூட்டணிக்கு ஆதரவாக 'வாய்ஸ்' கொடுத்தார். இதுதான் ரஜினி அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு பிள்ளையார் சுழி போட்டது.

ரஜினி கொடுத்த இந்த வாய்ஸால், ஜெயலலிதா கடுப்பின் உச்சத்துக்கே போனார். போதாதற்கு அப்போது ஒளிபரப்பான சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் வீடியோ பேட்டி வேறு அ.தி.மு.க ஆட்சிக்கு எதிரான எண்ணத்தை மக்களிடையே உருவாக்கியது. இதில் அப்போது தொடங்கப்பட்டிருந்த சன் டி.வி, தி.மு.க பிரசாரத்துக்கு ரொம்பவே கைகொடுத்தது.

பா.ம.க உருவாக்கிய கூட்டணி!

இவ்வாறு அ.தி.மு.க ஆட்சிக்கு எதிராக உருவான எதிர்ப்பலை, தி.மு.க - த.மா.கா கூட்டணிக்கு அமோக வெற்றி வாய்ப்பை உருவாக்கியது. இந்த எதிர்ப்பலையில், "தி.மு.க - அ.தி.மு.க-வுக்கு மாற்று ம.தி.மு.க தான்" என்ற வைகோவின் முழக்கம் எடுபடாமல் போனது. தி.மு.க கூட்டணியில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்பட்ட பா.ம.க, ம.தி.மு.க உடன் கூட்டணி அமைக்க முயன்றது. இருப்பினும் போட்டியிடும் இடங்களைத் தீர்மானிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. கூடவே, 'ம.தி.மு.க - பா.ம.க கூட்டணி' என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார் ராமதாஸ். ஆனால் 'ம.தி.மு.க கூட்டணி' என்றுதான் சொல்ல முடியும் என வைகோ சொல்லவே, பேச்சுவார்த்தை முறிந்தது.

அதே சமயம், வாழப்பாடி ராமமூர்த்தியுடன் இணைந்து சமூக நீதிக் கூட்டணியை உருவாக்கியது பா.ம.க. இதில், பா.ம.க 116 தொகுதிகளிலும், வாழப்பாடி ராமமூர்த்தியின் அகில இந்திய திவாரி காங்கிரஸ் 46 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

ம.தி.மு.க உடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், ஜனதா தளமும் கூட்டணி அமைத்தன. 'மக்கள் ஜனநாயகக் கூட்டணி' என்ற பெயரில் 177 இடங்களில் ம.தி.மு.க-வும், மார்க்சிஸ்ட் 40 இடங்களிலும், ஜனதா தளம் 16 இடங்களிலும் போட்டியிட்டன.

தி.மு.க-வுக்கு கிடைத்த திருப்புமுனை வெற்றி

அ.தி.மு.க கூட்டணியில் குமரி அனந்தன் தலைமையிலான காங்கிரஸ் மட்டுமே இடம் பெற்றது. அ.தி.மு.க 168 தொகுதிகளிலும், காங்கிரஸ் 64 தொகுதிகளிலும் போட்டியிட்டன. தி.மு.க கூட்டணியில், தி.மு.க 182 இடங்களிலும், த.மா.கா 40 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் 11 தொகுதிகளிலும், ஃபார்வர்ட் பிளாக் 1 தொகுதியிலும் போட்டியிட்டன. இப்படி பலமுனைப் போட்டி இருந்தும் கூட, எதிர்பார்த்தபடியே தி.மு.க 173 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சியான த.மா.கா 39 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 8 இடங்களிலும் வெற்றி பெற்றது. நாடாளுமன்ற தேர்தலில், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளையும் தி.மு.க கூட்டணி அள்ளியது.

கருணாநிதி

மீண்டும் நான்காவது முறையாக தமிழக முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்றார். அன்பழகன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட 32 பேர் அமைச்சர்களாயினர். ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின், பின்னர் நடந்த உள்ளாட்சி தேர்தலில் சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பாடம் புகட்டிய பர்கூர் மக்கள்!

ஜெயலலிதா - சசிகலா

168 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க, 4 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று, ஆட்சியை இழந்தது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா அடைந்த தோல்வி, அவருக்கு மிகுந்த அவமானத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இது ஒன்றே, அந்த கட்சிக்கு எதிரான மக்களின் மனநிலை என்னவாக இருந்தது என்பதைப் படம் பிடித்துக் காட்டியது. அதேபோல் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அனைவரும் தோல்வியடைந்தனர். அ.தி.மு.க-வில் திருநாவுக்கரசு, ராசிபுரம் சுந்தரம், சங்கரன்கோவில் கருப்பசாமி, ஸ்ரீவில்லிபுத்தூரில் தாமரைக்கனி ஆகியோர் மட்டும் வெற்றி பெற்றனர்.

தப்பிப் பிழைத்த பா.ம.க... தனித்து விடப்பட்ட ம.தி.மு.க

அதே சமயம், பா.ம.கவுக்கு 4 இடங்கள் கிடைத்தன. அது அப்போது பா.ம.கவுக்கு பெரிய வெற்றிதான். காரணம், அந்தத் தேர்தலில்தான் பா.ம.க முதல் முறையாக கணிசமான வாக்குகளைப் பெற்று, தமிழக அரசியலில் தான் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்பதை நிரூபித்தது. ஆனால் மூன்றாவது அணி அமைத்து போட்டியிட்ட ம.தி.மு.க ஒரு இடத்தில் கூட வெற்றி பெறமுடியவில்லை. விளாத்திகுளத்தில் போட்டியிட்ட வைகோ தோல்வியடைந்தார். மார்க்சிஸ்ட், ஜனதாதளம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் கிடைத்தது.

வெற்றி பெற்ற பா.ஜ.க... வென்று காட்டிய கிருஷ்ணசாமி

டாக்டர் கிருஷ்ணசாமி

இவ்வளவு எதிர்ப்பலையிலும், பா.ஜ.கவும், டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கும் தலா ஒரு இடம் கிடைத்தது பலரையும் புருவம் உயர்த்த வைத்தது. பா.ஜ.க சார்பில் பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட்ட வேலாயுதம், வெற்றி பெற்று முதல் பா.ஜ.க எம்.எல்.ஏவாக சட்டசபைக்குள் நுழைந்தார்.

அதேபோன்று கிருஷ்ணசாமி ஓட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றிக்கொடி நாட்டினார். அந்தத் தேர்தலில் போட்டியிட்ட சிறிய கட்சிகளில் கிட்டத்தட்ட எல்லோருக்குமே இடம் கிடைத்தது. ஆனால் வைகோவின் ம.தி.மு.க மட்டுமே மக்களால் நிராகரிக்கப்பட்டது பரிதாபமானதாகவே போனது!

பகுதி 3 படிக்க..

Also Read: கருணாநிதி Vs ஆர்.வி: தீராத கோபங்கள்... தீர்க்கப்பட்ட கணக்குகள்! அரசியல் அப்போ அப்படி - 3



source https://www.vikatan.com/news/politics/tamilnadu-political-flash-back-about-1996-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக